[X] Close

 தலைவாழை இசை...     எம்.எஸ்.வி. வாழ்க!  


msv-birthday

இசை ஓவியம் எம்.எஸ்.வி (ஓவியம்: பாரதிராஜா)

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Jun, 2018 10:40 am
  • அ+ அ-

இசையை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். காற்றுக்கு எப்படித் தடையில்லையோ... அப்படித்தான் இசைக்கும் தடையில்லை. இசையை ரசிப்பதற்கும் எல்லையில்லை. அப்படியான இசையை, எல்லா தரப்பு மக்களும் ரசிக்கவைத்த புண்ணியம், இசை தந்த இரட்டிப்பு மகிழ்ச்சி, அந்த இருவரைச் சேரும்.

அதுவரை இருந்த திரை இசையில் நளினத்தை இன்னும் புகுத்தினார்கள். நவீனத்தை இன்னொரு டீஸ்பூன் சேர்த்துக் கொடுத்தார்கள். அதை பக்கெட் பக்கெட்டாக, அண்டா அண்டாவாக குடித்துக் கரைந்து இசையில் கலந்தார்கள் ரசிகர்கள். அத்தனைப் பெருமைக்கும் உரியவர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி. அவர்களில் விஸ்வநாதனுக்கு என தனித்த அடையாளமும் உண்டு. அவரின் இன்னொரு பெயர் எம்.எஸ்.வி.! 

மெல்லிசை ராணியின் மன்னர் எம்.எஸ்.வி. எந்த சங்கீதத்தையும் இவர் கரம் பட்டு, கையசைவு பட்டு வந்தாலே, தமிழகத்தின் காதுகளில் புகுந்து, மனதில் இனம் புரியாத சந்தோஷமும் அமைதியும் குடிகொள்ளும். சங்கீதத்தின் பல சாளரங்களைத் திறந்துவிட்ட அசாதாரண இசைக்குச் சொந்தக்காரர். 

படத்துக்குத் தகுந்தது போல் மெட்டு போடுவார்கள். பாட்டுக்குத் தகுந்தது மாதிரி மெட்டு அமைப்பார்கள். இவர், நடிகர்களுக்குத் தகுந்தது போலவும் மெட்டு அமைக்கும் ஜித்தர். அதனால்தான், எம்ஜிஆரின் ஹிட் பாடல்களிலும் சிவாஜியின் முக்கியமான பாடல்களிலும் ஜெமினிகணேசனின் பிரபலமான பாடல்களிலும் முத்துராமனின் முக்கியப் பாடல்களிலும் இவரின் பாடல்கள் தனிமுத்திரையுடன் இருக்கும். அந்த முத்திரையைக் கண்கள் மூடிக் கேட்கும் போது, தழையத்தழைய தெருவைக் கூட்டுகிற அந்த வேஷ்டி கட்டுகிற ஸ்டைலும் மழுங்க எடுத்த பளீர் முகமும் நெற்றியின் சந்தனமும் குங்குமமும் நம் எதிரே முகமாய் விரியும். நாமும் முகமன் கூறி, பாடலை முணுமுணுப்பதில் கிறங்கிவிடுவோம். 

எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கி விடுகிற யுக்தியை விரல்களில் வைத்திருக்கும் வித்தைக்காரர் எம்.எஸ்.வி. 

எங்கவீட்டுபிள்ளையில் ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே‘ என்றொரு பாடல். டிரிபிள் பேங்கோஸின் அடியில் சொக்கிவிடுவோம். ‘நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெல்லமெல்லவே புரியும்‘ என்ற வரிகளைச் சொல்லும் மெட்டில், காதலின் சுகத்தையும் இசையின் சுகானுபவத்தையும் கலந்துகட்டித் தந்திருப்பார். 

