‘கே.ஜி.எஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட வசூலைத் ‘பதான்’ திரைப்படம் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த ஜனவரி மாத இறுதியில் ‘பதான்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே படம் மீது நிறைய சர்ச்சைகள் உருவானது. இதை எல்லாம் மீறி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக ’பாக்ஸ் ஆஃபிஸ்’ ஹிட் கொடுத்தது ‘பதான்’. உலகம் முழுவதும் இந்தத்திரைப்படம் கிட்டத்தட்ட 953 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருக்கிறது.
இதில் இந்திய அளவில் 593 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 360 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாயை நெருங்க இன்னும் 47 கோடி ரூபாயே தேவைப்படும் நிலையில், ’கே.ஜி.எஃப்2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்களின் வசூலை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ‘கே.ஜி.எஃப்.2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்கள் 1200 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.