நடிகர் தனுஷைத் தொடர்ந்து 'டாடா' படத்திற்கு கார்த்தி பாராட்டு: கவின் நெகிழ்ச்சி


'டாடா' திரைப்படத்தில் கவின்.

நடிகர் கார்த்தி 'டாடா' படம் பார்த்துவிட்டு கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 'டாடா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் தொலைபேசியில் நடிகர் கவின் மற்றும் அபர்ணாதாஸை அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நடிகர் கவினும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷூக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

நடிகர் தனுஷை அடுத்து தற்போது நடிகர் கார்த்தியும் 'டாடா' படத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில், ''டாடா' பார்த்துவிட்டேன். சிறந்த படம்! நல்ல திரைக்கதை மற்றும் அதை படமாக்கி இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தார்கள். கவின் முழுமையான மிகையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அணியினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் கவின், " எங்களுக்குள் ஐந்து நிமிட உரையாடல் தொலைபேசியில் நடந்தது. அதில் கார்த்தி சார் சொன்னது எல்லாமே எனக்கு நியாபகம் இருந்தாலும், 'இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்' என அவர் சொன்னதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். வாழ்க வளமுடன் வந்தியத்தேவன்" என ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் புகைப்படத்தைப் பகிர்ந்து ட்விட்டரில் நன்றி சொல்லி பதிலளித்துள்ளார் நடிகர் கவின்.

x