[X] Close

ஹேப்பி பர்த் டே விஜய்!


happy-birthday-vijay

  • வி.ராம்ஜி
  • Posted: 22 Jun, 2018 09:46 am
  • அ+ அ-

இன்றைய தேதிக்கு, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் பிடித்த நடிகராக வளர்ந்து நிற்கிறார்... உயரத்தில். அவர்... இளைய தளபதி என்றும் தளபதி என்றும் அழைக்கப்பட்ட, அழைக்கப்படுகிற விஜய்.

அரைநிஜார் போட்ட பருவத்திலேயே அப்பாவின் படங்களில், சின்னச்சின்ன வேடங்களில், வேடம் என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு முகம் காட்டி வந்தவர்தான் விஜய். மீசை முளைக்க எட்டிப்பார்க்கும் போதே, அப்பா இயக்க இவர் ஹீரோவாக நடிக்க, நாளைய தீர்ப்பு பிள்ளையார் சுழி போட்டது. நாளைய தீர்ப்பு என்பதை சரியாக கணித்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் ரசிகர்கள், எப்போதும் போடணும் வணக்கம்.

’அப்பா டைரக்டரு. அப்புறம் என்னய்யா குறைச்சலு’ என்று ஏகப்பட்ட விமர்சனங்கள். ‘இந்த மூஞ்சிலாம் நடிக்க வந்துருக்குதே’ என்று பத்திரிகைகள் விமர்சனம் பண்ணி, கடுப்பேற்றியது. ‘விஜய் படம் ஓடணும்னா, கிளாமர் இருக்கணும். கிளாமருக்கு சங்கவி, யுவராணின்னு யாராவது இருக்கணும்’ என்று சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றினார்கள்.

ஆனால் அப்பா டைரக்டர் என்பது விசிட்டிங் கார்டு. முகத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் போதும். எந்தப் படத்தில்தான், யார்தான் கிளாமராக வரவில்லை’ என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு, தன் ரூட்டில், போட்டுவைத்திருந்த ரூட்டில் போய்க்கொண்டே இருந்தார் விஜய்.

அப்போதுதான் அவருக்கு கடவுள் விக்ரமன் ரூபத்தில் வந்தார். டைரக்டர் விக்ரமனின் பூவே உனக்காக வெள்ளிவிழாப் படமானது. மேலும் விஜய் ரசிகர் வட்டம் பெரிதானது. இந்தப் படத்தைப் பிடிக்கும். படத்துல நடிச்சிருந்த விஜய்யையும் பிடிக்கும் என்று ஒரு கூட்டம் கிளம்பியது. அவரின் வாழ்க்கையில் பூவே உனக்காகவுக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது.

அப்பா எடுத்த படங்களும் வசூல் கொட்டியது. கூடவே இன்னொரு காரியமும் செய்தது. அவரின் படங்களால், விஜய் பி அண்ட் சி ஆடியன்ஸிடம் மிகச்சுலபமாக ரீச்சானார். நாலு படம் வெளியாகும். ஒரு படம் சூப்பர்ஹிட்டாகும். ஆனால் நாலுபடத்தில் மூணுபடம் ஹிட்டானது, விஜய்யின் ராசியோ என்னவோ. லவ்டுடே இன்னொரு உயரத்துக்கு கொண்டுசேர்த்தது.

துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, பிரியமுடன் என்று வரிசையாய் வந்து ஹிட்மழை பொழிந்த அதேவேளையில் விஜய்க்கு மிகப்பெரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்தது... காதலுக்கு மரியாதையில்! இயக்குநர் பாசில் மலையாளத்தில் எடுத்து வெற்றி கண்ட படத்தை, தமிழில் எடுத்தார். அதே வெற்றியை சுவைத்தார். மற்றவருக்கும் சுவைக்கக் கொடுத்தார்.

விஜய்யின் இன்னொரு வெற்றியாக அவர்கள் ரசிகர்கள் வியந்து சொல்வது என்ன தெரியுமா.

படத்தில் அலப்பறையைக் கொடுத்து, அஜால்குஜால் செய்து, செம ஆட்டம் போட்டு, பஞ்ச் டயலாக்குகள் பேசுகிற விஜய், நிஜத்தில் ஏதேனும் விழாக்களில் சாந்தசொரூபியாக இருப்பதே விஜய் மீதான இன்னுமான ஈர்ப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

பாசிலின் காதலுக்கு மரியாதை வெற்றி. அடுத்து கண்ணுக்குள் நிலவு தோல்வி. பிரபுதேவாவின் போக்கிரி பெரிய வெற்றியை விஜய்க்குக் கொடுத்தது. அடுத்து வந்த வில்லு, அறுந்துபோனது. குருவியையும் சுறாவையும் வேட்டைக்காரனையும் இன்றைக்கும் நெட்டிசன்கள் கலாய்த்து எடுக்கிறார்கள். ஆனால் அதேசமயம், விஜய் இன்னும் இன்னுமாக உயர்ந்துகொண்டே இருக்கிறார்.

கத்தி, துப்பாக்கி என ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், தெறி, மெர்சல் என அட்லி படங்கள் என்று எகிறியடிக்கிறார். விஜய் மாஸ் எனும் இடத்துக்கு வந்து வருஷங்களாகிவிட்டன.

தூத்துக்குடிக்கு சத்தமில்லாமல் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லி வந்தது, விஜய்க்கு இன்னுமொரு அந்தஸ்தைக் கொடுத்துவிட்டது என்கிறார்கள் ரசிகர்கள். உண்மைதான். எதுக்கெடுத்தாலும் கேலி செய்யும் நெட்டிசன் நண்பர்களே, இதைப் பாராட்டிக் கொண்டாடித்தீர்த்துவிட்டார்கள்.

கோடம்பாக்கத்தில் இருந்து பஸ் ஏறினால், அடுத்து தலைமைச்செயலகத்தில்தான் இறங்கவேண்டும் என்பது அங்கிருக்கும் சிலரின் எண்ணமாகவும் அதுவே தலைமைச் செயலகத்துக்கான பாதை என்பதாகவும் நினைத்துவிட்டார்கள் பலர். விஜய்யும் அந்த ரூட்டைப் பிடித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

எதுஎப்படியோ... எம்ஜிஆர், சிவாஜி, டிஎம்எஸ், எஸ்பிபி, கமல், ரஜினி போல,கடந்த பத்துப்பதினைந்து வருடங்களில், மக்கள் மனங்களில் நிற்கும் மூன்றெழுத்து விஜய்... இன்னும் இன்னும் வெற்றிக் கொடி பறக்கவிடட்டும்!

விஜய்யின் பிறந்தநாளில், அவரை மனதார வாழ்த்துவோம்!

ஹேப்பி பர்த் டே விஜய்!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close