[X] Close
 

காலா - ரஜினி படம் அல்ல, ரஞ்சித் படம்! -எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர்


kaala-ranjith-padam-pkp

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jun, 2018 12:58 pm
  • அ+ அ-

காலா படம் குறித்து எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் தன் கருத்தைத் தெரிவித்துள்ளர்.

அவர் தன் முகநூலில் எழுதியுள்ள பதிவு:

காலா... இது இயக்குனரின் படம். 
ரஜினி படம் என்று பாட்ஷா, எந்திரன், முத்து கற்பனைகளுடன் போகிறவர்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றமே.

படமாகப் பார்த்தால் நாயகன் கதை -ரஞ்சித் ஸ்டைலில்.

ரஞ்சித் என்கிற மனிதர் தான் நம்பும் கொள்கைகள், தத்துவங்கள், தான் ஆதரிக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையெல்லாம் மேடையில் பேசுவார். அதையே படமாக எடுத்திருக்கிறார். பல காட்சிகளில் நேரடியான வசனங்களாலும், பல காட்சிகளில் பின்னணி ப்ராப்பர்ட்டீஸ், வண்ணம், காட்சியமைப்பு இவற்றின் மூலம் பூடகமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவு தத்துவங்களை அடுக்கியிருக்கிறார். இந்த சிம்பாலிக் உத்தி படம் முழுவதும், கிளைமாக்ஸ் வரையிலும் தொடர்கிறது. அவற்றை சரியாக உணர்ந்துகொள்ள நுணுக்கமான கவனிப்பு அவசியம்.

ரஜினியை அவர் மாஸ் ஹீரோ என்றோ, சூப்பர் ஸ்டார் என்றோ பார்க்காமல்..தான் எழுதிய கதைக்கான ஒரு ஹீரோ என்று மட்டுமே கையாண்டிருக்கிறார்.

அதைப் புரிந்தும், உணர்ந்தும் அதற்கு ஒப்பி ரஜினி நடித்திருப்பதால்..ரஞ்சித் சொல்லும் வர்க்க பிரச்சினை,அதிகாரத் திமிர், தொடர்பான கருத்துக்களுக்கும், தீர்வுகளுக்கும் அவரும் உடன் படுகிறார் என்றுதானே அர்த்தம் கொள்ள வேண்டும்?

நிஜத்தில் தொட்டதற்கெல்லாம் போராடக் கூடாதென்றவர் படத்தில் போராட்டத்தைத்தான் தீர்வாக முழக்கமிடுகிறார். பிரச்சினைகளுக்கு நீதி மன்றங்களை அணுகி தீர்வு காண வேண்டும் என்று பேசியவர் படத்தில் வன்முறைத் தீர்வையே பேசுகிறார்.காவல்துறையினரை பொதுமக்கள் அடிப்பதை ஏற்க மாட்டேன் என்பவரின் படத்தில் காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள்.

இப்படியான முரண்கள் காரணமாக..ரஜினி இயக்குனர் சொன்னதைச் செய்திருக்கிறார், அந்தக் காட்சிகளில் அவருக்கு உடன்பாடில்லை, அது பாத்திரம் பேசுவது என்று நாம் சமாதானப் படுத்திக் கொண்டோமென்றால்..ஏழைகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர் பேசும்போதெலலாம் இதுவும் பாத்திரம்தானே பேசுகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா என்று குழப்பம் ஏற்படுகிறது.

படத்தில் ரசனையான, மாஸான காட்சிகள் சில இருந்தாலும்..சொன்னதையே சொல்லும் சுவாரசியம் குறைந்த பல காட்சிகள் படத்துடன் ஒன்றிப் போக விடாமல் செய்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களைவிட பின்னணி இசை.. மிரட்டல். பின்னியிருக்கிரார். நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக் கனி இவர்களின் நடிப்பு சிறப்பு.

நீங்கள் என்ன மாதிரியான ரசனைகளும், சிந்தனைகளும், சமூகப் பார்வையும் கொண்டவர் என்பதைப் பொருத்து இந்தப் படம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம். ரொம்பப் பிடிக்காமலும் போகலாம்.

இவ்வாறு பட்டுகோட்டை பிரபாகர் தன் முகநூலில், காலா படம் குறித்து விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close