[X] Close

'சிந்துபாத்' 2-ம் பாதி முழுக்கவே க்ளைமாக்ஸ் தான்: விஜய் சேதுபதி


2

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 17:16 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'சிந்துபாத்' 2-ம் பாதி முழுக்கவே க்ளைமாக்ஸ் போல் தான் இருக்கும் என்று அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசினார்.

அருண் குமார் - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

அஞ்சலியைத் தவிர படக்குழுவினர் அனைவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் விஜய் சேதுபதி பேசும் போது, ” 'பண்ணையாரும் பத்மினியும்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அருண் உடனான அறிமுகம் நட்பாக மாறியது. அதன் பிறகு அவர் எனக்கு சவுகரியமான நண்பராக மாறினார். பிறகு அவரிடம், என்னைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து இயக்குவதற்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினேன். ஆனால், திரையுலகில் யாரும் அவரை நம்பவில்லை.

பிறகு நானே அழைத்து ‘சேதுபதி’ பட வாய்ப்பைக் கொடுத்தேன். அதன் பிறகு நானே சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லுமாறு வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த முயற்சியும் நடைபெறவில்லை. பிறகு மீண்டும் அவரை அழைத்து இந்தப் பட வாய்ப்பினை அளித்தேன். தற்போதும் இந்தப் படம் ஹிட் ஆன பிறகு வெளியில் சென்று வேறு நடிகர்களை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அருணின் தனிச்சிறப்பு என்னவென்றால் நாயகனை மிக மிக நல்லவனாகவும், நாயகியை கண்ணியமானவளாகவும், அழகுணர்ச்சி மிக்கவளாகவும் வடிவமைப்பார். அதே போல் வாழ்க்கையில் இடம் பெறக்கூடிய சின்ன சின்ன அழகான சம்பவங்களை ரசித்து, அதனை நேர்த்தியாக காட்சிப்படுத்தக் கூடிய திறமைசாலியும் கூட.  அழகை நன்றாக ரசிக்கக் கூடியவர். சினிமாவில் தொடங்கிய அவருடைய நட்பு, பிறகு என்னுடைய குடும்ப நண்பரானார். அதனால் தான் என்னுடைய மகன் சூர்யாவை இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தில் நான் நடிக்கிறேனோ இல்லையோ சூர்யா நடிப்பது உறுதி என்று இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அருண் என்னிடம் கூறியிருந்தார்.

'சிந்துபாத்' நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த அறிமுகமான கணவன் - மனைவி பற்றிய எமோஷனலான படம். இதில் ஏராளமான சுவாரஸ்யமான காரணிகள் உள்ளன. ஒருவனுடைய மனைவியை, ஒரு கும்பல் கடத்திச் சென்று, கடல் கடந்து ஓரிடத்தில் சிறை வைத்திருக்கிறது. அந்த மனைவியை கணவனானவன் கஷ்டப்பட்டு, போராடி எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் அஞ்சலி, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகிய மூன்று முக்கியக் கதாபாத்திரங்கள் உள்ளன. இவர்கள் கதையின் தூண்களும் கூட. படத்தில் நாயகனுக்கு காது சற்று மந்தம். உரத்துப் பேசினால் தான் கேட்கும். இது ஒரு சுவாரஸ்யமான அம்சம். நடிகை அஞ்சலி இயல்பாகவே சத்தமாகப் பேசக்கூடிய கேரக்டர் . அவர இந்தக் கேரக்டரில்  பொருத்தமாக நடித்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்தில் சிந்திக்க முடியவில்லை.

இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் லிங்கா. நல்ல பையன். சற்று படபடப்பாகவும் பதற்றமாகவும் இருப்பார். ஆனால் நல்ல நடிகன். தன்னுடைய வேலையை மிகச் சரியாக நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எனக்கு அனுப்பி, இவர்கள் என்ன செய்யலாம்? என்று கேட்பார். அவருக்கு நான் கோபப்படாதே. நாம் வருத்தம் மட்டும் தான் பட முடியும்.

அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். மக்களுடைய வாழ்க்கை அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களின் அணுக்கமாக இருந்து நினைக்கக் கூடிய நல்ல உள்ளம் படைத்தவன். அவர் எதிர்காலத்தில் என்னைவிட சிறந்த நடிகராக வளரக் கூடும் என்று நம்புகிறேன்.

விவேக் பிரசன்னா  ரொம்ப சின்சியரான நடிகர். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எளிதாக கிரகிக்கக்கூடியவர். இந்தப் படத்தில் 23 வயதுடைய பெண்ணுக்குத் தந்தையாக அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரால் மட்டுமே இதுபோல் வித்தியாசமாக நடிக்க முடியும்.

படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் க்ளைமாக்ஸ் போலிருக்கும். ஏனென்றால் தொடர்ந்து சேஸிங் இருக்கும்.

யுவனைப் பற்றி நான் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. நான் மிகவும் ரசிக்கும் ஆளுமை யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசை தன்மையாக இருக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எந்த சூழலிலும் இடையூறு ஏற்படுத்தாத, நம்பகத்தன்மை மிக்கதாக இருக்கும். அவருடைய இசையைக் கேட்கும்போது, நம்முடைய இசை கேட்பது போல் இருக்கும். ராஜா சார் இசை மீது இருக்கும் ஈர்ப்பு போல, இவருடைய இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது” என்று பேசினார் விஜய் சேதுபதி

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close