கட்டுமஸ்தான தோற்றத்துடன் வலம்வந்த நடிகர் ரோபோ சங்கர், திடீரென இளைத்தும் களைத்துமாக தோன்றும் புகைப்படங்களால் தனது ரசிகர்களை விசனப்பட வைத்திருக்கிறார்.
விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கலைஞர்களில் ரோபோ சங்கரும் ஒருவர். மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பு, ரோபோ நடனம் என சின்னத்திரையில் முத்திரை பதித்தவருக்கு, சினிமா உலகின் கதவுகள் எளிதில் திறந்தன. தனுஷ், சிவகார்த்திகேயன், அஜித் என பல நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கினார்.
ரோபா சங்கரின் அடையாளங்களில் அவரது கட்டுமஸ்தான் உடலும் ஒன்று. அவரது சேட்டைகளுக்கு, உடல்மொழியும் பிரத்யேகமாய் ஒத்துழைத்ததில் தனக்கென தனி ரசிகர்களையும் பெற்றார். இம்மாதிரி உடல்தோற்றத்தை முன்வைத்து நகைச்சுவை வேடங்களில் தோன்றுவோர், அந்த உடல் மிகாதும் குறையாதும் கவனமாக இருப்பார்கள். உருவக்கேலிக்கு ஆளானபோதும், அதுவே முதலீடு என்பதால் அவர்கள் பொருட்படுத்துவதும் இல்லை.
இந்த நிலையில், அண்மைக்காலமாக ரோபோ சங்கர் வெளியிட்டு வந்த புகைப்படங்களில் அவரது உடல் திடீரென இளைப்பு கண்டது. இளைப்போடு களைப்பும் அவரது முகத்தில் தென்பட, கவலையோடு நலம் விசாரிக்கும் ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மத்திம வயதில் எட்டிப்பார்க்கும் நீரிழிவா அல்லது இதர நோவுகளா என்றும் விசாரித்து வருகின்றனர்.
ஆனபோதும், எவற்றையும் பொருட்படுத்தாது தனது இயல்பில் வலம் வருகிறார் ரோபோ சங்கர். முன்னைவிட கணிசமான படங்களில் பறந்து நடித்து வரும் ரோபோ சங்கர், மனைவி மற்றும் மகளுடனான இன்ஸ்டா ரீல்ஸில் எப்போதும்போல உற்சாகமாகவே பங்கேற்று வருகிறார்.