மோலிவுட் என அழைக்கப்படும் மலையாள சினிமாவில் விரைவில் ரிலீஸாக இருந்த ‘நான்சி ராணி’ படத்தின் இயக்குநர் மனு ஜேம்ஸ் தனது 31வது வயதில் நேற்று காலமானார். அவர் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனு ஜெம்ஸின் கனவு திரைப்படமான ‘நான்சி ராணி’ இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அஹானா கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் மனு ஜேம்ஸ் அதிர்ச்சி மரணமடைந்தது, படக்குழுவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனு ஜேம்ஸ் மறைவு குறித்து ‘நான்சி ராணி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் டபிள்யூ வர்கீஸ் தனது பதிவில், “ மனமும் உடலும் நடுங்குகிறது...என்ன எழுதுவது?. தற்செயலாக மனுவை ஒருநாள் சந்திந்தேன், அந்த அறிமுகமே எங்களுக்குள் ஆன்ம பந்தமாக மாறியது. அது என்னை ‘நான்சி ராணி’ படத்தின் ஒரு அங்கமாக மாற்றியது. அந்த மனு இப்போது மரணத்தின் அரவணைப்பில் காலமாகிட்டார்.
இது எங்களுக்கு பெரிய இழப்பு, மனு தன் கனவுகளை விட்டு விலகி செல்லும் போது, நீங்கள் உருவாக்கிய உங்கள் கனவை, உங்கள் முதல் படமான ‘நான்சி ராணி’ மக்கள் இதயங்களை உடைக்கும்... மலையாள மண்ணில் அந்த ஒற்றை படம் அழியாமை அடையும்...நிச்சயம்!!! அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாத மனித வாழ்வின் முன் அனைவரும் சிறியவர்களே..!” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.