[X] Close

பூவே பூச்சூடவா - அப்பவே அப்படி கதை!


poove-poochudavaa-appave-appadi-kadhai

பாட்டி பத்மினி - பேத்தி நதியா

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Jul, 2018 14:48 pm
  • அ+ அ-

உறவுகள் எப்போதுமே உன்னதமானவைதான். பந்தம் எப்போதுமே நெகிழ்ச்சியூட்டக்கூடியதுதான். அன்புக்கு மிஞ்சியது உலகில் வேறெதுவுமில்லை என்பது சத்தியவார்த்தை. அப்பா - மகன், அப்பா - மகள், அம்மா - மகன், அம்மா - மகள், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி என்றெல்லாம் எத்தனையோ உறவுகளை, சினிமா சொல்லி, நம்மைச் சிலிர்க்கவைத்திருக்கிறது. ஒரு பாட்டிக்கும் பேத்திக்குமான உறவுநெகிழ்வை, பந்த மகிழ்வை, பாச ஈர்ப்பை, அன்புப் பிணைப்பை சொல்லிய படம் என்றால்... நாளை பாட்டியாகப் போகும் பேத்திகள் கூட சொல்லிவிடுவார்கள்... பூவே பூச்சூடவா என்று!

பெண்களை முதன்மையாகக் கொண்டு படமெடுத்தால், அது பெருமளவு வியாபார ரீதியாக ஓடாது என்கிற சந்தேகம் உண்டு. ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்ளவே நாயகிகள் பாத்திரத்தைப் பயன்படுத்திக்கொண்ட சினிமா உலகம் இது. அப்பேர்ப்பட்ட திரையுலகில், பாட்டி - பேத்தி உறவையும் அந்த நாயகிகளையும் முதன்மைப்படுத்த... தில் வேண்டும். உறுதியான, உயிரோட்டமான கதை வேண்டும். அப்படியொரு கதையைப் பார்சல் கட்டிக்கொண்டு, கேரளாவில் இருந்து தமிழகம் வந்து, இங்கே நமக்கு பந்தி பரிமாறினார் பாசில்.

1985ம் ஆண்டு வெளியான படம் பூவே பூச்சுடவா. 33 வருடங்களுக்கு வைத்த விருந்தின் ருசி, இன்றைக்கும் இருக்கிறது நம் மனதில்!

அழகிய கிராமத்தில் தனியொருத்தியாய் இருக்கிறாள் அந்தப் பாட்டி பூங்காவனத்தம்மாள். வாண்டுகள், பாட்டி வீட்டின் அழைப்புமணியை அடித்துவிட்டு ஓடுகிறார்கள். வீட்டைப் பூட்டிவிட்டு தெருவில் இறங்கி கோயில் நோக்கி நடக்கிறாள். இவளைப் பார்த்துவிட்டு ஊர்க்காரர்கள், வேண்டுமென்றே தும்முகிறார்கள். அப்படித் தும்மித்தும்மியே, ஒருகட்டத்தில் பாட்டியம்மாளைப் பார்த்ததுமே மூக்கு தும்மத்தொடங்குகிறது. தும்மி வெறுப்பேற்றுபவர்களைக் கண்டு பம்மிப் பதுங்காமல், எல்லோரிடம் சீற்றத்தையும் முனகலையும் தந்துசெல்கிறாள் பாட்டியம்மாள்.

அப்போது அந்த ஊருக்கு பஸ்சில் இருந்து இறங்கி, பாட்டியம்மாள் வீட்டு காலிங்பெல் அழுத்துகிறாள் அந்த இளம்பெண். அதிர்ந்து பார்க்கிறாள் பாட்டி. ‘என்னைத் தெரியலியா. நான்தான் உன் பேத்தி. பேரு சுந்தரி. உன் மகளோட பொண்ணு’ என்று சகஜமாகவும் செளஜன்யமாகவும் உள்ளே நுழைகிறாள். ஆனால் பேத்தியின் வருகையை பாட்டி ரசிக்கவில்லை. கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துத் துரத்தி அனுப்புகிறாள்.

