[X] Close

டிக்... டிக்... டிக்... - அப்பவே அப்படி கதை!


tik-tik-tik-appave-appdi-kadhai

டிக்...டிக்...டிக்...

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Jun, 2018 17:29 pm
  • அ+ அ-

என்னதான் கிராமமாக இருந்தாலும் நகரத்தின் மீது ஓர் ஆசை வெளிப்படுவதும் நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமம் மீதான ஆச்சர்யங்களும் அதிசயங்களும் பிரமிப்பாக இருப்பதும் சகஜம்தானே. இயக்குநர் இமயம் என்று போற்றிக் கொண்டாடப்படும் பாரதிராஜாவும் கிராமத்தை அப்படியே இயல்பாகக் காட்டி, படங்கள் எடுத்து வந்தாலும் அவருக்குள் இன்னொரு முகம் இருந்தது. அது சிட்டி சப்ஜெக்ட். அதிலும் இன்னொரு விஷயத்தில் ஆர்வத்துடன் இருந்தார். க்ரைம் ப்ளஸ் சிட்டி சப்ஜெக்ட். அதுதான் டிக்... டிக்... டிக்..!

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் எடுத்த பிறகு கமலை வைத்து சிகப்பு ரோஜாக்கள் எனும் க்ரைம் த்ரில்லர் சிட்டி சப்ஜெக்ட் எடுத்தார். அதையடுத்து நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை என்றெல்லாம் ஒரு ரவுண்டு போய்விட்டு, மீண்டும் க்ரைம், சிட்டி, த்ரில்லர் என்று களமிறங்கினார். அதே கமலின் கூட்டணியுடன்!

மூன்று அழகிகள். ஒருவர் பாடகி, இன்னொரு பாப் டான்ஸர். அடுத்தவர் மாடலிங் பெண். தமிழகத்தில் உள்ள ஓபராய் எனும் பெருமுதலாளி, இப்படியான அழகிகளைத் தேர்வு செய்து, விழா எடுத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார். அங்கே, அவர்களுக்கு ஏதொவொரு விபத்தும் அந்த விபத்தால் ஆபரேஷனும் அந்த ஆபரேஷனின் போது உடலுக்குள் வைரங்களும் வைத்து தைத்து... என நூதனக் கடத்தல் நடந்துகொண்டிருக்கிற ஹைடெக் கடத்தல் கதைதான் டிக்...டிக்..டிக்..!

விளம்பரக் கம்பெனியின் புகைப்படக்கலைஞர் திலீப்பாக கமல். இங்கே ஒருவிஷயம்... திலீப் எனும் பெயர் பாரதிராஜாவுக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ. சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் கமலின் பெயர் திலீப். மூன்று அழகிகள். மாதவி, ராதா, ஸ்வப்னா. இவர்களில் ராதாவின் பெயர் ராதாவே. மாதவியின் பெயர் சாரதா. இங்கேயும் ஒரு விஷயம்... பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் பட ஸ்ரீதேவிக்கும் ஒருகைதியின் டைரி ரேவதிக்கும் சாரதா என்றே பெயர் வைத்திருந்தார் பாரதிராஜா.

சரி... நேரம் கடத்தாமல் டிக்... டிக்... டிக்...கிற்கு வருவோம்.

மூன்று பேரின் உடம்பிலும் ஆபரேஷன் செய்யப்பட்ட தழும்புகள். ஒருகட்டத்தில் ஏதோ விபரீதம் கமலுக்குத் தெரியவர... அதே நேரத்தில், ஸ்வப்னாவை கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்கு கமல் காரணம் என்று போலீஸ் தேடுகிறது. அவர் தப்பித்தாரா, நிரபராதி என்று நிரூபித்தாரா, ஓபராய் என்கிற வைரக்கடத்தல் பணமுதலையை என்ன செய்தார்... என்று திக்திக் நிமிஷங்களுடன் திரைக்கதை பரபரக்கிறது டிக்டிக்டிக் படத்தில்!

