[X] Close

முள்ளை மலராக்கிய மகேந்திரனுக்கு பிறந்தநாள்!


mahendiran-birthday

இயக்குநர் மகேந்திரன் - இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Jul, 2018 14:20 pm
  • அ+ அ-

‘இப்படித்தான் படம் எடுக்கணும்’ என்று திட்டமிட்டுதான் எல்லோரும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் படமெடுத்திருப்பார்கள். ஆனால் ஆசைப்பட்ட படங்களை எடுக்காமலே போய்விடுகிற சூழல்தான், சினிமா உலகின் ஆச்சரியம். ஆனால், இப்படிதான் படம் எடுப்பேன் என்று வந்தவர், எடுத்த எல்லாப் படங்களுமே அப்படிப்பட்ட படம்தான். அவர் ஆசைப்பட்ட சினிமாதான் என்று இருப்பது ஆச்சரியம் மட்டும் அல்ல... அதிசயமும் கூட! அந்த அதிசய.. ஆனால் யதார்த்த இயக்குநர்... மகேந்திரன்!

ஆர்ப்பரிப்பது மட்டுமே அலையின் குணம் அல்ல. அமைதியாய், சலசலப்பே காட்டாமல், இரைச்சலே இல்லாமல் ஆனந்தமாக நம்மைத் தொட்டு விளையாடி, மனசின் அடிவரை சென்று ஈரமாக்குவதும் அலையின் அழகியல் பணி. மகேந்திரன் எனும் படைப்பாளி இரண்டாமவர். தரமான படங்களைக் கொடுத்த முதலாமவர்!

அலெக்சாண்டராக காரைக்குடி கண்டனூரில் பிறந்து வளர்ந்தவர், பின்னாளில் துக்ளக் பத்திரிகையில் வேலை பார்த்தார். நாடகங்கள் பக்கமும் கவனம் செலுத்தினார்.

இவரின் தனித்த எழுத்தாற்றல் கண்டு வியந்தவர்... எல்லோராலும் வியக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அப்போது எம்ஜிஆரின் கனவுப் படமாக, லட்சியப் படைப்பாக பொன்னியின் செல்வன் நாவல் உள்ளுக்குள் இருந்தது. அதைப் படமாக்குவதற்கான பூர்வாங்க வேலைகளை மகேந்திரனிடம் கொடுத்தார் எம்ஜிஆர். அவரும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஆனால் பொன்னியின் செல்வனின் பிரமாண்டத்தை, இரண்டரை மணி நேர திரைக்கதைக்குள் கொண்டு வருவது, சாதாரணமாக இருக்கவில்லை. பல மாதங்கள் ஓடின. ஆனாலும் என்னாச்சு, எதுவரை போயிருக்கு என்று எதுவும் கேட்காமல், தேவைப்படும் போதெல்லாம், தேவைப்படும் என்பதை உணர்ந்து, சம்பளம் மட்டும் வழங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் அது நிறைவேறாமலேயே போயிற்று.

அரசியல் பிரவேசம், தனிக்கட்சி வேகம், ஆட்சி என்று எம்ஜிஆரின் திசை மாறியது. ஆனால் மகேந்திரனின் சினிமா உலகம் அந்த திசை நோக்கி, அவரை மெல்ல மெல்லத்தான் இட்டுச் சென்றது.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்  சார்பில் தயாரான அந்தப் படம் மகேந்திரனுக்கு திரை வாசலைத் திறந்துவிட்டது. எம்ஜிஆரால் கதை சொல்ல உள்ளே நுழைந்தவருக்கு, சிவாஜிகணேசன் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்று, நெஞ்சில் பதக்கத்தையும் சூட்டினார். அதுதான்... தங்கப்பதக்கம்!