18 வருட வீம்பு. 18 வருடமாக வரவில்லையே எனும் ஆங்காரம். மாப்பிள்ளை மீது இருக்கும் கோபத்தை, பேத்தியின் மீது காட்டுகிற ஆவேசம். ‘இத்தனை நாள் வராதவ வந்திருக்கே. அப்பாடா... வந்துட்டாடான்னு சந்தோஷப்படுறதுக்குள்ளே நீ என்னை விட்டுப் போயிட்டீன்னா...’ என்கிற சந்தேகக் குழப்பம். குழப்பக் கலக்கம். ‘உன்னை விட்டுப் போகமாட்டேன் பாட்டிம்மா. சாகறவரைக்கும் உன் கூடத்தான் இருப்பேன். இது சத்தியம்’ என்று பேத்தி சொன்னதும் அங்கே பூக்கின்றன சந்தோஷப் பூக்கள். குதூகல மலர்கள்.

அவ்வளவுதான். பாட்டி குழந்தையாகிப்போகிறாள். பேத்தி அவளின் அன்னையாகவே ஆகிப்போகிறாள். தெருவில் போகிறவருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டுக்கூப்பிட்டு பேத்தியை அறிமுகம் செய்கிறாள். சர்ச் ஃபாதரிடம் அறிமுகப்படுத்தி, இது யாருன்னு தெரியுதா என்று பாட்டி கேட்க, ‘இது சுந்தரம் பொண்ணுதானே’ என்று கேட்டதும் சுள்ளென்று கோபமாகிறாள் பாட்டி. ‘ஏன் அலமேலு பொண்ணுன்னு சொல்லவேண்டியதுதானே’ என்று விருட்டென்று செல்வார்.  

பாட்டிக்கு டார்ச்சர் கொடுத்த வாண்டுகளை நட்பாக்கிக் கொண்டு அடிக்கிற லூட்டி, பாட்டிக்குப் பிடித்த மஞ்சள் வண்ணத்தில் திரைச்சீலை மாட்டி, சுடிதாரும் போட்டுக்கொள்கிற நேசம், பக்கத்துவீட்டுப் பையனின் அதிக சவுண்ட் அதகளத்தை, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலை, குழாய் கிராமபோன் ரிக்கார்டரில் போட்டுக் கொளுத்தி, வெளுத்து பம்மவைக்கிற சூரத்தனம் என்று பேத்தியின் துறுதுறுப்பிலும் சுறுசுறுப்பிலும் கவலையெல்லாம் மறக்கிறாள் பாட்டி.

குயிலைப் போல சுதந்திரமாக, சிட்டுக்குருவியைப் போல் விட்டுவிடுதலையாகி, பாட்டியும் பேத்தியுமாக சந்தோஷமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எதிர்வீட்டுப் பையனுக்கு ஒரு ஆத்திரம். எல்லாவற்றிலும் இந்தப் பெண்ணிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்று தீபாவளிக்காகவும் பிறந்தநாளுக்காகவும் பட்டாசு தர, கையில் வைத்து விளையாடுகிற பட்டாசு ஐட்டம் வெடிக்க... பதறிப்போகிறாள் பாட்டி.

பிறகொரு சமயத்தில், எதிர்வீட்டுப் பையனான எஸ்.வி.சேகரைப் பார்க்க நண்பன் ரவீந்தர் வர... அவர் சுந்தரியைப் பார்க்க, அப்போது சுந்தரியைப் பற்றிய விஷயங்களை நண்பனிடம் சொல்ல... நண்பன் மட்டுமின்றி நாமும் துடித்துதான் போகிறோம். மனம் கனத்துதான் போகிறோம்.

சுந்தரிக்கு ஒரு விபத்து. அந்த விபத்தில் மூளையில் சிக்கல். ஆபரேஷன் செய்யவேண்டும். செய்தால் பிழைப்பாள் என்பது உறுதியில்லை. ஆனால் ஆபரேஷன் ஓர் முயற்சி. ஆனால் ஆபரேஷன் செய்து கொள்ளாமல், அழுதுகொண்டே இருக்கும் அப்பாவையும் நண்பர்களையும் விட்டுவிட்டு, இங்கே பாட்டி வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.

