[X] Close

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வி எதிரொலி: சிவகார்த்திகேயன் முதல் அமிதாப் வரை... நெகிழ்ச்சி ட்வீட்களின் தொகுப்பு


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 12:10 pm
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இது குறித்து பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

எடுத்த எடுப்பிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்து திணறிய இந்திய அணிக்கு தோனியின் ஆட்டமும், ஜடேஜாவின் வேகமும் பலம் சேர்த்தது. மோசமான சரிவை இருவரும் சீரமைத்து வெற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது என்ற நிலைக்கு அணியை இட்டுச் சென்றனர். ஆனால், ஜடேஜா அவுட்டாக தொடர்ந்து தோனியும் ரன் அவுட் ஆகி இந்திய அணிக்கு தோல்வி நெருங்கியதை உணர்த்தினர். வெறும் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் மோசமான சரிவிலிருந்த மீண்ட ஆறுதல் மிஞ்சியது.

இந்நிலையில் கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது உணர்ச்சிகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அவற்றின் தொகுப்பு:

சிவகார்த்திகேயன்: எந்த ஒரு அணியும் 3 விக்கெட்டுக்கு 5 ரன்கள் என்ற நிலையிலிருந்து போராடி மீண்டிருக்காது. ஆனால் நாம் செய்திருக்கிறோம். வரலாறு எப்போதும் போராளிகளைத்தான் நினைவில் கொள்ளும். தோனியையும் ஜடேஜாவையும் எண்ணி பெருமை கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் ரோஹித் சர்மாவுக்கும், பும்ராவுக்கும் பரம விசிறி. அச்சமில்லா கேப்டன் கோலிக்கு ஒரு சபாஷ் என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

ஷாகித் கபூர்: ஷாகித் கபூர் தனது ட்வீட்டில், நீங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தால் உலகளவில் சிறந்த அணி என்று அர்த்தம். அதுபோன்றததுதான் ஒரு மோசமான நாளும். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்: நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடினர். உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த ரோஹித் சர்மா, பும்ராவின் பந்துவீச்சு, விராத் கோலியின் தலைமை, ரிஷப் பந்த், ராகுல், ஜடேஜா போன்ற இளம் துப்பாக்கிகள் காட்டிய வேகம்.. ஆஹா அற்புதம். தோனியை எப்போதும் போலவே நேசிக்கிறோம். பெருமிதம் கொள்ளுங்கள் வீரர்களே எனப் பதிவிட்டுள்ளார்.

மாதவன்: இதயம் நொறுங்கிவிட்டது. ஆனாலும் நன்றாக விளையாடினீர்கள் எனக் கூறியுள்ளார் மாதவன்.

இயக்குநர் வெங்கட்பிரபு: அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. 4 விக்கெட்டுகளுக்கு 24 ரன்கள் என்றிருந்த நிலையில் இணைந்த ஜடேஜாவும் தோனியும் நம்பிக்கை சேர்க்கும் வகையில் விளையாடினார்கள். உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இருந்தாலும், நியூஸி அணி தனது முதல் உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என இயக்குநர் வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்: சோகத்திலும் ஒரு சந்தோஷடம். பட்டயக் கிளப்பினர் மஞ்சள் சட்டை வீரர்கள். தோல்வியையே நினைத்து இருக்காதீர்கள். இப்போ எல்லோரும் போய் பிக்பாஸ் பார்ப்போன். கவின் ஏதாவது பண்ணுவான். வாங்க பார்ப்போம் என ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

வரலட்சுமி: கவலையாக இருக்கிறது. இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இடம்பிடிக்கும் தகுதி கொண்ட அணி. ஆனால், இதுவும் ஒரு விளையாட்டுதானே என்று எடுத்துக்கொள்வோம். இருந்தாலும் இந்த நாளின் முடிவில் அணியினர் அனைவருக்கும் நன்றி சொல்லும் கடமை இருக்கிறது. தோனியை எப்போதும்போல் நேசிக்கிறோம் என நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

போமன் இரானி:  இந்த தோல்வி நினைத்துப்பார்க்காதது. இந்தவேளையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியூஸி அணி சிறப்பாக கணித்து விளையாடியுள்ளனர். இந்திய அணி அரையிறுதியில் காட்டிய போராட்டத்துக்கு வாழ்த்துகள்.

