[X] Close

காலத்தை வென்ற கண்ணதாசன் - இன்று கவியரசர் பிறந்தநாள்


  • வி.ராம்ஜி
  • Posted: 24 Jun, 2019 11:11 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

படத்துல பாட்டு எத்தனை? பாட்டெல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்டுக் கொள்கிற ரசிகர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் உலகில், இன்றைக்குப் பாடல்கள், அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஆனால், அப்போதெல்லாம் இப்படியில்லை. படத்துக்கு ஆழமான கதை இருக்கும். அதைக் கதையின் போக்கில் கேரக்டர்கள் உலவுவார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிப்பது போல், பாடல்கள் வைப்பார்கள். அந்தப் பாடல்கள், கதையைச் சொல்லும்; கதாபாத்திரங்களின் தன்மையைச் சொல்லும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, கதாபாத்திரங்களும் நம் மனதை, மனதின் துக்கஏக்கங்களைச் சொல்லும் விதமாக அமையும். இந்த ரசவாதத்தை மிகத் துல்லியமாகவும் அழகாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் நமக்குத் தந்தவர் கவியரசு கண்ணதாசன்.

வாழ்க்கை என்பது பிரமாண்டமானது. வாழ்வியல் என்பது அதைவிட பிரமாண்டம் கொண்டது. இவற்றை, மிக இலகுவாக நமக்குக் கடத்தி, நம்முள் இரண்டறக் கலந்த எழுத்துக்களைக் கொடுத்ததுதான் கவியரசரின் ஆகப்பெருஞ்சாதனை.

கண்ணதாசனுக்கு முன்பும் பாட்டெழுதினார்கள். பாடல்கள் மனதைக் கவர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுத்து தந்த தாக்கத்தை எந்தவொரு பாடல்களும் முன்னரும் தந்ததில்லை; பிறகும் அப்படியான பாடல்கள் வந்ததில்லை.

விரக்தியில் வாழப் பிடிக்காதவன், மனிதர்களால் ஏமாந்தவன், ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடலைக் கேட்டால் போதும்… மயிலிறகு ஆறுதலை அடைந்துவிடுவான். ஆத்மார்த்தமான தம்பதி, ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ பாட்டைக் கேட்டால், நெக்குருகிப் போய்விடுவார்கள்.

இன்றைக்கு அண்ணனும் தம்பியும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருக்கிறார்கள். ஆனால், அண்ணனுக்கும் தம்பிக்குமான பாசம் பிணைந்திருந்த காலத்தில், கொஞ்சம் குறைந்தாலும் துவண்டுவிடுகிற சூழலில், ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ பாடல், மிகப்பெரிய ஆறுதல் ப்ளஸ் நம்பிக்கை. ‘எங்க அண்ணன் இப்படித்தான்’ என்றும் ‘நல்லவேளை எங்க அண்ணன் இப்படிலாம் இல்ல’ என்றும் பாடலுடன் கலந்தார்கள்; பாட்டையும் கவிஞரையும் கொண்டாடினார்கள்.

அண்ணன் தம்பிக்கு மட்டுமா? தங்கைப் பாசத்துக்கு, ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே’ என்று ‘பாசமலர்’ பொழிந்திருப்பார் கவியரசர்.

கண்ணதாசனின் காதல் பாடல்கள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். அதேபோல், தத்துவப் பாடல்கள் என்று எழுதலாம். வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் தனியே எழுதலாம். குடும்ப உறவுகளைச் சொல்ல, ஏராளமான பக்கங்கள் வேண்டும். அவ்வளவு எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

‘இங்கு நீயொரு பாதி நானொரு பாதி – இதில்

யார் பிரிந்தாலும் வேதனை மீதி’ என்ற வரிகளை கண்ணதாசன் எழுத, சுசீலா பாட, கேட்கிற நம் கண்ணில் கண்ணீர் வழிந்தோடும்.

‘எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

இதற்கொரு மருந்தைக் கண்டேனா?’ என்ற வரிகளில், இழந்தவர்களை நினைத்துக் குமுறியவர்கள், ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.

‘செத்துப் போயிடலாம்’ என்ற நினைப்பில் இருப்பவர்கள், ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’ பாடலைக் கேட்டால் போதும். உற்சாகம் பீரிட்டுக் கிளம்பும். பிரிவையும் பிரிவு தரும் துயரத்தையும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலைக் கேட்டால், அந்தக் கதை நாயகியின் துக்கம், கண்ணதாசனின் எழுத்தில் பொங்கியிருக்கும். அது அப்படியே சுசீலாவின் குரலுக்குள் இறங்கி, நம் செவிகளுக்குள் இறங்கி, இம்சித்துவிடும்.

‘கடவுள் ஒருநாள் உலகைக் காண

தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதரையெல்லாம்

நலமா என்றாராம்.

ஒரு மனிதன் வாழ்க்கை இனிமையென்றான்

அடுத்தவனோ அதுவே கொடுமையென்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்’ என்று மனித குணங்களையும் இயற்கை அளித்திருக்கும் வரங்களையும் அத்தனை அழகாகச் சொல்லியிருப்பார்.

பீம்சிங், பந்துலு, ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாலசந்தர் படங்களில், பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. இரண்டரை மணி நேரக் கதையை, நாலரை நிமிஷப் பாடல் சூசகமாகச் சொல்லிவிடவேண்டும் என கே.பாலசந்தர் நினைத்தார். ‘ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது’ பாடல், ‘மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்வினில் முன்னேற்றம்’, ‘கேள்வியின் நாயகனே…’, ‘கம்பன் ஏமாந்தான்’, ’சிப்பி இருக்குது முத்து இருக்குது’ என்று எண்ணற்ற பாடல்களில், கவிஞர் அப்படியொரு பாய்ச்சல் பாடல்கள் கொடுத்திருப்பார். இதில், ‘வான் நிலா நிலா அல்ல’ மாதிரியான பாடல்களும் இருக்கின்றன.

கதைக்குத் தகுந்தது போலவும் பாட்டு எழுதுவார். காலத்துக்கு ஏற்றது போலவும் எழுதுவார். நாயகர்களுக்கு ஏற்ற மாதிரியும் எழுதுவார். ‘நலம்தானா நலம்தானா… உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்றும் உருகவைத்துவிடுவார்.

மனைவியிடம் பிரச்சினையா. பாட்டு உண்டு. குழந்தைகளைக் கொஞ்சவேண்டுமா. பாட்டு இருக்கிறது. வேலை இல்லையா, வேலையில் திறமை வெளிப்பட்டதா, திறமையைக் கண்டு எதிரிகள் உருவானார்களா, அவர்களால் சூழ்ச்சியா, சூழ்ச்சியால் நிம்மதியின்மையா, சூழ்ச்சியை வென்றெடுக்க போராட்டமா, போராட்டத்தில் வெற்றியா… இதுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குள் இருக்கிற சதுரங்க ஆட்டங்கள். இந்த எல்லாவற்றுக்கும் நமக்குப் பாட்டுப் போட்டுக்கொடுத்திருக்கிறார் கவிஞர். அதனால்தான் இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

இதோ… இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். கவிஞரைக் கொண்டாடுவோம். அவர் பாடல்களைப் பாடுவோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close