[X] Close

விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அமலா பால் விளக்கம்


  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 12:26 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்துள்ளார் அமலா பால்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், ‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, வில்லனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இதன் படப்பிடிப்பு, கடந்த 14-ம் தேதி பழநியில் தொடங்கியது. எஸ்.பி.ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். விஜய் சேதுபதி - மகிழ் திருமேனி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பின்னர், ஊட்டியில் முக்கியக் காட்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்தப் படத்தில், அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தேதிகள் பிரச்சினை காரணமாக அமலா பால் இதிலிருந்து விலகுவதாகவும், அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஊட்டியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் மேகா ஆகாஷ் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

அதில், “நான் தற்போது ‘விஜய் சேதுபதி 33’ படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். தயாரிப்பு தரப்புக்கு நான் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று அவர்கள் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இதை நினைத்து மிகப்பெரிய ஏமாற்றத்தில் இதை நான் எழுதுகிறேன்.

அவர்கள் சொல்லியிருக்கும் இந்தக் காரணம், இதுவரை நான் நடித்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேனா, இல்லையா என்று  என்னை நிறைய யோசிக்க வைத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள், மூத்தவர்கள், துறையில் இருக்கும் நட்புகள் என யாரும் இதுவரை இதுபோன்ற குற்றச்சாட்டை என்மீது வைத்ததில்லை. இத்தனைக்கும் நான் இதுவரை எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் எனது எல்லா தயாரிப்பு தரப்புக்கும் ஆதரவாக இருந்திருக்கிறேன்.

உதாரணத்துக்கு, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு நான் எனது ஒருபகுதி சம்பளத்தை வாங்கிக்கொள்ளவே இல்லை. அவ்வளவு ஏன்... தயாரிப்பாளர் பணப் பிரச்சினையில் இருந்ததால், அவருக்கு நான் கொஞ்சம் கடன் தந்திருக்கிறேன். ஆனால், எனது பாக்கி சம்பளத்தைக் கேட்டோ, கடனைத் திருப்பிக் கேட்டோ சட்ட ரீதியாக எந்தப் புகாரையும் நான் கொடுக்கவில்லை. அதை அப்படியே விட்டுவிட முடிவெடுத்தேன். ஏனென்றால், தயாரிப்பாளர் நஷ்டமடைந்துள்ளார் என்று எனக்குத் தெரியும்.

அடுத்து வெளிவரவுள்ள ‘அதோ அந்தப் பறவை போல’ படத்தின் படப்பிடிப்பில், நான் ஒரு எளிமையான கிராமத்து வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டேன். பக்கத்தில் இருக்கும் நகரத்தில் அதைவிடச் சிறந்த அறையில் நான் தங்கியிருந்தால், அது இந்தக் குறைந்த பட்ஜெட் படத்தின் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்வதாய் இருந்திருக்கும். தொடர்ந்து இரவு - பகலாகப் பல நாட்கள் நாங்கள் கடுமையான சண்டைக் காட்சிகளைப் படம்பிடித்தோம். படப்பிடிப்புக்காக செலவழிக்கப்பட்ட பணம் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, எனது தசைநார் கிழிந்த பிறகும்கூட நான் கூடுதலாக ஐந்து மணி நேரம் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் வந்தேன். படத்தின் தரத்தில் சமரசம் கூடாது என்பதற்காக, படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் மொத்தச் செலவையும் நான் ஏற்றுக்கொண்டேன்.

‘ஆடை’ படத்தைப் பொறுத்தவரை, குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டேன். படம் வெளியானதும் கிடைக்கும் லாபத்தில் பங்கு வருமாறு தயாரிப்பு தரப்புடன் ஒப்பந்தம் செய்து, வெறும் முன்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு முழு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தேன். இதுவரை நான் வேலைசெய்த அனைத்துப் படங்களிலும், படம் சிறப்பாக வருவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என தயாரிப்பு தரப்பை வலியுறுத்தியிருக்கிறேனே தவிர, எனது தேவைகளுக்கு முன்னுரிமை தந்தே இல்லை.

