[X] Close

கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்’ கோஷ்டி வாழ்க!- கரகாட்டக்காரனுக்கு 30 வயது!


30

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Jun, 2019 16:39 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

தமிழ் சினிமாவின் இந்த நீண்டநெடிய பயணத்தில், தலைமுறைகள் பல கடந்தும் மறக்கமுடியாத படங்கள் என்று பட்டியலிட்டால், ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் என்கிற வித்தியாசங்களைக் கடந்து, பல படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும். சின்ன நடிகர் படம், பெரிய நடிகரின் பிரமாண்டப் படம், மிகப்பெரிய கம்பெனி தயாரித்த படம், சோகப்படம், சுதந்திர வேட்கையை விதைத்த படம், புராணப்படம், இதிகாசப்படம், காமெடிப் படம், கருப்புவெள்ளைப் படம், சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் நல்ல படம், சுமாரான படம், வெற்றிப் படம், தோல்விப்படம் என்றெல்லாம் கூட அந்த மறக்கமுடியாத பட்டியலில் இருக்கும். அப்படிப் பட்டியலில் உள்ள படங்களில் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படமும் ஒன்று!

‘தில்லானா மோகனாம்பாள்’, ‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘உத்தமபுத்திரன்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘16 வயதினிலே’, ‘பில்லா’, ‘நாயகன்’, ‘ஒருதலைராகம்’, ‘மெளனகீதங்கள்’... என்று மனதில் பச்சை குத்தப்பட்டது போல், பச்சக்கென்று ஒட்டிக்கொண்டிருக்கும் படங்களின் வரிசையில் ‘கரகாட்டக்காரன்’ தனித்து நிற்கிறான்; ஆடுகிறான்.

இளையராஜாவைத் தெரியத் தொடங்கிய அடுத்த கட்டத்திலேயே கங்கை அமரன் பரிச்சயமானார். ‘16 வயதினிலே’ படத்தில் இவர் எழுதிய ‘செந்தூரப்பூவே’ பாடல்தான் இவரையும் கொண்டுசேர்த்தது. பாடகிக்கு தேசிய விருது கிடைத்தது, கூடுதல் அங்கீகாரம். ஆக, கங்கை அமரன் பாடலாசிரியராகத்தான் அறிமுகமானார்.

hqdefault.jpg 

அதன் பிறகு, வராத படத்துக்கு இசையமைப்பாளராக இன்னொரு முகம் காட்டினார். ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ முதல் படமாக அமைந்தது. அதன் பின்னர், இயக்குநர் கே.பாக்யராஜின் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ இன்று வரை எல்லோருக்கும் பிடித்த பாடல். இங்கே... இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

இதன் நடுவே, ‘புதிய வார்ப்புகள்’ படத்திலும் ‘பாமாருக்மணி’ படத்திலும் பாக்யராஜுக்கு டப்பிங் பேசினார் என்பது கொசுறுத் தகவல்.

82ம் ஆண்டு இயக்குநர் அவதாரம் எடுத்தார் கங்கை அமரன். ‘கோழி கூவுது’ முதல் படம். அண்ணன் இளையராஜாவின் இசையில், எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். வெள்ளிவிழாப் படம். அடுத்து நான்கைந்து படங்கள் இயக்கினார். பெரிய அளவில் பேசப்படவில்லை.

85ம் ஆண்டு, ராமராஜனை ஹீரோவாக்கி, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ இயக்கினார். பழையபடி புதிய வெற்றி; சில்வர் ஜுப்ளி. எட்டுத்திக்கும் பட்டையைக் கிளப்பியது படம். இதன் பிறகு மூன்று படங்கள். மூன்றுமே சுமார் ரகம்.

இதன் பின்னர், 1989ம் ஆண்டு, அதே ராமராஜனை நாயகனாக்கினார். புதிய நாயகியை, பழம்பெரும் நாயகியின் மகளை ஹீரோயினாக்கினார். அவர் பெயர் கனகா. வழக்கம்போல் கவுண்டமணி, செந்தில். வழக்கம்போலவே கிராமத்துக் கதை. வழக்கம்போலவே இளையராஜா இசை. வெற்றிக்குச் சொல்லவா வேண்டும்.

karakattakaran-movie.jpg 

வெற்றியென்றால்... உங்கள் வீட்டு வெற்றி எங்கள் வீட்டு வெற்றி இல்லை. தெறிக்கவிட்ட வெற்றி. அதிரிபுதிரி வெற்றி. மதுரையில் 350 நாட்களைக் கடந்து ஓடியது. திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் என பல ஊர்களிலும் 100 நாள், 150 நாள், 175 நாள் என போட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூல் மழை. ரசிகர்கள் படை.

படத்தைத் திரும்பப் பார்த்தார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். மூன்றாம் நாள் பார்த்துவிட்டு, முப்பதாம் நாள் திரும்பவும் பார்க்கப் போனவர்கள், படம் பார்க்க முடியாமல், ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டை மட்டும் பார்த்துவிட்டு வந்தார்கள்.

