[X] Close

பாண்டவர் அணியில் நாசருக்கு மதிப்பில்லை: குட்டி பத்மினி


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 15:58 pm
  • அ+ அ-

பாண்டவர் அணியில் நாசருக்கு மதிப்பில்லை, கார்த்தியும் விஷாலும்தான் முடிவுகளை எடுக்கின்றனர் என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், இன்று (ஜூன் 23) காலை முதல் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்தத் தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

சுவாமி சங்கரதாஸ் அணியில் உப தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளார் குட்டி பத்மினி. இவர், கடந்த முறை பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

தற்போது அணி மாறியது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த குட்டி பத்மினி, விஷாலையோ அல்லது கார்த்தியையோ சந்தித்து கூடப் பேசமுடியவில்லை என்பதும் மாற்றத்துக்கான ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

“பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியலில் என்னைச் செயற்குழு உறுப்பினராகப் போடும்போது, ‘தயவுசெய்து நான் உங்களிடம் பேசவேண்டும்’ என்று சொன்னேன். 30 நாட்களாகக் கேட்கிறேன், என்னிடம் ஒரு நிமிடம் பேச முடியாதா? அப்படியென்றால் அவர்கள் என்னை மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?

எனக்கு மட்டுமில்லை, என்னை மாதிரி பல பேருக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பொதுக்குழுவில் சந்திக்கின்றனர், நான் இல்லையென்று சொல்லவில்லை. அவர்கள் ஹீரோ என்பதால் நிறைய பேர் மனதில் இடம்பெற்றுள்ளனர், என மனதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், ‘நேரில் சந்தித்துப் பேசவேண்டும்’ என விஷால், கார்த்தி இருவரிடமும் சொல்லியும்கூட, இருவரும் என்னைக் கூப்பிட்டுப் பேசவில்லை. ஷூட்டிங்கில் இருந்திருந்தால், அங்காவது என்னை வரச்சொல்லி பேசியிருக்கலாம்.

நாசரிடம் பேசலாம் என்றால், எனக்குத் தெரிந்து அங்கு நாசருக்கு மதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதுதான் உண்மை. கார்த்தியும் விஷாலும்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார் குட்டி பத்மினி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close