[X] Close

’இளையராஜா பாராட்டிய ஒரே டைரக்டர் பாலசந்தர்தான்!’ இயக்குநர் கரு.பழனியப்பன்


kb-ilayaraaja

இயக்குநர் கரு.பழனியப்பன்

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Jul, 2018 15:04 pm
  • அ+ அ-

இயக்குநர் கே.பாலசந்தரின் 88வது பிறந்தநாள் விழா, சென்னை நந்தனம் பாலாஜி ஹாலில் நடைபெற்றது. நடிகர்சங்கத் தலைவரும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவருமான நாசர் தலைமை வகித்தார்.

 விழாவில், இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது:

’’எண்பதுகள்ல கவிஞர் மீராவோட ஒரு புத்தகம் மிகப் பிரபலம். கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள்னு ஒரு புத்தகம். புது வடிவம் அது. நாலு வரிக் கவிதை, ஒரு புகைப்படம்னு பக்கம்பக்கமா இருக்கும். அப்ப அந்தக் கவிதைப் புத்தகம் ரொம்பப் பிரபலம்.

அதுல ஒரு கவிதை எழுதியிருப்பார். புதிதாக தானம் செய்யப்புறப்பட்டவன் ஆள் தெரியாமல் கர்ணன் வீட்டுக்கதவைத் தட்டியது போல, புதிதாகக் கவிபாடக் கிள்மபியவன் ஆள் தெரியாமல் கம்பன் வீட்டுக் கதவைத் தட்டியதைப் போல்னு எழுதியிருப்பார். அதுமாதிரி, இங்கே இருக்கிறவங்க எல்லாம் பாலசந்தர் பத்தி நிறைய தெரிஞ்சவங்க. அவரோட ஒர்க் பண்ணினவங்க. இவங்களுக்கு மத்தியில, நாம பேசினா எப்படியிருக்கும்னு யோசிச்சேன்.

ரஜினிக்கு மிகத்தீவிரமான ரசிகர்கள் உருவாகிட்டிருந்த நேரம் அது. அப்பதான் அந்தச் சேதி தெரிஞ்சுது... ரஜினிகாந்த் ஒரு படத்துல மீசை இல்லாம நடிக்கிறார்னு!

எனக்கெல்லாம் ரொம்பவே வருத்தம். மீசைன்னா அழகு. மீசைன்னா கம்பீரம். கருத்த உருவத்துல, மீசையோட ரஜினி இருந்தாத்தானே அழகா இருக்கும்னு நினைச்சிக்கிட்டே தில்லுமுல்லு பாக்கறேன்.

படம் ஆரம்பிச்சதுலேருந்து எல்லாரும் சிரிக்கிறாங்க. சிரிச்சிக்கிட்டும் கைத்தட்டிக்கிட்டுமா இருக்காங்க. நான் ரஜினி எப்படா சண்டை போடுவார்னு பாத்துக்கிட்டிருக்கேன். ஆனா கடைசி வரை ரஜினி சண்டை போடவே இல்ல. ஏமாற்றத்தோட வீட்டுக்குப் போனேன். அங்கே என் அப்பா, படத்தை சிலாகிச்சு சொல்லிக்கிட்டிருக்கார்.

அப்படி சிலாகிச்சு ஒவ்வொண்ணா, ஒவ்வொரு படமா சொல்லிக்கிட்டே இருக்கார். பாலசந்தர் படத்தைப் பொருத்தவரை என்னன்னா... ‘இந்தப் படத்துல எப்படிப் பண்ணிருப்பார் தெரியுமா, அந்தப் படத்துல எப்படிப் பண்ணிருப்பார் தெரியுமா. இந்தப் படம், அந்தப் படம்னு அப்படியே சொல்லிக்கிட்டு எதிர்நீச்சலுக்குப் போயிட்டாங்க. அவ்ளோ காட்சிகள் இருக்கு; வசனங்கள் இருக்கு; கேரக்டர்கள் இருக்கு.

தில்லுமுல்லு படத்துல, தேங்காய்சீனிவாசனோட இண்டர்வியூ காட்சி. இத்தனை வருஷமாச்சு. இதுவரைக்கும் இதுக்கு நிகரான ஒரு காட்சியை யாருமே எடுக்கவே இல்லை. தேங்காய்சீனிவாசனோட வாழ்நாள் கேரக்டர் அது.

ஆனா இது எனக்கு எப்பப் புரிஞ்சுது தெரியுதுங்களா?

