‘லவ் டுடே’ படத்தின் இந்தி உரிமத்தை போனிகபூர் வாங்கி இருப்பதாக வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நிகிதா, ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் நவம்பரில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது ’லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ’லவ் டுடே’ படத்தின் இந்தி உரிமத்தை போனி கபூர் கைப்பற்றி இருக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் அவர் அந்த செய்தியை மறுத்துள்ளார். அவ்வாறு வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையில்லை என்பதை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார் போனி கபூர்.
இந்த வருட கடைசியில் சின்ன பட்ஜெட்டில் தயாராகி வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘அப்பா லாக்’ என்ற பெயரில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த குறும்படத்தின் சினிமா வடிவம்தான் ‘லவ் டுடே’. இந்தப் படத்தை அடுத்து லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிகர் ரஜினிகாந்த்தின் 170-வது படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது.