பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்!


சென்னை: ‘சலார்’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கேஜிஎஃப்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் கடைசியாக ‘சலார்’ படத்தை இயக்கியிருந்தார். பிரபாஸ் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடிக்கிறார்.

அவரது 31-வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘தேவரா’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேவரா: ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் ‘தேவரா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் சிங்கிளான ‘Fear Song’ வெளியிடப்பட்டுள்ளது. படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.