பச்சைவிளக்கு என்றொரு படம். சிவாஜி நடித்தது. அதில் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது‘ பாடல். முன்னதாக, மங்கல வாத்தியத்தை இசைக்கவிட்டிருப்பார். சிவாஜியை திரையில் நடக்கவிட்டிருப்பார்கள். முகம் முழுக்க புன்னகையுடன் தங்கையின் எதிர்காலக் கனவில் சிவாஜி இருப்பதை, அந்த இசையே நமக்குச் சொல்லிவிடும். 

றெக்கை இல்லாமல் பறக்கமுடியுமா. முடியும். வானில் ஒரு ரவுண்டு பறந்துவிட்டு வரமுடியுமா. அதுவும் சாத்தியம். எப்படி? ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ‘அதோ அந்தப் பறவை போல் வாழவேண்டும்‘ என்ற பாட்டின் இசையைக் கேளுங்கள். அப்படிப் பறந்துவிட்டு, இப்படியாக வந்து இறங்குவோம்; கிறங்குவோம். 

அதிலும் ஹம்மிங்கில் ஜிம்மிக்ஸ் காட்டுகிற ஜாலம் அவருடைய ஸ்டைல். இதேபாடலில், ‘லலாலா...  லலாலா... லலலலலலலல்லா‘ என்று ஹம்மிங் போட்டிருப்பார். 

சர்வம் சுந்தரம் படம். நாகேஷ் ஹீரோ. நடிகராகவே நடித்திருப்பார். ‘அவளுக்கென்ன... அழகிய முகம் அவளுக்கென்ன...‘ என்ற பாடலில் பாடகர்களின் குரல்களுடன் வாத்தியங்களும் பாடிக்கொண்டே வரும். இந்தப் பாடலைக் கேட்கும் போது, அந்த இசையையும் நம் வாயாலேயே பாடவைத்துவிடுவார் எம்.எஸ்.வி. 

என்னைப் போல் ஒருவன் படத்தில், வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும் பாட்டும், ராஜபார்ட் ரங்கதுரையின் மதனமாளிகையில்... பாட்டும் நம்மை என்னவோ செய்யும். எம்.ஜி.ஆருக்கு ‘எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள். என்னென்று சொல்லத் தெரியாமலே...‘ என்ற பாடல், நம்மையும் எம்ஜிஆருடன் சேர்ந்து காதல் செய்யவைத்துவிடும். 

காதலிக்க நேரமில்லை படத்தில் அனுபவம் புதுமை பாடலில், ‘ராராராரா ராரா...‘ என்றும் விசில் சத்தமும் கொடுத்திருப்பார்.  பாசமலர் படத்தில், மலர்ந்தும் மலராத பாதிமலர் போல பாடலில் முந்தைய இசையே ஒரு மென்சோகத்தை நமக்குள் கடத்திவிடும், உணர்ந்திருக்கிறீர்களா? அதேபோல், பாடலின் நிறைவில், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அன்பே ஆரிராரோ ஆரிராரோ... ஆரிராரிரோ..‘ என்று பாசத்துக்கும் இதுமாதிரியான இசைக்கும் நம்மை ஏங்கச் செய்துவிடுவார். 

குடியிருந்த கோவில் படத்தில், ‘என்னைத் தெரியுமா‘ பாடல். ‘உங்கள் ரசிகன் நல்ல ரசிகன்‘ என்றொரு கோரஸ் வரும். அந்த கோரஸ் கூட்டத்தில் நாமும் கோரஸாகிவிடுவோம். பெரிய இடத்துப் பெண் படத்தில், பாரப்பா பழநியப்பா பாடலில் டுர்டுர்... என்றெல்லாம் பாடவைத்திருப்பார். நாமும் மாட்டுவண்டியில் ஏறிக்கொள்வோம். 

பாலும்பழமும் படத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில்... ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம். என்றும் அந்த வாத்தியக்கருவிகளின் குழைவும் தடக்கென்று தடதடவென ஓடி வழிகிற இசையும் ஸ்பெஷல் சுகம். 

