[X] Close

கோடம்பாக்கம் சந்திப்பு: வானிலிருந்து வந்தவர்!


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:41 am
  • அ+ அ-

வானிலிருந்து வந்தவர்!

‘கனா’ படத்தின் மூலம் தனது கல்லூரித் தோழன் அருண்ராஜா காமராஜை இயக்குநராக அறிமுகம் செய்தார் சிவகார்த்திகேயன். அவரது தயாரிப்பில் இன்று வெளியாகும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் தொலைக்காட்சித் தொகுப்பாளரான ரியோ ராஜைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

அவருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ஷிரின் காஞ்ச்வாலா ஒரு விமானப் பணிப்பெண். “இந்தப் படத்தைப் போல நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் வானில் பறப்பதை விட்டுவிட்டு நிரந்தரமாக நடிக்க வந்துவிடுவேன்” என்கிறார்.

அறிவியலும் ஆன்மிகமும்

அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கதைக்கருவுடன் தயாராகிவருகிறது ‘உடுக்கை’. ஸ்ரீ பாம்பன் புரொடக் ஷன்ஸ், பி.எம்.ஆர். பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலமித்ரன் எழுதி இயக்குகிறார்.

விபின், உமர், அங்கிதா உள்ளிட்ட புதுமுகங்களுடன் சஞ்சனா சிங், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். “தகவல் பரிமாற்றத்துக்காகக் கண்டறியப்பட்டு, இன்று பிரபலமாக இருக்கும் ஒரு நவீனத் தொழில்நுட்பம், ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டி போடுகிறது என்பதைப் புதிய கோணத்தில் அறிவியல் மற்றும் ஆன்மிக த்ரில்லர் வகை திரைப்படமாகத் தரவிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.

நான்காவது முறையாக…

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும், ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவற்றில் ‘தர்மதுரை’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது நான்காவது முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் படம் ‘க/பெ ரணசிங்கம்’.

அறிமுக இயக்குநர் பெ.விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தை, ‘அறம்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. ‘தர்மதுரை’ படத்தைப் போலவே கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகிவரும் படம் இது.

என் படத்தைப் போடாதீர்கள்

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, ‘போக்கிரி ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. விக்ராந்த், மிஷ்கின் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், “படக் குழுவினருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெறுகிறது.

ஆனால், அவர் படத்தைவிட என் படத்தைப் பெரிதாகப் போட்டிருக்கிறீர்கள். தேசத் தந்தையின் முன்னால் நான் ஒரு சிறுதுளி கூட கிடையாது. எனவே, இனிமேல் இந்தச் சுவரொட்டியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

புதிய ஜோடி!

யார் அதிக எண்ணிக்கையில் படங்களில் நடிப்பது என்பதில் தற்போது விஜய்சேதுபதிக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் போட்டி எனலாம். பட எண்ணிக்கை போலவே தனக்கு ஜோடியாகப் புதிய கதாநாயகிகளை அறிமுகப்படுத்துவதிலும் ஜி.வி.பிரகாஷ் கில்லாடிதான்.

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துவரும் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ரசிகர்களைக் கொண்ட ஈஷா ரெப்பா ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகி இருக்கிறார். இவர் கடந்த 2016-ல் வெளிவந்த ‘ஓய்’ படத்தின் மூலம் தமிழில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

இம்முறை ஜி.வி.பிரகாஷுடன் தனது அதிர்ஷ்டத்தைப் பரிசோதனை செய்து பார்க்கக் களமிறங்கிருக்கிறார். வெளிநாட்டுக்குப் பேய் ஒன்றை விரட்ட வரும் ஜி.வி.பிரகாஷ், பேய் பிடித்து ஆட்டும் பெண்ணையே காதலிக்கும் நகைச்சுவைக் கதைக்களத்துடன் தயாராகி வருகிறது இந்தப் படம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close