[X] Close

2018 தீபாவளி ரிலீஸில் விஜய் - சூர்யா போட்டியா? 


it-s-vijay-s-sarkar-vs-suriya-s-ngk-this-deepavali

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 Jun, 2018 18:30 pm
  • அ+ அ-

இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இந்த வருட தீபாவளிக்கு பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்று தெரிகிறது. இப்போதைக்கு, விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையின் 'சர்கார்' மற்றும் சூர்யா - செல்வராகவன் இணையின் 'என்ஜிகே' ஆகிய இரண்டு படங்கள் தீபாவளி வெளியீடு என உறுதி செய்துள்ளன. 

மேலும், ஆமிர்கானின் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. ஆமிர்கானின் முந்தைய படமான 'தங்கல்', தமிழ் டப்பிங் செய்யப்பட்டு சூப்பர்ஹிட் ஆனதால், 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தானு'ம் தமிழில் டப்பிங் செய்யப்படும் என்று தெரிகிறது. 

ஆனால், சந்தையில் எந்தப் படம் உறுதியாக வெளியாகும் என்பதில் சந்தேகமே நிலவுகிறது. பிரபல விநியோகஸ்தரான எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன் பேசுகையில், "கடந்த வருடம் 'மெர்சல்' வெளியானதைப் போல, தனியாக ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வருவதே நாங்கள் எதிர்பார்ப்பது. பல படங்கள் வெளியாகும் போது வியாபாரம் பிளவுபடும்" என்றார்.

மற்றொரு விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா, "தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உட்கார்ந்து பேசி, ஆகஸ்ட் சுதந்திர தினத்திலிருந்து, ஜனவரி பொங்கல் வரை பெரிய நட்சத்திரங்களின் பட வெளியீட்டு தேதிகளைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய முக்கிய கட்டமிது. சரியாக திட்டமிடவில்லையென்றால் குழப்பமும், நஷ்டமுமே அனைவருக்கும் மிஞ்சும். இந்தி, தெலுங்கைப் போல ஏன் வெளியீட்டு தேதிகளை இங்கு யாரும் முறைபடுத்துவதில்லை" என்று கவலை தெரிவித்தார். 

ஆனால், கலாநிதி மாறன் தயாரிப்பில் 'சர்கார்', எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் 'என்ஜிகே' என, இரண்டுமே பெரிய தயாரிப்பாளர்களின் படங்கள் என்பதால், தீபாவளிக்குக் கண்டிப்பாக வெளியாகும் என்றே தெரிகிறது.

தமிழில் உச்ச நட்சத்திரங்களுக்கு, தீபாவளி என்பது முக்கியமான வெளியீட்டு தேதி. கடுமையான போட்டியிருந்தாலும் யாரும் இந்தத் தேதியை தவறவிடமாட்டார்கள். இந்த இரண்டு படங்களுமே அரசியல் சம்பந்தப்பட்டவை என்று தெரிகிறது. 

பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவுள்ளதால் அடுத்த ஒரு வருடத்துக்கு, பண்டிகை நாட்கள் வெளியீடு மிகுந்த போட்டி வாய்ந்ததாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்கினால், நிலை இன்னும் சிக்கலாகும். ஏனென்றால் பொங்கல் 2019 வெளியீட்டுக்கு அரை டஜன் பெரிய படங்கள் தயாராகியுள்ளன. வேலை நாளில், பள்ளிகள் திறந்த பிறகு, ஜூன் 7 அன்று வெளியான 'காலா' படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். 

தற்போது கமல்ஹாசன், சுதந்திரதினத்தன்று தனது 'விஸ்வரூபம் 2' படம் வெளியாவதை உறுதி செய்துள்ளார்.

தொடர்ந்து, விநாயக சதுர்த்தி அன்றும் இன்னொரு மோதல் காத்திருப்பதாகத் தெரிகிறது. தனுஷின் 'வட சென்னை', சிவகார்த்திகேயனின் 'சீம ராஜா' என இரண்டு படங்களும் அந்தத் தேதியை குறிவைத்துள்ளன. ரஜினிகாந்தின் '2.0'வும் இதில் சேர வாய்ப்புண்டு. 

ஒரு பெரிய நட்சத்திரத்துக்கு, பண்டிகை நாள் வெளீயிடு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது. படத்தின் ஓப்பனிங், குடும்பங்களை திரையரங்குக்கு வரவழைத்தல் போன்ற காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகின்றன. 

குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதமன், "ஏழு வருடங்களுக்கு முன்னால், அக்டோபர் 26, 2011 தீபாவளி அன்று, விஜய்யின் 'வேலாயுதம்', சூர்யாவின் 'ஏழாம் அறிவு' இரண்டும் வெளியாகின. அப்போது, இரண்டு படங்களுக்கும் சிறிய திரை, பெரிய திரை என இரண்டிலும் சரி சமமான காட்சிகளே தந்திருந்தேன். இப்போது மீண்டும் அது நடந்தால், பெரிய திரையில் அனைத்து காட்சிகளையும் 'சர்கார்' படத்துக்கும், சிறிய திரையை 'என்ஜிகே' படத்துக்கும் தரவேண்டியிருக்கும்" என்கிறார். 

பொங்கல் 2014ல், அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' வெளியானதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். அப்போது இதனால் வியாபாரம் பிளவுபட்டது. மாநிலத்துக்கு வெளியே தான் திரையரங்குகளுக்கான கடும் போட்டி நடக்கும். அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சந்தையில் இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படம் ஒரே நாளில் வெளியாகாமல் இருப்பதே நல்லது. 

கேரளா, கர்நாடகம், வட இந்திய மல்டிப்ளெக்ஸ்களிலும் இதே நிலை தான். இந்நிலையில், இந்தப் படங்கள் பற்றிய செய்திகள் வர வர, சமூக வலைதளங்களில், நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே மோதலும் தீவிரமடைந்து வருகிறது. 
 

- ஸ்ரீதர்பிள்ளை (தி இந்து ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close