[X] Close

பில்லா - அப்பவே அப்படி கதை!


billa-appave-appadi-kadhai

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Jun, 2018 12:50 pm
  • அ+ அ-

திரையுலக வாழ்க்கையில், ஒரு சில படங்கள் மிகமிக முக்கியத்துவம் பெற்றுவிடுவது உண்டு. நடிகர்களுக்கோ இயக்குநர்களுக்கோ இசையமைப்பாளர்களுக்கோ அவர்களை அடுத்தகட்டத்துக்கு, அடுத்த உயரத்துக்கு கொண்டுசென்று நிறுத்தும். அங்கே அரியாசனம் போடும். அமரச்சொல்லும். கிரீடம் சூட்டும். மாலை அணிவித்து மரியாதை செய்யும். நடந்து வருவதற்கு ரெட்கார்ப்பெட் விரிக்கும். அடுத்த பயணம் இன்னும் எளிதாகவும் இனிதாகவும் அமைய, வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ரஜினி எனும் ரஜினிகாந்த் எனும் சூப்பர்ஸ்டாருக்கு, அப்படியொரு படங்களில் ஸ்பெஷல்... பில்லா! சொல்லப்போனால், ரஜினியின் முதல் கேங்க்ஸ்டர் படம் இதுதான்!

அபூர்வராகங்கள் தொடங்கி, அவர்கள், மூன்று முடிச்சு என்றெல்லாம் பண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு கலர் படம்... ஒரு டான் படம்... கே.பாலாஜி படம்... ஹிந்தியில் அமிதாப் பண்ணிய தமிழ் வெர்ஷன்... என்று பல பெருமைகளைக் கொண்ட படமாக ரஜினியின் ஸ்டைலையெல்லாம் திரட்டிக் காட்டிய படம் பில்லா! 25 வாரங்கள் கடந்து ஓடிய மெகா ஹிட் படம்.

80ம் ஆண்டு வெளியானது. கே.பாலாஜி என்றாலே ரீமேக் படங்களைப் பண்ணுவதில் அசகாயசூரர் என்கிற பேருண்டு. சிவாஜியை வைத்தே படங்கள் பண்ணிக்கொண்டிருந்தவருக்கு, கமலும் ரஜினியும் ரொம்பவே கைகொடுத்தார்கள்.

'டான்’ என்ற பெயரில் மிகப்பெரிய ஹிட்டடித்த படம். அமிதாப் கலக்கியிருப்பார். அதை தமிழில் பில்லா என எடுத்தார்கள். ரஜினி, தன் ஸ்டைலிலும் நடிப்பிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

இன்னொரு விஷயம்... 79களில், ரஜினிக்கு பெரிய மார்க்கெட் இல்லை. சிலபல காரணங்களால், ரஜினியை அணுகவே எல்லோரும் பயந்தார்கள். அப்படி எல்லோரும் தயங்கியவேளையில், கே.பாலாஜிதான் ரஜினியை அழைத்துப் பேசினார். ‘டான்’ கதையைச் சொன்னார். ‘படம் பண்ணுங்க ரஜினி. எனக்கு ‘டான்’ படம் மேலயும் நம்பிக்கை இருக்கு. ரஜினி மேலயும் நம்பிக்கை இருக்கு’ என்றார். எப்படிப் பார்த்தாலும் ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் பில்லாவுக்கு தனியிடம் உண்டு. இந்தப் படம் வந்து வெற்றி அடைந்த பிறகுதான், ஏவிஎம் முதலான நிறுவனங்கள் ரஜினியை அணுகின; கதை சொல்லின. தர்மயுத்தம், முரட்டுக்காளை என்றெல்லாம் படங்கள் வரத்தொடங்கின என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மிகப்பெரிய கடத்தல் தலைவன் பில்லா.போலீசுக்கு தண்ணிகாட்டுகிற ஒவ்வொரு காட்சியும், அத்தனை அழகு. அவ்வளவு நுணுக்கம். ஒருகட்டத்தில், போலீசார் சுட்டுவிட, அடுத்து அந்தக் கூட்டத்தை, எப்படிப் பிடிப்பது, என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கும்போது, போலீஸ் அதிகாரி கே.பாலாஜியின் கண்களில், ராஜா என்கிற ராஜப்பா தென்படுவார். பார்ப்பதற்கு அச்சு அசலாக பில்லா போலவே இருப்பதால், அவரை அழைத்து வந்து, பில்லாவாக்கி, அந்தக் கூட்டத்துக்குள் அனுப்புகிறார்.

