இயக்குநர் பாலாஜி மோகன் நடிகை தான்யா பாலகிருஷ்ணனுடன் தனது இரண்டாவது திருமணத்தை உறுதி செய்திருக்கிறார்.
தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன்பிறகு தனுஷூடன் ‘மாரி’, ‘மாரி2’ ஆகிய படங்களை கொடுத்தார். இவருக்கு 2012-ல் அருணா என்பவருடன் திருமணம் நடந்து விவாகரத்தானது. இதன் பிறகு இவருக்கும் நடிகை தான்யா பாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்தது என சொல்லப்பட்டது. இந்த தகவலை, தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் தெரியப்படுத்தியது மட்டுமில்லாமல், தான்யாவை சினிமாவில் பாலாஜி மோகன் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பாலாஜி மோகன் வழக்கும் தொடுத்தார்.
அதில், ‘ ’காதலில் சொதப்புவது எப்படி?’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி2’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன். ’ஏழாம் அறிவு’, ‘ராஜா ராணி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த தான்யா பாலகிருஷ்ணனும் நானும் ஜனவரி 23, 2022-ல் திருமணம் செய்து கொண்டோம். இணையத்தொடர் பலவற்றில் நடித்துள்ள நடிகை கல்பிகா கணேஷ் எங்களது திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் யூடியூப் மற்றும் மற்ற சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி செந்தில்குமார் கல்பிகாவின் வீடியோக்களுக்கு தடை விதித்துள்ளார். மேலும், ஜனவரி 20-ம் தேதிக்குள் இதற்கு கல்பிகா பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.