[X] Close

பயமும் பீதியும் என்னை ஆட்கொள்ளக் கூடாது: இர்பான் கான் உருக்கம்


fear-and-panic-should-not-overrule-me-and-make-me-miserable

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jun, 2018 11:11 am
  • அ+ அ-

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் தனது கேன்சர் நோய் குறித்து மவுனம் கலைத்திருக்கிறார். இர்பான் கானை தாக்கியுள்ள நோய் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் எதற்கும் பதிலளிக்காமல் ஒதுங்கியே இருந்த இர்பான் தற்போது உருக்கமான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

இர்பானின் தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் சினிமாக் காதலர்கள் கொண்டாடும் படம். பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஜுராசிக் வேர்ல்டு, தி ஜங்கிள் புக், அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் இர்பான் கான். அவரது யதார்த்தமான நடிப்புக்கு கோடானுகோடி ரசிகர்கள் உள்ளனர். 

யாரும் எதிர்பாராத நிலையில், இர்பானின் உடல்நிலை நலிவடைந்தது. மும்பை மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. அப்போதுதான் அவருக்கு மிகவும் அரியவகை நோயான நியூரோ எண்டோக்ரைன் கேன்சர் (neuroendocrine cancer) தாக்கப்பட்டது தெரியவந்தது. 

இந்த நோய் அவரது ரசிகர்களை மட்டுமல்ல இர்பானையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக ஊடக வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார் இர்பான். தற்போது தனது நோய் குறித்து மவுனம் கலைத்துள்ள இர்பான், "அதிதீவிர நியூரோ எண்டோக்ரைன் கேன்சர் (high-grade neuroendocrine cancer) என்ற நோயால் நான் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனது நாவில் புழங்காத இந்த வார்த்தை மிகவும் அரிதானதாம். இதைப்பற்றி இன்னும் நிறைய ஆய்வுகள்கூட செய்யவில்லை. அதனால், குறைந்த அளவே தகவல் இருக்கின்றன. அதேபோல் இதற்கான சிகிச்சையும் இன்னும் பரிச்சார்த்த முறையில்தான் இருக்கிறது. நான் சோதனைக்கூடத்தில் ட்ரையல் அண்ட் எரர் விளையாட்டில் சிக்கியிருக்கிறேன்.

இத்தகைய குழப்பமான, அதிர்ச்சியான, அச்சமூட்டக்கூடிய, பீதியடையச் செய்யும் சூழலில்தான் நான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். எனது மகனிடம் புலம்பிக்கொண்டிருக்கிறேன். என்னிடம் நானே எதிர்பார்க்கும் ஒரே ஒரு விஷயம், இந்த சூழலில் மேலும் சிக்கல்களுக்குள் நான் சிக்கிவிடக் கூடாது. பயமும் பீதியும் என்னை ஆட்கொள்ளக்கூடாது என்பதையே நான் அவனிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மருத்துவமனைக்குள் மிகவும் பலவீனமாக நான் நுழைந்தார். அடுத்தது என்னவென்று எந்த இலக்குமில்லை. நான் சென்ற மருத்துவமனை லண்டன் லார்ட்ஸ் மைதானத்துக்கு எதிராக இருந்தது. லார்ட்ஸ் மைதானம்தான் எனது மெக்கா. சிறுவயதிலிருந்தே நான் கனவு கண்ட இடம். மிகுந்த வலிக்கு இடையேயும் நான் விவியன் ரிச்சர்ட்ஸின் போஸ்டரைப் பார்த்தேன். நம்மை மீறிய சக்தியின் பராக்கிரமத்தை எண்ணி வியந்தேன். பேரண்டவெளியின் மகிமையை உணர்ந்தேன். அந்த மருத்துவமனை ஏன் எனக்குப் பிடித்த மைதானத்துக்கு முன்னால் இருக்க வேண்டும். எனக்கு ஏதோ உணர்த்தப்பட்டதுபோல் இருந்தது. நிலையாமை மட்டுமே நிலையானது என்பது புரிந்தது. எனது பலத்தை உணர்ந்து எனது விளையாட்டை நன்கு ஆட வேண்டும் என்பது புரிந்தது"

இவ்வாறு இர்பான் கான் உருக்கமாகப் பேசியுள்ளார்.

இர்பான் படத்தில் நடிக்கும்போது அவரது இயல்பான வசன வெளிப்பாடு காண்போரை உருக வைக்கும். நிஜத்திலும் அவரின் இந்த இயல்பான ஆழமான பேச்சு கண்ணீர் ததும்பச் செய்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close