நிறைகுடம் படத்துக்குக் கதை, மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம் முதலான படங்களுக்கு வசனம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், பருவமழை என பல படங்களில் கதை எழுதியும் வசனங்கள் தீட்டியும் கதைவசனம் எழுதியும் தனியிடம் பிடித்தார். அந்தசமயத்தில்தான், 1978ம் ஆண்டு அவரின் முதல் படம் வெளியானது. இயக்கியவருக்கும் நடித்தவருக்கும் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. அது... முள்ளும் மலரும்! ரஜினியின் வாழ்வில் மிக முக்கியமான படம். ஆனானப்பட்ட குருநாதர் பாலசந்தரே உனக்குப் பிடித்த படம் எது என்று கேட்டதற்கு, முள்ளும் மலரும் படத்தைத்தான் ரஜினி சொன்னார்.

அதன் பிறகு வந்த உதிரிப்பூக்கள்தான், சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீதர் படத்தைப் பார்த்துவிட்டும், பாலசந்தர் படத்தைப் பார்த்துவிட்டும் பாரதிராஜா படங்களைப் பார்த்துவிட்டும் சினிமாவுக்குள் நுழைந்த கூட்டம் போல, மகேந்திரனின் தாக்கத்தில், நல்ல படம் கொடுக்கும் ஆவலுடன் வந்தார்கள் படைப்பாளிகள்.

பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, நண்டு, கைகொடுக்கும் கை என்று இவர் தபதபவென படங்கள் எடுத்துக் குவிக்கவில்லை. முத்தெடுப்பதைப் போல் படமெடுத்தவர் மகேந்திரன் என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.

விஜயனை பாரதிராஜாதான் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் உதிரிப்பூக்கள்தான் விஜயனின் அசாத்திய நடிப்பை, வெளிக்காட்டியது. எல்லோரும் ஆழ்வார்பேட்டைக்குச் சென்று கமல்ஹாசனை சந்தித்து கால்ஷீட் கேட்ட தருணத்தில், அவரின் அண்ணன் சாருஹாசனை அழைத்து வந்து, உதிரிப்பூக்களில் மலரச் செய்து நடிகனாக்கினார். அப்பாவை மட்டுமின்றி மகள் சுஹாசினியையும் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் அறிமுகப்படுத்தி, அவர் எப்பேர்ப்பட்ட பண்பட்ட நடிகை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

‘உங்களை வைச்சு படம் எடுக்கப்போறேன். கால்ஷீட் தரணும்’ என்று சொன்னால், போயஸ் கார்டன் வீட்டில் இருந்து நடந்தே சென்று விடுவார் ரஜினி. அப்படியிருந்தும் முள்ளும்மலரும், ஜானி, கைகொடுக்கும் கை என்று தேர்ந்த படங்களை அவருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் வழங்கினார்.

நடிகர் சாமிக்கண்ணு, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாலுமகேந்திரா என மகேந்திரனின் மனசுக்கு நெருக்கமானவர்கள் ஏராளம். தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கிக் கொண்டே இருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இளையராஜா. மகேந்திரனுக்கு ராஜா ஸ்பெஷல். இளையராஜாவுக்கு மகேந்திரனும் அவர் படங்களும் ஏகச் சிறப்பு! மகேந்திரன் - இளையராஜா கூட்டணியில் வந்த பாடல்கள் மொத்தமும் குல்கந்து. நண்டு படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, மெட்டி படத்தில் வரும் மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட..., உதிரிப்பூக்களின் அழகிய கண்ணே, முள்ளும் மலரும் படத்தின் செந்தாழம்பூ, ராமன் ஆண்டாலும், அடிப்பெண்ணே பாடல்கள், ஜானி படத்தில் காற்றில் எந்தன் கீதம், ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும், ஆசையைக் காத்துல தூதுவிட்டு... என இந்தக் கூட்டணியின் மொத்தப்பாடல்களும் மெலடிமெட்டுக்களாக இருந்து நம்மை இன்றைக்கும் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.

மகேந்திரன் எனும் படைப்பாளியின் கம்பீரமும் ஆளுமையும் இன்றைய சினிமாவுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அவசியம் தேவை. மிகப்பெரிய, ஆகச் சிறந்த பாடம்.

உன்னத இயக்குநர் மகேந்திரனுக்கு இன்று (25.7.18) பிறந்தநாள். அவர் இன்னும் இன்னும் ஆயுளுடன், அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துவோம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close