81ம் ஆண்டு வந்த படம். படம் வந்து 37 வருடங்களாகிவிட்டன. எண்பதுகளில் கமல் தனியழகு. பேரழகனாய் மயக்கினார். அந்த அடர்த்தியான மீசை, ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைல், சுள்ளாப்பும்சுறுசுறுப்பும் கொண்ட உடல்மொழி என்று தலையணைக்குக் கீழே பெண்கள் கமல் போட்டோவையும் ஆண்கள், சலூன் கடைக்குச் செல்லும் போது கமல் போட்டோவையும் வைத்துப் பார்த்துப்பார்த்து முடிவெட்டிக் கொண்ட காலம் அது.

அழகிகள் கதை. வைரக் கடத்தல் கதை. எனவே அழகிகள், வைரம் போல் தகதகத்தார்கள், கவர்ச்சியிலும் அழகிலும்! ஷ்யாம் சுந்தர் என்கிறவரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ’எனக்கு எல்லா தருமங்களும் தெரியும்; எல்லா நியாயங்களும் தெரியும்’ என்பார். அப்போது இது பேமஸ் டயலாக். அவருக்கு கையாளாக, ஆல் இன் ஆல் ஆளாக தியாகராஜன். நம்ம மம்பட்டியான் தியாகராஜன். நடுநடுவே யார்யாருக்கோ பாரதிராஜா குரல் கொடுத்திருப்பார்.  

நடுவே... மாதவிக்கும் கமலுக்குமான காதல் அழகிய கவிதைப் புத்தகம். அடிக்கடி முட்டிக்கொள்வதும் கோபப்படுவதும் பிறகு ஈஷிக்கொள்வதுமாக, கமலும் சரி, அந்தக் கண்களை வைத்துக்கொண்டு மாதவியும் சரி... காதல் ரசம் ததும்பச் செய்துவிடுவார்கள்.

ரெண்டுபேருக்கும் சண்டை. பேசவே மாட்டார் மாதவி. கமல், தாடியே வளர்த்துவிடுவார். ஒருநாள் ஆபீசுக்கு போன் வரும். ‘நான் ஆறுமணி ப்ளைட்டுக்கு சிலோன் போறேன். நாலரைக்கெல்லாம் வந்துருவேன். நீங்க அங்கே வரவேணாம். என்னைப் பாக்கவேணாம். எனக்கு பொக்கே கொடுக்கவேணாம். எனக்கு டாட்டா காட்டவேணாம். ஆறு மணிக்கு ப்ளைட்டு. நாலரைக்கெல்லாம் வந்துருவேன். வரவேணாம்’ என்று சொன்னதைக் கேட்டு, இன்னும் நொந்துபோவார் கமல். பிறகு கமலின் பாஸ் தேங்காய் சீனிவாசன் விளக்க, ஷேவெல்லாம் செய்துவிட்டு, ஜம்மென்று வருவார். ஆனால் லொடக்குக் கார். போவதற்குள், விமானம் சிலோனே போயிருக்கும் போல! இங்கே, காதலையும் அதற்குள் காமெடியையும் வைத்து ஸ்கிரிப்ட் ரெடி செய்யப்பட்டிருக்கும்.

அதேபோல், மூன்று அழகிகளில் ஒருவரான ராதாவின் வீட்டுக்கு வந்திருக்கும் கமல், அப்பா பற்றி கேட்பார். விட்டுட்டுப் போயிட்டார் என்பார். அம்மாவைக் கேட்பார். ஆஸ்துமாவால் படுத்தபடுக்கை என்பார். அண்ணன் தம்பி... என்பார். யாருமே இல்ல என்பார். கிளம்பும்போது, இனிமே யாராவது அண்ணன் இல்லியான்னு கேட்டா, இல்லேன்னு சொல்லிடாதே. அண்ணன் நானிருக்கேன் என்று சொல்ல, நெகிழ்ந்து போவார் ராதா. ஆக, கொஞ்சூண்டு செண்டிமெண்ட்டும் தூவியிருப்பார் பாரதிராஜா.

