[X] Close

‘சிவகார்த்திகேயன் 17’ படத்தின் கதை, பின்னால் நிறைய பிரச்சினை செய்யாது: விக்னேஷ் சிவன்


17

  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 15:50 pm
  • அ+ அ-

‘சிவகார்த்திகேயன் 17’ படத்தின் கதை, பின்னால் நிறைய பிரச்சினை செய்யாது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

‘போடா போடி’, ‘நானும் ரெளடிதான்’ மற்றும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். ‘போடா போடி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களிலும் நடித்திருப்பதோடு, ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார்.

அடுத்ததாக, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதற்கான திரைக்கதைப் பணிகளில் ஈடுபட்டுவந்த விக்னேஷ் சிவன், தற்போது அந்தப் பணி முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “ ‘சிவகார்த்திகேயன் 17’ படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. படத்தின் திரைக்கதை என்பது பறவைகள் போல என எப்போதும் நினைப்பேன். அவற்றைச் சுதந்திரமாக விடவேண்டும். அப்போதுதான் அவை பறந்து, தெரியாத எல்லைகளைத் தொடும்.

பின்னர், சில திரைக்கதைகள் பறவைகள் போல என்றும், சில பட்டாம்பூச்சிகள் போல என்றும், சில டைனோசர்கள் போல என்றும் உணர்ந்தேன். சிலவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்தால்தான் இறுதிசெய்ய முடியும். பின்னால், நிறைய பிரச்சினை செய்யாது. இது அந்த வகையைச் சேர்ந்தது.

எல்லாத் திரைக்கதைகளும் உங்கள் மனதுக்கு நெருக்கமானவைதான். இது என் மனதையே திறந்துவிட்டது. என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது, உணர்ச்சிவசப்பட வைத்தது, எப்படி வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் நம்ப முடியாதவையாக இருந்தும் சாத்தியப்படும் என்று யோசிக்க வைத்தது.

பயணப்பட்டு ஒரு சில நாட்களில் எழுதலாம் என்பதுதான் முதலில் திட்டம். ஆனால், இது அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு விட்டது. எதிர்பாராததுதான்... ஆனால், என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கேன்ஸில் தொடங்கி, சில தினங்களில் பல நாடுகளைக் கடந்துவிட்டேன். போக்குவரத்துக்குண்டான அனைத்து விதமான வாகனங்களிலும் பயணித்துவிட்டேன்.

இயற்கை உடனிருக்க, அதன் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவங்கள் நம் மூளையையும் மனதையும் ஊக்கப்படுத்துகின்றன (பயணப்பட்டால்தான் இதை நம்ப முடியும்). நிறைய சூரிய உதயங்கள், அஸ்தமனங்கள், அலைகள், தென்றல், பல்வேறு முகங்கள், வாசனைகள், இசை, வித்தியாசமான மொழிகள், கலாச்சாரம், பார்க்காத வண்ணங்கள், தெரியாத ருசி, தனித்துவமான கலை மற்றும் கற்பனைகள், ஒவ்வொரு நாளும் நடக்கும் விஷயங்கள், அவற்றுக்கு உரிய கவனத்தைக் கொடுப்பது, சரியான நேரத்தில் சரியான இடத்திலிருந்து, சரியான விஷயங்களைப் பார்ப்பது என அனைத்துமே முக்கியம்.

வாழ்க்கை என்பதே நல்ல நினைவுகளையும், நல்ல அனுபவங்களையும் சேகரிப்பதுதானே... அந்தச் சிந்தனையுடன், எனது நோக்கம் பூர்த்தியாகிவிட்டது. எனது பயணம் இப்போது ஓய்வெடுத்துக் கொள்கிறது. குறிப்பிட்ட இந்தக் கதையின் மீது நான் முழு காதல் கொண்டிருக்கிறேன், உற்சாகத்துடன் இருக்கிறேன். உலகம் முழுவதிலும் எனக்குக் கிடைத்த நல்ல அனுபவங்களுடனும், நேர்மறைச் சிந்தனைகளுடனும் விரைவில் எனது அன்பார்ந்த அணியுடன் ‘எஸ்கே17’ படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாக இருக்கிறேன்.

ராட்சசத்தனமான உழைப்பை ஆரம்பிக்க, சென்னைக்குள் சந்தோஷமாக நுழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close