‘ப்ரின்ஸ்’ நஷ்டம்; விநியோகஸ்தர் அன்புச்செழியனுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுத்த சிவகார்த்திகேயன்!


‘ப்ரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தில் 50 சதவீத பணத்தை விநியோகஸ்தருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும், அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இணைந்து கொடுத்துள்ளனர்.

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான காமெடி பாணியிலான கதையையே இதிலும் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், படம் நஷ்டத்தைத் தழுவியது. ‘ப்ரின்ஸ்’ படத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்கள் 100 கோடி அளவில் வசூல் செய்தது.

‘ப்ரின்ஸ்’ திரைப்படமும் அப்படி 100 கோடி க்ளப்பில் இணையும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தையே கொடுத்தது. இதனை அடுத்து ‘ப்ரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக அந்தப் படத்தின் விநியோகஸ்தருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் தயாரிப்புத் தரப்பும் 50 சதவீதம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை மதுரை பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் விநியோகம் செய்திருந்தது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் 6 கோடியும் தயாரிப்பு தரப்பு 6 கோடியும் மொத்தம் 12 கோடி ரூபாய் நஷ்டத்தை அன்புச்செழியனுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர்.

x