[X] Close
 

பப்பிம்மா..!


papimma-padmini

நாட்டியப்பேரொளி பத்மினி

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jun, 2018 12:02 pm
  • அ+ அ-

அவருக்கு மூன்று பெயர்கள். பிறந்தபோது வைத்த பெயர். எல்லோரும் அழைத்தார்கள். அடையாளப் பெயராகத் திகழ்ந்தது. பின்னாளில், நாட்டியப்பேரொளி என்று கொண்டாடினார்கள். அவர் பெயரைக் கடந்து, அவரின் ஆடல் கலை அப்படிக் கொண்டாடவைத்தது. அவையெல்லாவற்றையும் தாண்டி, பத்மினியை எல்லோரும் பப்பிம்மா என்றே அழைத்தார்கள். நெருங்கியவர்களும் மனதுக்கு நெருங்கியவர்களும் மனதுக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டவர்களும் அப்படித்தான் அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும்!

லலிதா, பத்மினி, ராகினி என்று வீட்டில் முப்பெருந்தேவியராகவே வலம் வந்தார்கள். சினிமாவிலும் அப்படித்தான். ஆனால் அக்கா லலிதாவை விட, தங்கை ராகினியை விட, பத்மினி அடைந்த புகழும் உயரமும் சாதாரணமானது அல்ல.

நடனத்தால் இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தன் தனித்த நடிப்பால், பட்டொளி வீசிப் பறந்தது பத்மினியின் ராணி பரிபாலனம்!

எம்.ஜி.ஆருடனும் நடித்திருக்கிறார். ஜெமினியுடனும் நடித்திருக்கிறார். இன்னும் பல நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். ஆனாலும் சிவாஜிகணேசனுடன் இவர் நடித்த படமெல்லாம் அப்படியொரு பாந்தமான ஜோடி என்றே எல்லோரையும் கொண்டாடச் செய்தது. ‘சிவாஜி பத்மினி ஜோடி வழக்கம் போல இந்தப் படத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறது. திருஷ்டி சுற்றிப்போடுங்கள் ஜோடிக்கு’ என்று அன்றைக்கு விமர்சனங்களே எழுதப்பட்டன. ஆனால் அத்தனையும் தாண்டி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், சிவாஜி நடித்திருந்தாலும் வெள்ளையம்மாள் எனும் கேரக்டரில் வரும் பத்மினி, ஜெமினிக்குத்தான் ஜோடி. அங்கேயும் ஜொலித்திருப்பார் பத்மினி.

மன்னாதி மன்னனிலும் ராணி சம்யுக்தாவிலும் ராணியைப் போலவே ஒளிர்ந்து ஜொலிப்பார் நாட்டியப் பேரொளி. சிவாஜியுடன் நடித்த தூக்குதூக்கியிலும் அப்படித்தான். உத்தமபுத்திரனில் ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்று மலருக்கு இணையாக முகம் மலர்ந்து காணப்படும் பத்மினி, அன்றைய இளைஞர்களாலும் எல்லாப் பெண்களாலும் கொண்டாடப்பட்டார்.

இருமலர்கள் படத்திலும் தேனும் பாலும் படத்திலும் ஒரேமாதிரியான கதாபாத்திரம் போல் தோன்றினாலும் இரு வெவ்வேறு பட்ட நடிப்பை வழங்கியிருப்பார் பத்மினி. அதிலும் ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ பாடலும் அவரின் முகபாவங்களும் மொத்த உணர்வுகளையும் காமிராவுக்குக் கொண்டுச் சென்றுகொண்டே இருப்பார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம் என்றாலே நடிகைகளுக்குக் கொண்டாட்டம்தான். மனிதர், நாயகியருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் நடிப்புத்திறனை வெளிக்கொண்டு வந்துவிடுவார். அப்படியொரு வாய்ப்பு பத்மினிக்கும் கிடைத்தது. கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதுதான் சித்தி. எம்.ஆர்.ராதா எனும் நடிப்பு அசுரனுடன் பக்கத்திலேயே இருந்து அவருக்கு மனைவியாய் நடித்து, கலக்கியெடுத்திருப்பார். பத்மினியின் மிகச்சிறந்த படங்களில் சித்திக்கும் இடமுண்டு.

’நீல வண்ணக் கண்ணா வாடா’ என்று இவர் பாடுகிற நடிப்பு ஒருபக்கம், கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ...’ என்று சோகத்தை கண்களிலும் முகத்திலும் தேக்கித் தருவது இன்னொரு பக்கம் என்று பத்மினியின் நடிப்பு, எல்லைகளற்று விரிந்துகொண்டே போனது.

குலமா குணமா, குருதட்சணை, பதிபக்தி, தங்கப்பதுமை, அரசிளங்குமரி என்று இவரின் படங்களிலெல்லாம் தனி முத்திரை, தனித்ததொரு அழகு என்று முத்திரை பதித்த ஒப்பற்ற நடிகை பத்மினி.

