[X] Close

  நினைத்தாலே இனிக்கும் & அப்பவே அப்படி கதை 


ninaithale-inikkum-appave-appadi-kadhai

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Jun, 2018 17:40 pm
  • அ+ அ-

   நினைவுகள் எப்போதும் சுகமானவை. அது சோக நினைவுகளாக இருந்தாலும் சந்தோஷ குதூகலமாகவும் இருந்தாலும் நினைவுகளை அசைபோடுவது, நாமே மயிலிறகு எடுத்து நம் மனதை வருடிக்கொள்வது மாதிரியானது. பாலசந்தர் அப்படியொரு மயிலிறகைத் தந்திருப்பார். அது மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல், நம் மனசை வருடிக் கொடுக்கும். முணுமுணுக்க வைக்கும். அது... நினைத்தாலே இனிக்கும்! 
1979ம் ஆண்டு வெளிவந்த படம் இது. படம் வெளியாகி 38 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் எவர்கிரீனாக, பசுமரத்தாணி போல் பதிந்துவிட்ட நினைத்தாலே இனிக்கும் படத்தை நினைத்தாலே இனிக்கும். 
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சினிமாவாக்கியிருப்பார் கே.பாலசந்தர். இசைக்குழுவின் கதை. இசைக்குழுவினரைப் பற்றிய கதை. அந்த இசைக்குழுவுக்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளே ஒரு பெண்ணை நுழையச் செய்வார்கள். அந்தப் பெண், இசைக்குழுவின் தலைவன் மனதில் நுழைந்துகொள்வாள். 
 புதிரான உலகில், அவளும் விதிவிலக்கல்ல. எப்போதும் புதிராகவே இருப்பாள். அவள் நல்லவளா கெட்டவளா, நம்பிக்கைக்கு உரியவளா நம்பிக்கைத் துரோகம் செய்பவளா, அப்பாவியானவளா ஏமாற்றுக்காரியா என்று காட்சிக்குக் காட்சி மாறிக்கொண்டே இருக்கிற நம்முடைய கேள்விகளுக்குள்ளேயே படம் விரிந்துகொண்டே இருக்கும்.
 நடுநடுவே அந்தப் பெண்ணை ஒரு நோய், மனித உருவில் துரத்திக்கொண்டே இருக்கும். அது நோயாகவும் இருக்கலாம். மனிதனாகவும் இருக்கலாம். எமனாகவும் இருக்கலாம். அந்த உருவம் நம்மை திகைக்கவைக்கும். திகிலூட்டும். பதறவைக்கும். பதைபதைக்கச் செய்யும்.
இவை அனைத்துக்கும் நடுவே அழகாய் இருக்கும் கமலஹாசன். அழகு மிளிர வலம் வரும் ஜெயப்பிரதா. அழகு கொட்டிக்கிடக்கும் சிங்கப்பூர் என அழகழகாய் சேர்த்துச் சேர்த்து படம் பண்ணியிருப்பார் பாலசந்தர். 
  படத்தில் சந்துரு எனும் கதாபாத்திரத்தில் கமல். கிடாரில் சோககீதம் பின்னணியில் இசைக்க, உதட்டை வரைந்துகொண்டிருப்பார் கமல். கல்யாணம் பற்றி பேச்செடுப்பார் அவரின் அம்மா. ‘என்னடா ஒரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?‘ என்பார். ‘அம்மா நான் ஏற்கெனவே கல்யாணமானவன். விடோயர்‘ என்பார். 
  காரிலும் அந்த உதடு ஓவியம். கூடவே கிடாரின் ஓவியம். கார் சாலையில் பயணிக்கும். கமல் ஓட்டிக்கொண்டிருப்பார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலை மியூஸிக் அகாடமியைக் கடக்கும். சட்டென்று அங்கிருந்துதான் பிளாஷ்பேக் ஆரம்பமாகும். 
  இசைக்கச்சேரி. முதலில் அறிமுகம் என்று சொல்லிவிட்டு, கமல் தன் குழுவினரை அரங்கத்தில் உள்ளவர்களுக்கு அதாவது மியூஸிக் அகாடமி அரங்கத்தில் உள்ள ரசிகர்களுக்கு சொல்வது போல, திரை ரசிகர்களுக்குச் சொல்லுவார். அது கே.பி.டச். 
 படம் முழுவதும் இதுமாதிரியான கே.பி.டச்கள் நிறைய நிறைய. கமலின் நண்பனாக, இசைக்குழுவில் கிடாரிஸ்டாக ரஜினி.தீபக் எனும் கதாபாத்திரம். அந்த குறுந்தாடியும் குறும்பும் ரஜினி ஸ்டைலை வெளிக்கொண்டு வந்துகொண்டே இருக்கும். சின்னச்சின்ன திருட்டுகளைச் செய்யும் எல்லாமே ரசிக்கவைக்கும். அதிலும் ரஜினி ஸ்டைல் வெளிப்படும். 
 அநேகமாக, கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப்படம் இது. சிங்கப்பூரையும் காட்டவேண்டும். சிங்கப்பூருக்குள் கதையையும் நுழைக்கவேண்டும். கமலுக்கும் தீனி போடவேண்டும். ரஜினியையும் போகஸ் செய்யவேண்டும். அத்தனையையும் செய்திருப்பார் கே.பாலசந்தர். 