லேசான கழிவிரக்கம். தேங்காய் சீனிவாசன் வேறு தூபம் போட்டு போன் நம்பர் கொடுக்க, போதையில் ஸ்வப்னா வீட்டுக்குச் செல்ல, அங்கே நடக்கும் கூத்துக்கள், காமெடியாகவும் பயமாகவும் இருக்கும்படி அமைக்கப்பட்ட கதை. அந்த இடம் கொஞ்சம் நீளம்தான். ஆனாலும் முக்கியமான கட்டம் அது. அப்போதுதான், அங்கு நடப்பதுதான் கமலைச் சிக்கலில் தள்ளிவிடும்.

அடுத்தடுத்து டேக் ஆஃப் ஆகிற கதை, விறுவிறுப்பும் த்ரில்லிங்குமாக இருக்கும். பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன், அழகழகாய் படமாக்கியிருப்பார். ஸ்வப்னா இறந்ததும் கமல் அழுகையுடனும் பயத்துடனும் பண்ணுகிற ஒவ்வொரு செயல்களும் ஏக்ளாஸ். வசனங்கள் ஜாலியாகவும் கேலியாகவும் ரகளையாகவும் ரசனையாகவும் எழுதப்பட்டிருக்கும். கலைமணி வசனம்.

மனோபாலா, மணிவண்ணன், கே.ரங்கராஜ் என இன்றைக்கு வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர்கள் பலரும் இதில் உதவி இயக்குநர்கள். அப்புறம்... இரண்டுவிஷயம் கொசுறாக..! படத்தில் கமலுக்கான உடைகளை வடிவமைத்தவர் வாணி கமலஹாசன். அடுத்தது... படத்தின் தொடக்கத்தில் ஓர் அழகி கொல்லப்படுவார். அவர்... சரிகா.

கமல்தான் நாயகன் என்றாலும் இன்னொரு நாயகனும் இருக்கிறார். இசைஞானி இளையராஜா. கடிகாரமுள்ளின் சத்தத்தைக் கொண்டு டைட்டில் போடுகிற விதமும் ஓர் அலறலுடன் கூடிய டிரம்ஸ் இசையும் மிரட்டும். படம் மொத்தமும் ஒவ்வொரு காட்சியிலும் விதம்விதமான இசையால், நம்மைக் களவாடியிருப்பார் இளையராஜா.

பாடல்களும் அப்படித்தான். அதுவொரு நிலாக்காலம், பூமலர்ந்திட நடமிடும் பொன்மயிலே’, நேற்று இந்த நேரம் எனப் பாடல்கள் எல்லாமே இனிமை புஸ்வாணங்கள். வெடிக்கிற வன்மம் இல்லாமல், மெல்லிசாய் ஒளியைப் பரவவிடுகிற, சிதறவிடுகிற இசையை வழங்கியிருப்பார். இங்கேயும்... ஒரு கொசுறு சூப்பர் தகவல். டைட்டிலில் பாடியவர்கள் பட்டியலில், அறிமுகம் என்று ஒருவரின் பெயர் இடம்பெறும். அவர்... லதா ரஜினிகாந்த். நேற்று இந்த நேரம் என்று மிக அற்புதமாகப் பாடியிருப்பார்.

ஆனால் இத்தனை இருந்தும் அப்போது, வெளிவந்த சமயத்தில், பெரிதாகப் போகவில்லை. ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களில், டிக்டிக்டிக்கின் மேக்கிங்கை எல்லோரும் கொண்டாடவே செய்தார்கள்.

டிக்டிக்டிக்... கமல், பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் அற்புதமான படம். நமக்கு... அட்டகாச த்ரில்லர் ப்ளஸ் க்ரைம் ப்ளஸ் காதல் படம்!

இளையராஜா பிஜிஎம் ஜாலங்களுக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

முந்தைய அப்பவே அப்படி கதை படிக்க...

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close