பல வருஷங்கள் கழிச்சு, கல்யாண அகதிகள் படம் ரிலீசாவுது. பாத்தேன். அதுல கிராமத்துலேருந்து வந்த சரிதா, ஒரு ஹோடல்ல தயிர் வடைன்னு எழுதாம பெரிய ற் போட்டு தயிற் வடைன்னு எழுதிருக்கும். கல்லால உக்கார்ந்திருக்கறவர்கிட்ட போய், ‘ஐயா, தயிர்வடைக்கு சின்ன ’ர’ தான் வரணும். ஆனா பெரிய ‘ற’ போட்டுருக்கீங்கன்னு சொல்லுவார். அதுக்கு கடைக்காரரு, ‘15 வருசமா இப்படித்தான் வடை வித்துக்கிட்டிருக்கேன். நல்லாத்தானே விக்கிது’ன்னுவாரு. அப்பதான் பாலசந்தர் சாரோட நுட்பமும் தில்லுமுல்லு காட்சியும் எனக்குப் புரிஞ்சுச்சு.

அப்புறம் சினிமால சேரணும்னு சென்னை வந்ததும் முதல்ல போய் நின்ன இடம் பாலசந்தர் சார் ஆபீஸ். விஷயம் சொன்னதும் இதுல பேர், அட்ரஸ்லாம் எழுதிட்டுப் போங்கன்னு சொன்னார். ‘எனக்கு முன்னாடி எழுதியிருப்பாங்களே. அதுல யாரைப் பாத்துருக்காரு டைரக்டருன்னு கேட்டேன். முன்னாடி ரெண்டுநாலு பக்கம் எடுப்பார்னு பாத்தா, அப்படியே கொத்துக்கொத்தா பக்கங்களை எடுக்கிறாரு. அப்படியே அட்டைக்கு அடுத்த பக்கத்துக்கு வந்துட்டாரு. இதோ இவங்களைப் பாத்துருக்காருன்னார். அந்தப் பேரேடு எனக்கு ரொம்பவே உண்மைகளை உணர்த்துச்சு.

பாலசந்தர் சார் மாதிரி பாராட்டவே முடியாது. மனசைத் திறந்து பாராட்டுவார். கிட்டத்தட்ட பாலசந்தர் சாருக்கு எதிர்த்தாப்ல கடை போட்டிருக்கார் பாரதிராஜா. ஆனாலும்  அவரோட புதிய வார்ப்புகள் படம் பாத்துட்டு, அப்படிக் கொண்டடித் தீர்த்துட்டார் பாலசந்தர். அப்படிலாம் கொண்டாட மனசு வேணும்.

இதுபத்தி சோ சொன்னாரு... பெறுபவன்தான் கொடுக்கமுடியும். கொடுப்பவன் தான் பெறமுடியும்.  தம் மேல நம்பிக்கை வைச்சிருக்கிறவன், தான் உயரமானவன்னு நினைக்கிறவன் ஒருபோதும் மத்தவங்களைப் பாத்து பயப்படவே மாட்டான். கே.பி.சாரும் அப்படித்தான்னு சொன்னார் சோ அவர்கள்.

அதேபோல, இளையராஜாகிட்ட கடைசியா போய் சேர்ந்தவர் பாலசந்தர் சார்தான். எல்லா இயக்குநர்களும் இளையராஜாகிட்ட போயாச்சு. யார் நடிச்சிருக்கான்னு தேவையில்ல. இளையராஜா படம் போட்டா எல்லாம் வித்துரும். ஆனா, ரொம்ப வருஷம் கழிச்சுதான் இளையராஜாகிட்டப் போனார். அதுதான் சிந்துபைரவி படம்.

மிக முக்கியமான இசையைக் கொண்ட படம். அதுக்கு இளையராஜாவும் அப்படியொரு இசையைக் கொடுத்திருப்பார்.

இன்னொரு விஷயம்... இளையராஜா அவ்வளவு சீக்கிரத்துல யாரையும் பாராட்டிட மாட்டார். ஆனா ’மரிமரி நின்னே மாதிரி பாட்டுச் சூழல்லாம் கொடுத்தா பிரமாதப்படுத்திடலாம். அப்படிக் கொடுக்க, பாலசந்தர் சார் வேணும்னு இளையராஜாவே சொல்லிருக்கார். இத்தனைக்கும் பாலசந்தர் சார், அப்போ ராஜா சாரை விட்டுப் பிரிஞ்சிட்டார். ஆனாலும் இளையராஜா கே.பி.சாரை மட்டும்தான் மனசாரப் பாராட்டினார்.

எனக்குத் தெரிஞ்சு, பாலசந்தர் சார் எதையும் யார்கிட்டயும் கருத்துகளைத் திணிச்சதே இல்லை. இதைக் கொஞ்சம் பாருங்களேன், இப்படி இருந்தா நல்லாருக்கும்தானே, அப்படி செஞ்சு பாருங்களேன்’ என்று கரு.பழனியப்பன் பேசினார்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close