சித்தார்த்: ஜடேஜாவையும் தோனியையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் அபாரமாக விளையாடினீர்கள். இந்தத் தோல்வி வருந்தச் செய்கிறது. இந்திய அணி போராடித் தோற்றது என்பதில் ஓர் ஆறுதல். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்துகள். இந்தப் போட்டியை காணும்போது மனம் வலித்தது என பதிவிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

கார்த்திக் சுப்பராஜ்: மனம் வலிக்கிறது. ஆனாலும், மிகச்சிறப்பான போராட்டம். இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். சல்யூட். தோனி ரன் அவுட் ஆகி நடந்து சென்றபோது கண் கலங்கியது. லவ் யூ தோனி  என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உருகியிருக்கிறார்.

பூஜா ஹெக்டே: இந்திய அணி இன்று தோற்றுப்போனதைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், தோனி உங்களின் சிறப்பான ஆட்டம் மூலம் நீங்கள்தான் எனது ஃபேவரைட் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். ஒவ்வொரு போட்டியிலுமே அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார். கடினமான சூழலில் நமது அணியை முன்னேறச் செய்தார். முன்னாள் ஸ்கிப்பரும் அன்பும் மரியாதையும் எனப்பதிவிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

ஜி.வி.பிரகாஷ்: இதயம் வலிக்கிறது. ஆனாலும் சிறப்பானதொரு முயற்சி. வாழ்த்துகள் தோனி, ஜடேஜா என இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் உருகியிருக்கிறார்.

சாய் தரம் தேஜ்: ஓய்ந்துவிடாமல் போராடிய தோனிக்கும் ஜடேஜாவுக்கும் வாழ்த்துகள். எதுவாக இருந்தாலும் சரி. இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறோம் என சாய் தரம் தேஜ் கூறியுள்ளார்.

ஈஷா குப்தா: நமக்கான நேரமாக இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் பரவாயில்லை.மீண்டெழும் முயற்சி அபாரம். அடுத்த முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா? என்று ஈஷா பதிவிட்டுள்ளார்.

தமன்: இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. 19 ரன்களில் தோல்வி. முதல் ஆர்டரில் ஆடியவர்கள் 50 ரன் களாவது சேர்த்திருந்தால் தோனி, ஜடேஜா மீது இவ்வளவு பாரம் ஏறியிருக்காது என்று தமன் வருந்தியிருக்கிறார்.

இயக்குநர் அஸ்வின் சரவணன்: நியூஸிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணம் அவர்களது ஃபீல்டிங். ஜடேஜாதான் உண்மையான சாம்பியன் என்று இயக்குநர் அஸ்வின் சிலாகித்திருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: இது நம்முடைய நாள் இல்லை. வருத்தமாக இருந்தாலும் தோல்வியை ஏற்க வேண்டுமே. உலகக் கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. மறக்க முடியா தருணங்களைக் கொடுத்தமைக்கு நன்றி என்று ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.

ப்ரித்விராஜ்: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் திறனைக்கு வாழ்த்துகள். முக்கியமான நாளில் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், இந்தத் தொடரில் சில முத்தாய்ப்பான தடங்களுடனேயே விடைபெறுகிறோம். நியூஸி அணிக்கு தலைவணங்காமல் இருக்க முடியாது. என்னே ஒரு எதிர் தாக்குதல் என நடிகர் ப்ரித்விராஜ் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன்: 2019 உலகக்கோப்பையில் என்ன மாதிரியான விளையாட்டை நீங்கள் விளையாடிக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் சாம்பியன்கள் போல் போராடினீர்கள். நீங்கள் காட்டிய வேகம் உங்கள் திறனின் பிம்பம். இப்போதும் கூட இந்த உலகளவில் நீங்கள்தான் சிறந்த அணி என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close