நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி மறுபடி இணைய இருக்கிறது.
கடந்த வருடம் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மித்ரன் ஜவஹர்- தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ உள்ளிட்டப் படங்களுக்குப் பிறகு இவர்கள் ஐந்தாவது முறையாக இணைய இருக்கிறார்கள். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் 50-வது படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தை நடிகர் தனுஷே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’பவர் பாண்டி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் ‘ராயன்’ என்ற கதையை இயக்க முன்னெடுத்து அது கைவிடப்பட்டது. இந்தக் கதையா அல்லது வேறு கதையை இயக்க இருக்கிறாரா என்பது இன்னும் இறுதியாகவில்லை. தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனுஷூடன் இணைந்து திரைக்கதையில் பணியாற்ற இருக்கிறார்.
நடிகர் தனுஷ் தற்போது ‘வாத்தி’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.