பாட்டுக்காகப் படம் பார்த்தார்கள். இசைக்காகப் படம் பார்த்தார்கள். கதைக்காக பார்த்தார்கள். பொழுதுபோக்கிற்காக பார்த்தார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, காமெடிக்காகப் பார்த்தார்கள். பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் கங்கை அமரன். இளையராஜா இசை. ‘படத்தின் வெற்றிக்கு இளையராஜா ஒருவர்தான் காரணம்’ என்று கங்கை அமரன் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி, சந்திரசேகர், கோகிலா, சண்முகசுந்தரம், சந்தானபாரதி என கேரக்டர்கள் அவ்வளவுதான். இவர்களுக்குள் ஒட்டிக்கொள்வதும் முரண்டு பிடிப்பதும் மூஞ்சியை தூக்கிவைத்துக் கொண்டிருப்பதும்தான் கதை, திரைக்கதை. கரகாட்டக்காரக் களத்தை எடுத்துக்கொண்டு, கிராமிய மணம் கமழக் கொடுத்ததுதான் முதல் வெற்றிக்கான படிக்கட்டுகள்.

டைட்டில் பாடல், ‘பாட்டாலே புத்தி சொன்னான்’. ‘மாங்குயிலே பூங்குயிலே’ இன்றைக்கும் பலரின் செல்போன்களில் காலர்டியூன். ‘குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா’ பாடலும் ‘முந்தி முந்தி விநாயகரே’ என்ற பாடலும் ‘ஊருவிட்டு ஊரு வந்து’, என்கிற பாடலும் ‘இந்த மான் உந்தன் சொந்தமான்’ பாடலும் ’மாரியம்மா மாரியம்மா’ என எல்லாப் பாடல்களும் ரீப்பீட்டு ரகம். ‘அட நம்ம இசைப்பா இது’ என்று மக்கள் படத்துடன் நெருக்கமானார்கள். இசைக்கு நெருக்கமானார்கள். இளையராஜாவுக்கு நெருக்கமானார்கள். கரகாட்டக்காரனுடன் இரண்டறக் கலந்தார்கள்.

‘சொப்பனசுந்தரி’ இன்றைக்கு காலை வரை கூட, சமூக வலைதளங்களில் டிரெண்டிங். இந்தப் பெயரை வைத்தே, பாட்டே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் காமெடியில் மிகப்பெரிய வரவேற்பு இங்கே கிடைத்தது. கூடவே புதுக்கூட்டணி கோவை சரளா.

பழத்துக்காக சிவகுடும்பச் சண்டை வந்ததை, ‘திருவிளையாடலில்’ பார்த்திருப்போம். அந்த மாம்பழச் சண்டைக்கு அடுத்து, வாழைப்பழ குளறுபடிதான்... நேற்றுப் பிறந்த குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிற காமெடி.

கலைப்படமா, நுணுக்கமான படமா, பிரமாதமான கதையா, சிறப்பான நடிப்பா என்றெல்லாம் பார்க்காமல், மக்கள் மனதில் குடியிருக்கிறதா என்று பார்த்தால், கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ இன்றைக்கும் ஓயாமல், உட்காராமல் ஆடிக்கொண்டிருக்கிறான்.

1989ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதி ரிலிசானது ‘கரகாட்டக்காரன்’. இதோ... படம் வெளியாகி 30 வருடங்களாகிவிட்டன. கிட்டத்தட்ட தலைமுறையைக் கடந்தும் இன்றைக்கும் டெளன்லோடு செய்து ஸ்டோரேஜ் செய்திருக்கும் படங்கள் லிஸ்ட்டில் வீட்டுக்குவீடு ‘கரகாட்டக்காரன்’ இருக்கிறான். தொலைக்காட்சிகளில், ஒளிபரப்பும் போதெல்லாம், ரிமோட்டை ஓரமாக வைத்துவிட்டு, மொத்தக் குடும்பமும் சண்டை சச்சரவு இல்லாமல், ஒற்றுமையாக, ஜாலியாக, கேலியாக... குடும்ப சகிதமாக... பார்க்கிறார்கள்.

கங்கை அமரனின் ‘கரகாட்டக்கார’ வெற்றியை கங்கை அமரன் இன்னும் தாண்டவில்லை. இப்போது ‘கரகாட்டக்காரன் 2’ எடுப்பதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் கங்கை அமரன்.

அப்படியொரு சாதனைக்கு நிகராக, வெள்ளி,சனி, ஞாயிறு மூன்று நாட்களைக் கடந்தும் முப்பது நாட்களைத் தாண்டியும் ‘கரகாட்டக்காரன் 2’ திரையில் ஓடட்டும்; வசூல் செய்யட்டும்.

முன்னதாக, ’கரகாட்டக்கார’ கோஷ்டி மொத்தத்துக்கும் நம்ம தமிழகம் சார்பா, வாழ்த்தைச் சொல்லி, இந்த கதராடையை பொன்னாடையாக பாவித்து, எல்லோர் நெஞ்சிலும் பணத்தைக் குத்தி, பாராட்டித்தள்ளுவோம், மக்களே!

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close