என் தரப்பிலும் பண ரீதியான பிரச்சினை இருந்தாலும், தரமான சினிமாவைத் தரவேண்டும், ஒரு நேரத்தில் ஒரு படம்தான் தரவேண்டும் என்று என் நோக்கத்துக்காக ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன்.

நான் தற்போது மும்பையில் ‘விஜய் சேதுபதி 33’ படத்துக்காக ஆடைகள் வாங்கி, படத்தில் எனது ஆடை மற்றும் தோற்றத்துக்கான வடிவமைப்பைச் செய்து கொண்டிருக்கிறேன். சந்திரா புரொடக்‌ஷன்ஸ் எப்போதும் பட்ஜெட் பற்றிப் புலம்புபவர்கள் என்பதால், இந்தப் பயணம், தங்கும் செலவு என அனைத்தும் என்னுடையதே.

ஆனால், திடீரென தயாரிப்பாளர் ரத்தினவேலு குமார், எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில், எனது நிபந்தனைகள் சந்திரா புரொடக்‌ஷனுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால், நான் இந்தப் படத்துக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நான் ஊட்டியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யக் கேட்டதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் பிறகுதான் புரிந்தது. ஆனால், அவர் முடிவெடுக்கும் முன் என்னை அழைத்துப் பேசவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கும் ஒரு படத்திலிருந்து என்னை நீக்க அவசரமாக முடிவெடுத்துவிட்டார்.

இந்தத் தேவையில்லாத திடீர் முடிவு ஏனென்று எனக்குப் புரியவில்லை. இதற்கு ஒரே காரணமாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுவது என்னவென்றால், அவர்கள் இந்த முடிவை ‘ஆடை’ டீசர் வெளிவந்த பிறகு எடுத்திருக்கக்கூடும் என்பதே. (ஒருவேளை அதுதான் காரணம் என்றால்) இது சந்திரா புரொடக்‌ஷன்ஸின் ஆணாதிக்க, அகந்தையான பழமைவாத மனநிலையையே காட்டுகிறது. ஆதாரமில்லாத பல புரளிகள் மூலம் துறையில் என்னைப் பற்றிய பிம்பம் கெடுக்கப்படுகிறது.

நடிப்பென்று வந்தால் நான் எதற்கும் தயங்காத ஒரு நடிகை. எனது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்யவேண்டும் என்று நினைப்பேன். அதை, இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து செய்வேன். ஒரு நடிகரின் உணர்வு ரீதியான முதலீட்டைத் துச்சமென்று நினைப்பவர்களைப் பார்க்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது. ஒரு படத்தை ஒப்புக்கொண்டவுடன், அதற்காக ஒரு நடிகரின் உடல் ரீதியான மற்றும் பணம் சார்ந்த முயற்சிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நிறைய சொல்லலாம்.

தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல சினிமாவுக்குத் தகுதியானவர்கள். ஆனால், பழமைவாத, ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட நிறைய தயாரிப்பு நிறுவனங்கள், அவர்கள் மனநிலையை மாற்றிக்கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும். வழக்கமான படங்கள் மட்டுமே ஓடும் நாட்கள் எல்லாம் போய்விட்டன. இன்று மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வலுவான கதை கொண்ட படங்களே பல சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றுவருகின்றன. எதிர்த்து நிற்க யாராவது வரவேண்டும். கோலியாத்தை எதிர்கொண்ட தாவீத் போல, நம்மைப் பிடித்திருக்கும் இந்த மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள நான் தயார்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “உங்களுக்கு எதிராக எதுவுமில்லை விஜய் சேதுபதி. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தேன். எனது இந்த அறிக்கை, எனது மிகப்பெரிய வருத்தத்தில், என்னைப் பற்றி சந்திரா புரொடக்‌ஷன்ஸ் பரப்பிவரும் புரளிகளைப் பற்றித் தெளிவுபடுத்த எழுதப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளார் அமலா பால்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close