[X] Close

ரஜினி சார்... பூவா தலையா?சுண்டிவிடுங்க!


poova-thalaiya-rajini

பூவா தலையா? - 'சிவாஜி’ ரஜினி

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Jun, 2018 15:07 pm
  • அ+ அ-

கேங்க்ஸ்டர் படம் எப்போதுமே எவரையுமே கைவிடாது. கேங்க்ஸ்டர் கதைக்கு உண்டான ராசியோ என்னவோ. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிக்கு, பாலசந்தரே தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினார். அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அந்துலேனி கதா, தப்புத்தாளங்கள் என்று படம் பண்ணிக்கொண்டிருந்தவருக்கு தடக்கென ஒரு மாற்றம், ஏற்றம், இன்னொரு பாய்ச்சல் என வந்தது பில்லா படத்தின் மூலமாகத்தான்!

அந்த வருடங்களில் ரஜினியை அணுகவே எல்லோரும் தயங்கினார்கள். தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜிதான், ரஜினியை அழைத்துப் பேசினார். பில்லாவுக்கு ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு ஆரம்பமானது. இதை அறிந்த ஆர்.சி.சக்தியும் ரஜினியை ஒப்பந்தம் செய்தார். தர்மயுத்தம் எடுத்தார். அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கின. ஆனாலும் பில்லாதான் ரஜினியின் முதல் கேங்க்ஸ்டர் படம். பட்டையைக் கிளப்பி, பட்டிதொட்டியெங்கும் ரஜினியைக் கொண்டுபோய்ச் சேர்ந்தது.

அதன் பிறகு, தேவர் பிலிம்ஸ் ரஜினியை வைத்து ரங்கா படத்தை எடுத்தது. இது கேங்க்ஸ்டர் கதையின் சாயல் கொண்ட படம். குழந்தைக் கடத்தல் கதையாகவும் அக்கா தம்பி கதையாகவும் உணர்ச்சிபூர்வமாக எடுத்திருப்பார்கள். கே.ஆர்.விஜயா அக்கா கேரக்டரில் பண்ணியிருப்பார். இந்த அக்கா கதாபாத்திரத்துக்கு, ஜெயலலிதாவைப் பேசியதாக பேச்சு உண்டு. படம் பெரிதாக ஓடியதோ இல்லையோ ரஜினிக்கு பேர் வாங்கிக் கொடுத்தது.

ஹிந்தியில் வந்த டான் தமிழில் பில்லாவாக வந்தது போல், தெலுங்கில் வெற்றி அடைந்ததை தமிழுக்கு எடுத்தார்கள். ரஜினியும் ராதிகாவும் நடித்த அது... நல்லவனுக்கு நல்லவன். ரெளடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் ஹீரோ, மனைவி வந்ததும் நல்லவனாகி வாழ்வதுதான் கதை. இதில் ரொம்பவே பொருந்திப் போனார் ரஜினி. எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

இதேபோல, சத்யா மூவீஸ் ரஜினியையும் சிரஞ்சீவியையும் வைத்து ராணுவவீரன் என்றொரு படத்தை எடுத்தது. காலா ரஜினி போல, இதில் ஊர்மக்களுக்காகக் குரல் கொடுத்து போராடும் ராணுவவீரனாக நடித்திருந்தார் ரஜினி. இந்தப் படமும் மிகப்பிரமாண்டமான வெற்றி பெறவில்லை. ஆனாலும் ரஜினி பேசப்பட்டார். நடுவே துவாரகீஷின் அடுத்த வாரிசு படத்திலும் கெட்ட கதாநாயகனாக வந்திருப்பார் ரஜினி. அரண்மனை, இளவரசி, அரண்மனை கஜானா என்றெல்லாம் கதை பாய்ந்தோடும். பாடல்கள் அத்தனையும் அருமை. ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை வா முதலான பாடல்கள் எல்லாமே செம ஹிட்டு.

நடுவே கே.பாலாஜியின் தீ படமும் ஒருவகையில் கேங்க்ஸ்டர் கதைதான். அமைதியாய் அதேசமயம் ஸ்டைலீஷாய் செய்திருப்பார் ரஜினி. கொள்ளைக்கூட்டத்தில் ரஜினி இருப்பார். அந்தக் கூட்டத்தைப் பிடிப்பவராக அவர் தம்பி சுமன் இருப்பார்.

கேங்க்ஸ்டர் படம் என்று பார்த்தால், அடுத்து நீண்டதான இடைவெளிவிட்டுத்தான், நடித்தார். அது... பாட்ஷா. சத்யா மூவீஸ். சுரேஷ்கிருஷ்ணா இயக்கம். எழுத்தாளர் பாலகுமாரன் வசனம். ஆரம்பக் காட்சியே அடி விசில் பறக்கும். பொதுவாகவே, ரஜினியின் எண்ட்ரி காட்சியே எப்போதும் பரபரசுறுசுறுவென இருக்கும். கைத்தட்டல் அள்ளும். ரஜினி என்ன பேசுகிறார் என்பதையெல்லாம் நான்காவது ஐந்தாவது முறை படம் பார்க்கும்போதுதான் காதில் போட்டுக்கொள்ளமுடியும். காதில் விழவும் செய்யும். பாட்ஷா, ரஜினி எனும் மாஸ் ஹீரோவை எப்படியெல்லாம் எக்ஸ்போஸ் செய்து காட்டவேண்டுமோ காட்டமுடியுமோ அப்படியெல்லாம் காட்டியது.

