[X] Close

2.0 நவம்பர் மாதம் ரிலீஸ்: ட்விட்டரில் உறுதி செய்த இயக்குநர் ஷங்கர்


shankar-conforms-2-0-release

  • kamadenu
  • Posted: 10 Jul, 2018 23:24 pm
  • அ+ அ-

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0', வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வரும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' திரைப்படம் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகமான '2.0'வின் படப்பிடிப்பு 2015-ஆம் வருடமே ஆரம்பமானது. பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. மீண்டும் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, ஷங்கர் இயக்குநராக ஒப்பந்தமானார். மேலும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை ஏமி ஜாக்சனும் படத்தில் முக்கியப் பாத்திரங்களுக்காக தேர்வு செய்யப்பட்டனர். 3டியில் உருவாகும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.   

படப்பிடிப்பு தொடங்கியதும் சென்னை மழை, இடையில் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமானது எனத் தொடர்ந்து சில தடைகள் வந்தாலும், இயக்குநர் ஷங்கர் முடிந்த வரை சமாளித்து, திட்டமிட்டு படத்தின் படப்பிடிப்பை நடித்தினார். கடந்த வருடம் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கின. அக்டோபர் மாதம் மிகப் பிரம்மாண்டமாக துபாயில் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.

கடந்த வருடமே படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் எக்கச்சக்கம் என்பதால் வெளியீடு 2018 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் 14 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் தாமதமானதால் அந்தத் தேதியில் 'காலா' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. (ஆனால் அன்று காலாவும் வெளியாகாதது தனிக்கதை).

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த படங்களிலேயே அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் படம்  '2.0' என்று சொல்லப்படுகிறது. இந்த கிராபிக்ஸ் பணிகளை முடித்துத் தர வேண்டிய அமெரிக்க நிறுவனம் ஒன்று திவாலானதால் தான் இந்த தாமதம் என்று கூறப்பட்டது. மேலும், சொன்ன தேதியில் கிராபிக்ஸ் பணிகளை முடித்துத் தரவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது லைகா தரப்பு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்றும் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, 2.0 படத்தின் வெளியீடு அடுத்த வருடம் கூடத் தள்ளிப் போகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச ஆரம்பித்தனர்.

ஆனால் தற்போது, "ஒருவழியாக கிராபிக்ஸ் செய்து தரும் நிறுவனங்கள், கிராபிக்ஸ் காட்சிகளை ஒரு குறிப்பிட்ட தேதியில் முடித்துத் தருவதாக உறுதியளித்துள்ளார்கள். படம் நவம்பர் 29, 2018 அன்று வெளியாகும்" என இயக்குநர் ஷங்கரே அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் வெளியான காலா திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்ற நிலையில், இயக்குநர் ஷங்கரின் இந்த அறிவிப்பு கண்டிப்பாக ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கும்.

இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ள ட்வீட்

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close