அந்தக் கூட்டத்தின் வேலையையும் கூட்டத்தையும் எப்படி மடக்கிப் பிடிக்கிறது போலீஸ், நடுவே பில்லாவாக நடிக்கும் ராஜப்பா மாட்டிக்கொள்ள, எப்படித் தப்பிக்கிறார் என்பதை திடுக் திருப்பங்களும் நகைச்சுவையும் கொஞ்சமே கொஞ்சம் கிளாமரும் கலந்து கொடுத்திருப்பார்கள்.

இண்டர்போல் போலீஸ் ஆபீசர் கோகுல்நாத்தாக மேஜர் சுந்தர்ராஜன், போலீஸ் அதிகாரிகளாக கே.பாலாஜி, ஏவிஎம்.ராஜன், பில்லாவுடன் பிரவீணா, ஆர்.எஸ்.மனோகர், நடுவே கொஞ்சகாலம் இந்தக் கூட்டத்தில் விலகி வந்திருக்கும் தேங்காய் சீனிவாசன், கூட்டத்தில் உள்ள ரஞ்சித், அவனுடைய சகோதரி ஸ்ரீப்ரியா, ராஜப்பா, அவரின் நெருங்கிய தோழியும் சகோதரியுமாக மனோரமா என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். ஆனால், கதையின் நேர்த்தியும் திரைக்கதையின் தெளிவும் நட்சத்திரப் பங்களிப்புகளும் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும்.

முதல் காட்சியே மிரட்டும். ரஜினி ஒற்றை ஆளாக காரில் வந்து இறங்குவார். மூன்று பேர் நிற்பார்கள். ‘என்ன பில்லா தங்கம் கொண்டாந்துருக்கதானே.’ ’பணம் கொடுத்து வாங்க முடியாது. வீரம் காட்டித்தான் வாங்கணும்’ என்று துப்பாக்கி எடுப்பார்கள். பெட்டியக் கொடு என்பார்கள். தூக்கிப் போடுவார். டம்மென்று வெடிக்கும். டைட்டில் அங்கிருந்து ஆரம்பிக்கும். டைட்டிலிலும் ரஜினியின் விதம்விதமான ஸ்டைல்கள். இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை மாஸ் ஹீரோவாக்கின!

கூட்டத்தில் உள்ள ஒருவனைச் சுட்டுவிடுவார் பில்லா. எல்லோரும் வந்து கேட்பார்கள். ‘ஒரு சின்சியர் வேலைக்காரன்’ என்பார் மனோகர். ‘இந்த பில்லா தேவையில்லாம புல்லட்டை வேஸ்ட் பண்ணமாட்டான்’ என்பார் ரஜினி. ‘அவனை எனக்குப் பிடிக்கல. முக்கியமா அவனோட ஷூ... சுத்தமாப் பிடிக்கலை’ என்பார். எல்லோருக்கும் குழப்பம். அவனோட வலது ஷூவைக் கழற்றி ஓபன் செய்யச் சொல்வார். அதற்குள் ஒரு பேப்பர். போலீசின் கையாள். இப்படி படம் நெடுகிலும் அதிரிபுதிரியான சரவெடிகள், கொளுத்திக்கொண்டே இருப்பார்கள். வெடித்துக்கொண்டே இருக்கும்.