பட்டிகாடா பட்டணமா படத்தின் பிப்பீப்பீ டும்டும் பிப்பீப்பீ டும்டும் பிப்பீ டும்டும்டும்..., ஊட்டி வரை உறவு படத்தில், பூமாலையில் ஓர் மல்லிகை பாடலின் முந்தைய ஹம்மிங்கும்... நடுவே ஆஆஆஆஆஆஆஆ... என்கிற ஹம்மிங்கும் தயிர் வடையின் மேலே தூவுகிற காராபூந்திகள்.

தினசரி பேப்பரைக் கொடுத்தால் கூட, அதற்கு ஒரு மெட்டைப் போட்டுவிடுவார் என்பார்கள். நெஞ்சிருக்கும் வரை படத்தில்,  பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி என்ற பாடலின் நடுவே, கல்யாணப் பத்திரிகையை அப்படியே வாசிக்கச் செய்து மெட்டாக்கியிருப்பார். அதேபடத்தின் முத்துக்களோ கண்கள் பாடல், அந்தக் காலத்துக் காதலர்களின் டாப் டென் ரகசிய கீதங்கள். 

அவரின் விரல்களைப் போலவே குரலும் தனி ரவுசு பண்ணும். ரகளை பண்ணும். சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் அவரே பாடியிருப்பார். ‘காதல் என்பது மழையானால் அவள் கண்கள்தானே நீர்மேகம்‘ என்ற வரிகளிலும்... ‘சொல்லத்தான்...‘ என்ற வரியிலும் அத்தனையையும் சொல்லி நிறைத்திருப்பார் எம்.எஸ்.வி.

புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ... பாடலின் முந்தைய ஹம்மிங், எதுஎதையோ ஞாபகத்துக்குக் கொண்டுவந்துவிடும். இதோ எந்தன் தெய்வம் பாடலும் அப்படித்தான். நாளை நமதே படத்தில், ‘அன்பு மலர்களே...‘ பாட்டு தனி எனர்ஜி. 

இயக்குநர்கள் ஸ்ரீதரும் பாலசந்தரும் எம்.எஸ்.வி.யின் காதலர்கள். ரசித்து ரசித்து அவரிடம் இசையை வாங்கியிருப்பார்கள். சிவந்த மண் படத்தில் ஒரு ராஜா ராணியிடம் பாட்டை கேட்டிருப்பீர்கள். தயவுசெய்து இன்னொரு முறை கேளுங்கள். அவரின் இசை எங்கெல்லாம் சென்றிருக்கும். ஒரே பாடலுக்குள் எத்தனை மெட்டுகளை செருகியிருப்பார். என்னென்ன வித்தைகளையெல்லாம் கையாண்டிருப்பார் என்பது தெரியும். 

எங்கவீட்டுபிள்ளையிலும் நான் ஆணையிட்டால் என்று சாட்டைச் சத்தம் கொடுப்பார். சிவந்த மண்ணிலும் பட்டத்து ராணி என்று சாட்டைச் சத்தம் தருவார். இரண்டுக்குமான வித்தியாச நிகழ்வுகளை சாட்டைச் சொடுக்கிலும் சத்தத்திலும் தந்திருப்பார் அசகாய விஸ்வநாதன். 
  வறுமையின் நிறம் சிகப்பின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது இசையின் தலைவாழை ருசி. 

இசைக்கு இன்னொரு பெயர் வைக்கலாம் என்றால் அது... எம்.எஸ்.வி. எம்.எஸ்.வி.க்கு இன்னொரு பெயர் வைக்கலாம் என்றால் இசை. மெல்லிசை! 

இசையில் ராஜாங்கம் நடத்திய எம்.எஸ்.வி.யின் பிறந்தநாளில்... அவரைப் போற்றுவோம். அவரின் பாடல்களை இப்போதும் கேட்போம். எப்போதும் கேட்போம். கேட்டு இன்புறுவோம்! 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close