[X] Close

அசாத்திய டைரக்டர்... அசால்ட் நடிகர்! டபுள் சவாரியில் அசத்திய மணிவண்ணன்!


manivannan

இயக்குநர், நடிகர் மணிவண்ணன்

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Jul, 2018 11:31 am
  • அ+ அ-

தொழில் கற்றுக்கொண்டதை செம்மையாகச் செய்வதின் மூலமே உணர்த்தமுடியும். அப்படி உணர்த்துவதால், இரண்டு விஷயங்கள். ஒன்று... தொழிலை யாரிடம் கற்றுக்கொண்டோமோ அவர்களுக்கு நல்லபெயர் வாங்கித் தருவது. அடுத்தது... இவன் தொழில்காரன் என்று எல்லோரிடமும் பெயரெடுப்பது! அப்படி குருவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தவர்... தொழில்காரன் என்று பேரெடுத்தவர்... இயக்குநர் மணிவண்ணன்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார். அவரை விட்டு வெளியே வந்ததும் தானே படத்தை இயக்கினார். அவர் இயக்கிய அந்தப் படம்... எல்லோருக்கும் பிடித்த படமாக அமைந்தது. எல்லோரும் பார்க்கும் படமாக இருந்தது. எல்லோரும் கொண்டாடுகிற சினிமாவாக இருந்தது. அந்தப் படம் கோபுரங்கள் சாய்வதில்லை.

சுஹாசினியின் நடிப்பாற்றலை வெளிக்காட்டிய படங்களில், முக்கியமான படம் இது. மணிவண்ணனின் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தையும் அருக்காணி கதாபாத்திரத்தையும் அவ்வளவு சீக்கிரத்தில் எவரும் மறந்துவிடமுடியாது.

ஒரு சிலர் குடும்பப்பாங்கான படங்களை எடுப்பார்கள். இன்னும் சிலர் காதல் படங்களாக எடுப்பார்கள். சிலர் ஆக்‌ஷன் படம், த்ரில்லர் படம் என்றெல்லாம் பிரித்து மேய்வார்கள். மணிவண்ணன், எப்படிப்பட்ட படங்களை எடுப்பார்? அவர், எப்படிப்பட்ட படங்களையெல்லாம் எடுக்கவில்லை? ஒரு வட்டமோ சதுரமோ போட்டுக்கொண்டு, அதற்குள் படமெடுப்பவரல்ல மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை என்று குடும்பப்படமும் எடுத்தார். துள்ளத்துடிக்க இளமைக்காலங்கள் எனும் காதல் படத்தைத் தந்தும் ஹிட்டடித்தார். க்ரைம் கலந்த த்ரில்லர் படமாக, நூறாவது நாள், விடிஞ்சா கல்யாணம் படத்தையும் எடுத்தார்.  24 மணி நேரம் மாதிரி ஒருபடம், கலகலவென சின்னதம்பி பெரியதம்பி மாதிரியான ஒருபடம், அந்தப் பக்கம் பாலைவன ரோஜாக்கள் மாதிரி சீரியஸ் அரசியல், இந்தப் பக்கம் அமாவாசையை துணைக்கு வைத்துக்கொண்டு, அமைதிப்படை என்று ரகளை பண்ணினார்.

இயக்கிக் கொண்டிருந்த மணிவண்ணனை, இயக்கம் சொல்லிக் கொடுத்தவரே நடிக்கவும் அழைத்து, அறிமுகப்படுத்தினார். கொடி பறக்குது படத்தில் வில்லனாக அறிமுகமானார். பிறகு வில்லன், காமெடியன், குணச்சித்திர கேரக்டர் என ஏற்காத வேடமில்லை எனும் அளவுக்கு ஏராளமான படங்களில் நடித்தார்.

தன் சிஷ்யர் சுந்தர்.சி. படங்களில், மணிவண்ணனுக்கு என ஒரு கேரக்டர் ரெடியாக இருக்கும். உள்ளத்தை அள்ளித்தா உட்பட ஏராளமான படங்களைச் சொல்லலாம். அதேபோல் அகத்தியனின் கோகுலத்தில் சீதையின் அப்பா கதாபாத்திரம் அத்தனை நேர்த்தியாக ரசித்துப் பண்ணியிருப்பார் மணிவண்ணன். முதல்வன் படத்தின் கேரக்டரும் காதல்கோட்டையின் கதாபாத்திரமும் அமைதிப்படை அரசியல்வாதியும் அமர்க்களம் பண்ணுவார்கள்.

இன்றைக்கு நம்மிடம் கைத்தட்டல் வாங்குகிற சத்யராஜை, ஆரம்பகட்டங்களில் நம்மிடம் இருந்து கைத்தட்டல் வாங்கவைத்த பெருமை, மணிவண்ணனுக்கே உரித்தானது. சத்யாராஜுக்குள் இருக்கிற அந்த நக்கல், நையாண்டித்தனத்தை வெளிக்கொண்டு வந்து, அந்த டயலாக் டெலிவரியைச் சொல்லவைத்து, மிகப்பெரிய உயரத்திற்கு சத்யராஜை கொண்டு சென்றார். அதேபோல், மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி என மூவர் கூட்டணி அமைந்தால், அங்கே, சிரிப்பு, கூத்தாடும். கோலாகலம் பண்ணும். அந்த அலப்பறையில் தியேட்டரே டரியலாகும்.

மணிவண்ணன் ஏகப்பட்ட படங்கள் இயக்கியிருக்கிறார். எல்லாப் படமும் முதலுக்கு மோசமில்லை ரகம்தான். இன்னும் சொல்லப்போனால், குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் தரும் படங்களைப் பண்ணுவதில், மணிவண்ணன் அந்தக்கால கே.எஸ்.ரவிக்குமார்.  வசனங்கள் ஷார்ப்பாக இருக்கும். அதிலும் இவரின் டயலாக் டெலிவரி... வார்த்தைக்கு வார்த்தை கைத்தட்டல் வாங்கும்.  

நல்ல படங்களைத் தரும் மணிவண்ணனையும் நல்ல தேர்ந்த நடிப்பை வழங்கும் மணிவண்ணனையும் அவ்வளவு சீக்கிரத்தில் இழந்தது தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம். அந்த மகா திறமைசாலி மணிவண்ணனுக்கு, இன்று (31.7.18) பிறந்தநாள்.

இந்தநாளில்... மணிவண்ணனைப் போற்றுவோம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close