பத்மினியின் திரையுலக வாழ்வில் இரண்டு முக்கியமான படங்கள் உண்டு. மோகனாம்பாள். இந்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் மோகனாம்பாளாக பத்மினியைத் தவிர வேறு எவர் நடித்திருந்தாலும், அந்தக் கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்காது. அதேபோல் நடித்தவருக்கும் பெருமையைத் தேடித்தராது. கொத்தமங்கலம் சுப்பு, யாரை நினைத்துக்கொண்டு நாவல் எழுதினாரோ... அந்தக் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் உயிர் கொடுத்தார் பத்மினி. சிவாஜியைப் பார்த்த சந்தோஷமும் அதேசமயம் எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதால் ஒருவித அலட்சியமும் அந்த அலட்சியத்தை மறைப்பது போல, கேலிகிண்டலும் என ஒவ்வொருகாட்சியிலும் ஆடியிருப்பார்... விளையாடியிருப்பார் பத்மினி.

தன் நாட்டியத்தை சிவாஜி பாக்கணுமே என்று ஆசை, அட... திருட்டுத்தனமாக பார்க்கிறாரே என்கிற குதூகலம், நீ பார்ப்பதை நான் பாத்துட்டேன் என்று புத்திசாலித்தனம். மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டை இப்போது பார்த்தாலும் சிலிர்த்துவிடுவோம். எத்தனை முறை பார்த்தாலும் மெய்சிலிர்த்துப்போவோம்.

அம்மா கொடுக்கும் டார்ச்சர். சமூகத்தில் ஆண்களால் வருகிற தொந்தரவு. தன் காதலன் சிக்கல் சண்முகசுந்தரம் தன்னை நம்பாமல் இருக்கிற வேதனை. இந்த மூன்றையும் கடக்கிற தருணங்களில், நடிகை பத்மினி என்கிற பப்பியம்மா என்கிற நாட்டியப் பேரொளி தகதகத்துப் பிரகாசித்தது, தன் நடிப்பால்!

அடுத்து... வியட்நாம் வீடு. அங்கே, சிவாஜியும் இருக்கமாட்டார். பத்மினியும் இருக்கமாட்டார். பத்மநாப ஐயரும் அவர் மனைவி சாவித்திரியும்தான் தெரிவார்கள். ஏதோ... ஒரு பிராமண வீட்டு ஜன்னலில் இருந்து, அந்த வயதான தம்பதியின் வாழ்க்கையைப் பார்ப்பது போல் இருக்கும். அப்படியொரு லாங்வேஜ், பாடி லாங்வேஜ். ரெண்டுபேரும் ஜோடிபோட்டு பின்னியிருப்பார்கள்.

அதிலும் பாலக்காட்டுப் பக்கத்துலே ஒரு அப்பாவி ராஜாவின் போது அப்படியொரு அழகு. ஒரு புதுமணப்பெண் எப்படி அலங்கரித்து அழகில் ஜொலிப்பாளோ அப்படியிருப்பார். ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாட்டில் நம் மனதை கனக்க வைத்துவிடுவார்.

‘என் வேதனை யாரறிவார்’ என்று பாடுவார் சிவாஜி. திக்கென்றாகி விடும் பத்மினிக்கு. ‘என்னய்யா... நான் இல்லியா. என்ன இப்படிச் சொல்லிட்டே’ என்பது மாதிரி ஒரு ரியாக்‌ஷன் காட்டுவார். ‘உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்பார் சிவாஜி. அப்போது ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவார் பத்மினி. ‘அதானே பாத்தேன். என்னைப் புரிஞ்சுவைச்சிருக்கியே...’ என்பது போலான ஒரு நிம்மதி.

அந்தப் பெருமூச்சுதான்... இன்றைக்கும் திரைவானில், காற்றோடு காற்றாகக் கலந்து, பப்பியம்மாவை இன்னும் இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இன்னும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் ரசிக மனங்களில் நிழலாடிக்கொண்டே... ஆடிக்கொண்டே இருக்கும்... அந்த நாட்டியப் பேரொளி!

மூன்றாவதா இன்னொன்று. நம் சினிமாவில் எந்தந்த உறவுகளையோ உறவுகளின் அடர்த்தியையோ சொல்லியிருக்கிறார்கள். பாட்டிக்கும் பேத்திக்குமான அன்பையும் உறவையும் உணர்வையும் அழகு ததும்ப, ஆனால் வலிக்க வலிக்கச் சொல்லியிருப்பார் இயக்குநர் பாசில். பூவேபூச்சூடவா மறக்க முடியுமா என்ன? அதில் பாட்டியாக வந்த பத்மினி... நடிப்பின் புதுபரிமாணம் தொட்டிருப்பார். அந்த நடை, அவரின் மிடுக்கு, பாசத்துக்கு ஏங்கித் தவிக்கும் நிலை, பேத்தி வந்த கொண்டாட்டம், அவளை உள்ளங்கையில் தாங்குகிற பாசம்... என காட்சிக்குக் காட்சி என மனுஷி, மனித உணர்வுகளின் பிரதிபிம்பமாகவே ஒளிர்ந்திருப்பார்.

பத்மினி என்கிற நாட்டியப் பேரொளி என்கிற பப்பிம்மாவின் பிறந்தநாள் இன்று (ஜுன் 12). அந்த மோகனாம்பாளைப் போற்றுவோம். சாவித்திரி மாமியைக் கொண்டாடுவோம்!

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close