இன்றைக்கு காலா, பல கேள்விகளையும் வருத்தங்களையும் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறது. ‘ஓபனிங் சீன் நச்ன்னு இருக்கவேணாமா’ என்று புலம்புகிறார்கள் ரசிகர்கள். அண்ணாமலை பாட்டு போல, முத்து பாட்டு போல, பாட்ஷா பாட்டு போல கலகலன்னு இருக்கவேணாமா ஓபனிங் ஸாங் என்று வருந்துகிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் தளபதியில் மம்முட்டியுடன் நடித்திருப்பார் ரஜினி. சூர்யா எனும் கேரக்டரில் வித்தியாச ரஜினி. ஆனால் அவருக்கே உண்டான ஸ்டைல், வேகம், விறுவிறு, பரபர. ஓபனிங் காட்சியும் பாடலும் செம ரகம். ராக்கம்மா கையைத் தட்டு பாடலுக்கு இன்றைக்கும் கைத்தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். மழையில் நனைந்தபடி மம்முட்டியிடம் பேசும் சீன், போலீஸ் அதிகாரியை முக்கிய சாலையில் கொன்றெரிக்கும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனிலேயே கெத்துக் காட்டிப் பேசும் வசனம், அடிக்கடி நடக்கிற சண்டைகள் என அமர்க்களப்படுத்தியிருப்பார் ரஜினி. ஆனால் காலாவில் ஏனோ ரஜினி என்பவர் மாஸ் ஹீரோ என்பதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

பசங்களுடன் கிரிக்கெட் விளையாடுகிற காட்சியும் போங்கு பண்ணுவதும் என ஆரம்பமே சொதப்பல். காலாவை அட்டாக் செய்ய வரும் கூட்டத்திடம், ‘வாங்கலே. வேங்கையன் மகன் ஒத்தைல நிக்கேன்’ என்று சொன்ன அடுத்த நிமிடம், அவர் பையன் வந்து அடிதூள் பண்ணுவார். பார்த்துக்கொண்டு சும்மா தேமேனென்று இருப்பதெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்யும் வேலையே இல்லையே!

முள்ளும் மலரும் படத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று ஆடிப்பாடிய காளி (ரஜினி), காலாவில் வேறு முகம் காட்டுகிறார்.

பாட்ஷாவில் போலீஸ் ஸ்டேஷனில்  அதிகாரியிடம், ‘இங்கே நல்லவங்க இருக்கணுமா, கெட்டவங்க ஆளணுமா... நீங்களே முடிவு பண்ணிக்குங்க. பாட்ஷாவா... ஆண்டனியா? ராமனா ராவணனா? முடிவு பண்ணுங்க என்ற ரஜினி, தன்னை ராமனாகச் சொல்லிக்கொண்ட ரஜினி, இப்போது காலாவில் ராவணனாகிவிட்டார்.

‘போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்’ என்று இவர் பேசியதற்கு விசில் பறந்தது. ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’ என்ற போது ‘ஆமாம் தலைவா ஆமாம் தலைவா’ என்று ஆமோதித்தார்கள். ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு வாரிக்கொடுப்பான். ஆனா கைவிட்ருவான்’ என்றபோது, ‘செம தலைவா’ என்று கொண்டாடினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, அரசியல் குறித்தும் வருவது குறித்தும் சொன்னபோது, என்னுடையது ஆன்மிக அரசியல் என்றார். இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தபோதும் அடிக்கடி இமயமலை சென்று குகையில் தியானம் செய்ததையெல்லாம் சேர்த்து கவனித்தபோதும், ‘என் வழி தனி வழி’ என்று சொன்னது போல தனி ரூட் பிடிக்கிறார் என்றே புளகாங்கிதம் அடைந்தார்கள் ரசிகப் பெருங்குடி மக்கள்.

ஆனால்... சிறுகச் சிறுகச் சேர்ந்த ஹீரோ இமேஜையெல்லாம் காலாவுக்கு மொத்த பலியாகக் கொடுத்துவிட்டார்... அதுவும் ரஜினியே அந்த ஹீரோ எனும் தேன்கூட்டைக் கலைத்துவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நல்லவங்களை சோதிப்பான், ஆண்டவன் சொல்றான், கடவுள், ராகவேந்திரர், பாபா, ஆண்டவனே நம்ம பக்கம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த ஆண்டவனையே எதிர்ப்பேன் என்று சொன்னதை ஏனோ ஏற்கவில்லை. தவிர, காலகாலமாக ராமனை ஹீரோவாகவும் ராவணனை வில்லனாகவும் கேட்டுப் பார்த்துப் பழகிவிட்ட சமூகத்தில், ரஜினியை ராவண ரேஞ்சுக்கு கற்பனை செய்யக் கூட தயாராக இல்லை ரசிகர்கள்.

