[X] Close

'' ‘காதல்கோட்டை’ல நடிக்க விஜய்யைத்தான் கேட்டோம்’’ - தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஓபன் டாக்


  • வி.ராம்ஜி
  • Posted: 14 Jul, 2019 16:21 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

‘’ ‘காதல் கோட்டை’ படத்துல நடிக்கறதுக்கு விஜய்யைத்தான் கேட்டோம். முன்னதாக, ‘வான்மதி’ படத்துக்கும் அவரைத்தான் கேட்டோம்’’ என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தெரிவித்தார்.

’காதல்கோட்டை’ திரைப்படம் ரிலீசாகி 24 வருடங்களாகிவிட்டன (ஜூலை 12ம் தேதி). இதையொட்டி சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ இணையதளத்துக்காக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை பேட்டியெடுத்தார்.

 சிவசக்தி பாண்டியன் அதில் கூறியதாவது:

தியேட்டரை லீஸ் எடுத்து நடத்தி வந்தேன். அதேபோல் பட விநியோகஸ்தராக பல படங்களை ரிலீஸ் செய்தேன். ஒரே சமயத்தில், ஏழு படங்களை வரிசையாக ரிலீஸ் செய்த போது, அதில் நான்கு படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பினேன். ஆனால் அந்த நான்கு படங்கள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவின. இதனால் பெரும் நஷ்டத்துக்கு ஆளானேன்.

சரி... படத்தைத் தயாரித்தாலென்ன எனும் யோசனை எழுந்தது. உடனே விஜய்யை வைத்து படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அவருடைய அப்பா, எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரைச் சந்தித்தேன். படம் தயாரிப்பது குறித்து தெரிவித்தேன். ‘முதல்ல படம் தயாரிங்க. எப்படித் தயாரிக்கிறீங்க. எப்படிலாம் விளம்பரம் பண்றீங்க’ன்னு பாத்துட்டு, விஜய்யோட கால்ஷீட் தரேன்’னு சொன்னார். திரும்பவும் யோசனை. யாரை ஹீரோவாப் போடுறதுன்னு குழப்பம்.

 ஏற்கெனவே, அஜித் அறிமுகமான ‘அமராவதி’ படம் பார்த்த போது, அவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என்கிற நம்பிக்கை இருந்தது. அப்போது இசையமைப்பாளர் தேவா அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர் ‘ஆசை’ படம் குறித்தும் அந்தப் படத்தில் நடித்த அஜித் பற்றியும் தெரிவித்தார். ‘இந்தப் பையன் பெரிய நடிகரா வருவாப்ல’ என்றார். உடனே அஜித் தரப்பில் பேசினேன். அகத்தியன் சொன்ன கதையும் பிடித்திருந்தது. வடபழநி முருகன் கோயில் வாசல்ல நின்னு, 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன். படத்துக்கு மூணு லட்சம் ரூபாய் சம்பளம். ஆனா, அஜித் சம்பளம் பற்றி எதுவுமே கேட்கவில்லை. இவ்வளவு வேண்டும் அவ்வளவு கொடுங்கள் என்று நிர்ப்பந்திக்கவே இல்லை.

அதன்படி ‘வான்மதி’ படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தார். ஒருமுறை படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றேன். யாரோ தூங்கிக்கொண்டிருந்தார்கள். கேட்டதும் அஜித் என்று சொன்னார்கள். உடனே அவரும் எழுந்துவிட்டார். அப்போது அவருக்கு ‘பேக் பெயின்’ அதிகம் இருந்தது. வேறு யாராவதாக இருந்தால், அந்த வலிக்கு சினிமாத் தொழிலே வேண்டாம் என்று சென்றிருப்பார்கள். ஆனால் அந்த வலிதான் அஜித்தை ஜெயிக்கவைத்தது. ’வான்மதி’ மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

அடுத்து அகத்தியன் சார், ‘காதல் கோட்டை’ கதையைச் சொன்னார். திரும்பவும் எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரிடம் சென்று கதை சொன்னோம். ‘நல்லா தயாரிக்கிறீங்க. நல்லபடியா விளம்பரமும் செய்றீங்க. இந்தக் கதையும் நல்லா இருக்கு. ஆனா இப்போ டேட்ஸ் இல்லை. ஆகஸ்ட் மாசம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. விஜய் பண்ணுவாரு’ என்றார்.

அது பிப்ரவரி மாதம். எங்களுக்கோ ‘வான்மதி’யின் வெற்றியோடு வெற்றியாக, அடுத்த படம் செய்தாகவேண்டும். அஜித்தை வைத்தே பண்ணுவது என முடிவானது. இந்தப் படத்துக்கும் சம்பளமெல்லாம் பேரம் பேசவில்லை அவர். ஆனால் ‘காதல் கோட்டை’ படத்துக்காக ஆறு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தேன். ஆத்மார்த்தமாக நடித்துக்கொடுத்தார். மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. எங்களது ‘சிவசக்தி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்துக்கும் நல்ல பெயரைத் தந்தது. பல விருதுகளும் கிடைத்தன.

இதோ... 24 வருடங்கள் கழித்தும் கூட, இன்று வரை ‘காதல்கோட்டை’யை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள். இதைவிட வேறென்ன சந்தோஷமும் பெருமையும் இருக்கிறது.

இவ்வாறு சிவசக்தி பாண்டியன் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close