இந்தநிலையில், அப்பாவுக்கு மகள் இருக்குமிடம் தெரியவர, அவளைப் பார்க்கவும் அழைத்துச் செல்லவும் வருகிறார். வந்தவரை, எப்போதும் அவர் மீது வன்மம் கொண்ட பாட்டி, திட்டி துரத்திவிடுகிறார். தேவாலய ஃபாதரிடம் சென்று விஷயம் சொல்ல, அதிர்ந்து போன ஃபாதர், பள்ளித்தலைமை ஆசிரியரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு, பாட்டியம்மாள் பூங்காவனத்தம்மாளிடம் சொல்ல முற்படும் தருணத்தில்... பேத்திக்கு உண்டான பயங்கரத்தை அறிந்துகொண்ட பாட்டி, அவளே தேவாலயம் வருகிறாள். அழைத்துப் போகச் சொல்லுகிறார்.

பேத்திக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து ஊட்டிவிடுகிறார். மயங்கித் தூங்கும் பேத்தியை தூக்கிக்கொண்டு, அப்பா செல்கிறார்.

அங்கே... மீண்டும் தன் பேத்தி, தன்னைத்தேடி வருவாள் எனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் ஆசையுடனும் அழைப்புமணியை, காலிங்பெல்லை மீண்டும் பொருத்துகிறாள். படம் நிறைவுறுகிறது.

ஒரு சிறுகதையின் அழகியலுடன் அன்பை ஆழமாகச் சொன்னதில்தான் பூவே பூச்சுடவா, வெற்றிப்பூவை சூடிக்கொண்டது. பாட்டியாக நாட்டியப்பேரொளி பத்மினி. பேத்தி சுந்தரியாக தமிழுக்கு அறிமுகமான நதியாவை, எல்லோரும் இங்கே தங்கள் வீட்டுப் பெண்ணாகவே வரித்துக்கொண்டார்கள். எதிர்வீட்டுப் பையனாக எஸ்.வி.சேகர். அப்பா ஜெய்சங்கர். ஃபாதர் கே.கே.செளந்தர். தலைமை ஆசிரியர் வி.கே.ராமசாமி. ஒருகையின் விரல்களுக்குள் எண்ணிவிடுகிற கதாபாத்திரங்கள். ஆனால் பாட்டி - பேத்தி என்று இரண்டு விரல் காட்டிச் சொல்லுகிற அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, செஞ்சுரி அடித்து விக்டரி பெற்றிருப்பார் இயக்குநர் பாசில். மூன்றாவதாக, அந்த காலிங்பெல்... ஒரு கதாபாத்திரமாகவே மனசுக்குள் மணியடிக்கும்!

இந்த மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால், எதிரில் இருப்பவரின் டிரஸ்ஸே தெரியாது என்று சேகரைக் கலாய்த்து பயமுறுத்துவதும், அதனால் அவர் பம்மிப்பதுங்குவதும் ஏக கலாட்டா. அந்த மஞ்சள் செடியை எப்போதோ கேட்க, அதைக் கொடுக்கும் தருணம் நெகிழ வைக்கும். வி.கே.ராமசாமியைப் பார்த்து கண்ணடிப்பது கலக்கல். வி.கே.ஆருக்கு எல்லாம் தெரிந்து இறுக்கமாக அவர் நிற்க, அவரைப் பார்த்து நதியா கண்ணடிக்க, நம் கண் கலங்கிப்போகும்.

பூங்காவனத்தம்மாளாகவே உலா வந்திருப்பார் பத்மினி. அந்தப் புடவைக்கட்டும் தலைப்பைப் போர்த்திக்கொள்கிற பாங்கும், மூக்குக்கண்ணாடி வழியே பார்க்கிற கேள்விப்பார்வையும் வார்த்தைகளில் எள்ளும்கொள்ளும் வெடிக்கிற தோரணையும் நம்ம பாட்டி இப்படியா... இப்படியொரு பாட்டி நமக்கு இருக்கக்கூடாதா என்று எல்லோரையும் ஏங்கவைத்துவிடுவார்.