 கமலின் அறைக்குள் ஜெயப்பிரதா வந்து ஆட்டோகிராப் கேட்பது, விமான நிலையத்தில் வேறொரு ஸ்டைலில் அவளைப் பார்ப்பது, என்னடா இப்படி திருடுறான் என்று முணுமுணுப்பது. ப்ளைட்ல எஞ்சினைத் திருடாம இருந்தா சரி என்று சொல்வது. ரஜினியின் அரைகுறை இங்கிலீஷ், ‘உங்களுக்குத் தமிழ் தெரியாதா?‘ தெரியுமே. ஏன் உங்களுக்கு இங்கிலீஷ் புரியாதா?, புரியும். இதுமாதிரி அரைகுறை இங்கிலீஷ் பேசினா பிடிக்காது.  சோனா என்கிற ஜெயப்பிரதாவுக்கு ஜோஸியம் பார்ப்பது, உனக்கொரு அப்பா அம்மா என்று சொல்லுவது. பிடிஓ என்று போட்டிருக்கே என்று கையைத் திருப்புவது என்று சுஜாதாவின் சேஷ்டைகளும் கேபியின் முத்திரைகளும் படத்தைக் கவிதையாக்கிக் கொண்டே இருக்கும். படம் முடியும்போது அழகாக பைண்ட் செய்யப்பட்ட கவிதைப் புத்தகமாக நம் கைகளில் உட்கார்ந்திருக்கும். மனதிலும்தான்! 
   ரஜினியின் சிகரெட்டை தூக்கிப் பிடித்து வாயில் பிடிக்கிற ஸ்டைலைக் கொண்டே காட்சி வைத்திருப்பது தனி சாமர்த்தியம். நம்ம புதுப்புது அர்த்தங்கள் கீதாவை சின்ன கேரக்டரில் அறிமுகப்படுத்தியிருப்பார். எஸ்.வி.சேகரையும்தான். 
  இதில் ஒரு விஷயம்... 79ல் வந்த படம். இளையராஜா வந்த பிறகு வந்தபடம். இன்னொரு விஷயம்... ஒரு படத்துக்குக் கீழே சப்டைட்டில் போடுகிற வழக்கம் இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டபடம் நினைத்தாலே இனிக்கும் என்றுதான் நினைக்கிறேன். நினைத்தாலே இனிக்கும் என்று போட்டுவிட்டு, கீழே இது ஒரு தேனிசை மழை என்றும் போட்டிருப்பார் பாலசந்தர். உண்மையிலேயெ தேனிசை மழைதான். 
  படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன். வெளுத்துவாங்கியிருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். சொல்லப்போனால், எம்.எஸ்.வி.யின் இசைபிரமாண்டமாகவே ரசிகர்கள் மிரண்டுபோனார்கள். கொண்டாடினார்கள். பாடிப்பாடி களித்தார்கள். படம் முழுவதும் பாட்டுகள்தான். சென்னை மேடையில் எங்கேயும் எப்போதும், விமானத்தில் சோனா, சிங்கப்பூரில் தடுக்கி விழுந்தால் பாடல்கள் என்று பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியிருப்பார் பாலசந்தர். 
 முக்கியமாக, ‘நநநநநநந நநநநநாநா... நநநநநநநநநநா நினைத்தாலே இனிக்கும்‘ என்று ஒற்றை வரியை வைத்துக்கொண்டு ஒரு பாடலே உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி. பாரதி கண்ணம்மா, யாதும் ஊரை யாதும் கேளீர், சம்போ சிவசம்போ, நம்ம ஊரு சிங்காரி, இனிமை நிறைந்த உலகம் இருக்கு, நடுவிலே ஒரு இங்கிலீஷ் பாடல் வேறு. ரகளை பண்ணியிருப்பார். படத்தின் பின்னணி இசையிலும் ஸ்டைலீஷான இசையைக் கொடுத்திருப்பார். எங்கேயும் எப்போதும் பாடலில், மகுடி இசையைப் போட்டு நம்மையும் தலையாட்ட வைத்திருப்பார். போதாக்குறைக்கு ரஜினி சண்டையிடும் போது அதற்கு ஒரு பாட்டையும் போட்டிருப்பார். சம்போ பாட்டு, எம்.எஸ்.வி. வழங்கிய போனஸ். கண்ணதாசனின் பாடல்கள் கூடுதல் சுவை. அதீத தித்திப்பு. 
 ‘அன்பரே... அதென்ன அப்படியொரு பூகம்பத்தை என் மனதில் ஏற்படுத்திவிட்டீர்கள்‘ என்று ரஜினிக்கு வந்திருக்கும் கேசட், அதகளம் பண்ணிவிடும். 
 கமல் ஜெயப்ரதாவிடம் கேட்க, அதற்கு இல்லை என்று தலையாட்டிவிட்டு அப்படியே மெல்ல மெல்ல ஆமாம் ஆமாம் என்பது போலத் தலையாட்டுவார். கடைசியில் ஜெயப்பிரதா கேள்வி கேட்கும்போது, விழும் கண்ணீரை அடக்கிக்கொண்டு, இல்லை இல்லை என்பது போல தலையாட்டுவார். அப்படியே மெல்ல மெல்ல ஆமாம் என்பது போல் மாற்றித் தலையசைக்கும் போது, அந்த பாலசந்தர் டச்சில் கரைந்துவிடுவோம் நாம்! 
  கமலும் ரஜினியும் ஜெயப்பிரதாவும் கே.பாலசந்தரும் எம்.எஸ்.வி.யும் எப்போதும் நினைக்கும்படி செய்திருப்பார்கள். நினைத்தாலே இனிக்கும் படத்தை எப்போதும் நினைக்கலாம். நினைத்தாலே இனிக்கும். பாடல் மொத்தமும் தேன். தேனிசை மழையில் எப்போதும் நனையலாம். நினைத்தாலும் இனிக்கும்; கேட்டாலும் இனிக்கும்! 


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close