ரஜினி அடிவாங்கலாம். மணிரத்னம் புண்ணியத்தில் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதே லைட்போஸ்ட்டில் ஆனந்தராஜை கட்டிவைத்து வெளுத்தெடுக்கவேண்டும்.

அம்மா, தங்கை, நண்பன், மனைவி, சொத்துபத்து என்று எதை இழந்தாலும் பரவாயில்லை. அந்த சோகத்தில் இருந்து வெளிவருகிற கோபம் மூலமாக பழி வாங்கவேண்டும். ரஜினி ஸ்டைல் அல்ல அது. மாஸ் ஹீரோவுக்கு சினிமாவே வைத்துக்கொண்டிருக்கிற இலக்கண இலக்கியங்கள்! ஆனால் காலா கரிகாலன், அன்பு மனைவியையும் ஆசை மகனையும் இழந்த பிறகு கூட எந்தவொரு மாற்றமும் இல்லாமல்தான் இருக்கிறார். அவரின் கேங்க்ஸ்டர், மாஸ் ஹீரோ, ஸ்டைல் நடை, அட்டகாச வசனமெல்லாம் எங்கே என்று தியேட்டர் இருட்டில் தேடுகிறார்கள் ரசிகர்கள்.

தூத்துக்குடியில் ‘யாரு நீங்க?’ என்று கேட்ட அடுத்த வாரத்தில் படம் வெளிவர வேண்டுமா? பாழாய்ப் போன புத்தி, படத்தில் ரஜினி கேட்கிற, ‘யாரு இவரு?’ என்பது கேலியாகவும் கிண்டலாகவும் நெட்டிசன்களால் விளாசப்படுகிறது. போராடிக்கொண்டே இருந்தால், தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று நேரில் பேசிய ரஜினியையும் குழாய் மைக் கொண்டு மக்களை போராட அழைக்கும் காலா ரஜினியையும் ஏனோ பொருத்திப்பார்க்கிற கட்டாயம் வந்துவிடுகிறது.

ராம - ராவணனை விடுங்கள். பேசாமல், ஆரம்பித்த இடமான வில்லன் கேரக்டரில், நானா படேகர் கேரக்டரில் ரஜினி பண்ணியிருக்கலாம். தனக்கே உண்டான பாணியில், அசத்தியிருப்பார் வில்லன் ரஜினி... அந்த சிவாஜி படத்தின் எம்ஜிஆர் போல..., எந்திரன் படத்தின் ரோபோ போல!

ரஜினி எனும் மாஸ் ஹீரோவுக்கெல்லாம் பக்கம்பக்கமான டயலாக்குகள் தேவையே இல்லை. எந்திரனில் சொல்கிற ‘தொப்பி... தொப்பி...’ என்பதே பெரிய கைத்தட்டலைக் கொடுத்துவிடும். சிவாஜியில், ‘என்னங்க ஆதி இப்படி ஆயிருச்சு?’ என்று சொல்லும்போது, அந்த மாடுலேஷனுக்கு விசில் பறக்கும். பாட்ஷாவில் ‘உனக்கு சீட்டு கிடைச்சாச்சு’ என்பார் ரஜினி. ‘என்னண்ணே சொன்னே’ என்பார் தங்கை. ‘உண்மையைச் சொன்னேன்’ என்று சொல்லும்போதே, அது சொல்லும் விதத்திலேயே அந்தக் காட்சியை தூக்கிக்கொண்டு போய் நிறுத்திவிடுவார் ரஜினிகாந்த். அதுதான் ரஜினி எனும் மாஸ் ஹீரோயிஸம்!

ரஜினிக்கு வயதாகிவிட்டது. அதற்கு ஏற்றது போலத்தானே கேரக்டர் ஏற்கமுடியும் என்று சொல்லலாம். ஆனால் அமிதாப் மாதிரியான ரஜினியை விட பிரமாண்ட ஹீரோக்கள், வயதுக்குத் தக்கபடி கேரக்டர் தேர்வு செய்து அசத்துவதையும் கவனிக்கவேண்டும்.

நீங்க நல்லவரா... கெட்டவரா... என்றொரு வசனம் ரஜினிக்குத் தொடர்பில்லாத படத்தில் வரும். காலாவில் ரஜினி என்ன மாதிரியான கதாபாத்திரம் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தேவலை.

சிவாஜி படத்தில், ‘நீ திரும்பவும் அமெரிக்காவுக்கே போயிரு’ என்பது இப்போது நெட்டிசன்களின் கலாய் டாக்!

வேங்கையன் மகன் ஒத்தைலயே நிக்கிறாரே என்கிறார்கள்.

‘பூ விழுந்தா பூப்பாதை. தலை விழுந்தா சிங்கப்பாதை’ என்பார் ரஜினி.

பூவா... தலையா? சுண்டிவிடுங்கள் ரஜினி சார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

காலா - பட விமர்சனம் படிக்க...

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close