பேத்தி மட்டும் என்னவாம். பாந்தமான முகம். பாசத்துக்கு ஏங்கும் கண்கள். அந்தக்கண்களின் ஓரத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் துடுக்குத்தனம், கள்ளமில்லாச்சிரிப்பு, மொத்த சோகத்தையும் காணடித்துவிடுகிற மனசு... என நதியா, நடிப்பில் பின்னியெடுத்து, உலகின் பாட்டிகளுக்கெல்லாம் தன் பேத்தி வளர்ந்தால் இப்படித்தான் இருப்பாளோ என நினைக்கச் செய்துவிடுவார். அபாரமான நடிப்பு.

மஞ்சள் நிற விஷயம், விளக்கேற்றும் தருணத்தில், பார்க்கவே பார்த்திடாத அம்மாவின் போட்டோவைத் தரும் வேளையில், அங்கே பாட்டியும்பேத்தியுமாக மகிழ்ந்து நெகிழ்ந்து உருகிப் போகிற போது... தொடங்குமே அந்தப் பாடல். நாம் கேட்டுக்கரைந்து போய்விடுவோம்!

ஆனந்தக்குட்டன், கோகுலகிருஷ்ணா என பாசிலின் டீம், வழக்கம்போல், படத்தை கவிதையாக்க கைகொடுத்திருப்பார்கள்.

படத்தில் நாயகனே இல்லை. ஆனாலும் அந்தக் குறைகளையெல்லாம் போக்கி, உணர்வின் ஈரத்தை, மனதின் பாரத்தை, வாழ்வின் உன்னதத்தை, எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும், சம்பவங்கள் நிகழும் எனக் காத்திருந்து காத்திருந்து, தன் இசையால் கதையை வலுவாக்கியிருப்பார் இளையராஜா. இப்படியெல்லாம் ஒரு அழகியல் படம் கையில் கிடைத்தால், கரைந்து உருகி, மெய்ம்மறந்து இசையமைப்பவர் அல்லவா ராஜா. இங்கும் இப்படித்தான். இளையராஜா அப்படித்தான்! வைரமுத்துவும் முத்துமுத்தான பாடல் வரிகளால், கண்ணில் நீர் கோர்க்கச் செய்திருப்பார். 

சித்ராவின் அறிமுகப்படம். சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா... பாடலால்தான் சின்னக்குயில் சித்ரா என்றானார். ஜேசுதாஸின் குரலில் குழைந்து வருகிற பூவே பூச்சூடவா... எந்தன் நெஞ்சில் தாலாட்டவா எனும் பாடல், எப்போது கேட்டாலும் மனசு லேசாகும். லேசான மனசும் கனமாகும்! எல்லாப் பாடல்களும் அப்படித்தான். கேட்கும் போதெல்லாம் உள்ளே பூப்பூக்கச் செய்வார் இளையராஜா!

மூணு வாண்டுப் பசங்களும் எஸ்.வி.சேகரும் அவரின் அம்மா சுகுமாரியும் கூட மனதில் நின்றுவிடுகிறார்கள். எத்தனையோ படங்களில் தன் நடிப்பாலும் நடனத்தாலும் பிரமாதப்படுத்திய பத்மினிக்கு, இதுவொரு லைஃப்டைம் படம். அப்படியான படங்களில் ஒன்று! இயக்குநர் பாசில், எனும் மகா அன்பன், செதுக்கிச் செதுக்கிக் கொடுத்த பாசச்சிற்பம் இது.

அழைப்புமணி எனப்படும் காலிங்பெல்லை பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டோம் நாம். ஆனால், பூவே பூச்சூடவா பார்த்தவர்கள், அழைப்புமணிக்குப் பின்னே, ஏதோவொரு பாச வருகை வராதா, அன்பு உறவு அழுத்தாதா என்று ஏங்கிக்கொண்டிருக்குமோ... என்று நமக்குள் யோசனை ஓடும். ‘கடவுளே... அவங்க ஆசைப்பட்ட அந்த உறவு அவங்க வீட்டுக்கு வரணுமே...’ என்கிற பிரார்த்தனையும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ஏக்கமும் பேரன்பும்தான்... பூவேபூச்சூடவாவை வெள்ளிவிழாப் படமாக ஆக்கியது. பூங்காவனத்தம்மாளையும் சுந்தரியையும் யாரால்தான் மறக்கமுடியும், சொல்லுங்கள்!

முந்தைய அப்பவே அப்படி கதை கட்டுரைகளைப் படிக்க...

அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close