பில்லாவின் கூட்டத்தில் ஸ்ரீப்ரியா சேருவார். வழக்கம் போல், பாலாஜி படத்தின் நாயகி பெயரான ராதாதான் இவரின் பெயர். அப்படிச் சேர்ந்ததே தன் அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்குவதற்குத்தான். ஆனால் என்ன, அதற்குள் பில்லா போலீசில் சிக்கி இறந்துவிடுவார். அந்த இடத்துக்குத்தான் ராஜப்பா, வருவார். இவரைக் கொல்ல திட்டமிடுவார் என விறுவிறு சுறுசுறு பரபர என ரஜினியைப் போலவே ரஜினிக்கு ஈடுகொடுத்து தடதடக்கும் திரைக்கதை, மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மொத்தமும் அமர்க்களம். அப்போது விவிதபாரதியிலும் சிலோன் ரேடியோவிலும் இந்தப் பாடலை ஒலிபரப்பாத நாளே கிடையாது. விரும்பிக் கேட்ட நேயர்களின் அடுத்த பாடல்... என்றதும் ‘மை நேம் இஸ் பில்லா’ என்று ஒலிபரப்பி நிறுத்துவார்கள். பிறகு, பில்லா படத்தில் இருந்து எஸ்.பி.பி. பாடும் பாடல் என்பார்கள். தொடர்ந்து பாட்டு ஒலிபரப்பாகும்.

‘நாட்டுக்குள்ளே எனக்கொரு பேருண்டு,’ ‘இரவும் பகலும் முழுதும்’, ‘நினைத்தாலே இனிக்கும் சுகமே...’ என்கிற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல், ‘மை நேம் இஸ் பில்லா’ , ‘வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ என்று எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட்டு. ஒருபக்கம் எஸ்.பி.,பியும் இன்னொரு புறம் மலேசியா வாசுதேவனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம்தான். அந்த கோட்டும்சூட்டும் ரஜினிக்கு தனி அழகு கூட்டித்தரும். வாயில் புகைந்துகொண்டிருக்கும் பைப் கூட ஸ்டைல் காட்டும். ராஜப்பாவாக ஒரு பாடி லாங்வேஜ் காட்டி நெளிந்து வளைந்து அசத்தியிருப்பார். பில்லா மிடுக்குக் காட்டி, மிரட்டியிருப்பார்.

இது பில்லா இல்லை என்று தெரிந்த ஒரே நபர், போலீஸ் அதிகாரி பாலாஜி. அவர் இறந்துவிடவே, போலீஸ் துரத்தும். பில்லா இல்லை ராஜப்பா என்பார். நம்ப மறுக்கும். இன்னொரு பக்கம் பில்லாவின் கூட்டமும் துரத்தும். நல்லவேளையாய், ஸ்ரீப்ரியாவுக்கு உண்மைகள் தெரியவர, காதலும் பிறக்கும். இப்படி எக்ஸ்பிரஸ் வேக திருப்பங்களும் காட்சிகளும் பிரமாண்டங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினியின் ஸ்டைல் கலந்த நடிப்பும் என ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்து நிற்கிறான் பில்லா!

பொதுவாகவே கே.பாலாஜியின் படங்கள், ஜனவரி 26ம் தேதி, ஏப்ரல் 14ம் தேதி என ரிலீசாகும். இந்த பில்லா, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீசானதாக நினைவு.

ஸ்ரீப்ரியாவின் நடிப்பு அபாரம். அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்க நினைப்பதும் அதற்காக அசோகனிடம் கராத்தே முதலான பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதும் கிளாமரில் மயக்கப் பார்ப்பதும் டிங்டிங் என்று கண்சிமிட்டும் நர்ஸ் வேடமணிந்தும் என எல்லாக் காட்சிகளிலும் நடிப்பில் பின்னியிருப்பார். அந்த வெத்தலயைப் போட்டேனே பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

அப்போது இன்னொன்றும் சொல்லுவார்கள். பில்லா படத்தில் ஸ்ரீப்ரியாவின் கேரக்டரில் ரஜினிக்கு ஜோடியாக யாரை அழைத்தார் பாலாஜி என்பது தெரியுமா? ஆனால் அந்த நடிகை மறுத்துவிட்டார். இதுகுறித்து அவரே சொல்லியிருக்கிறார். ‘எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று ஆசைப்பட்டிருந்தாலோ நான் நடித்திருக்கலாமே. ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. மறுத்தேன்’ என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டவர்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

90களுக்குப் பிறகு, பாட்ஷா மாதிரி இருக்கணும் என்றார்கள். 80களின் இறுதியில் வந்த பில்லா மாதிரி இருக்கணும். சரியான கலவை, இதான் வெற்றி ஃபார்முலா என்று எல்லோருமே சிலாகித்துக் கொண்டாடினார்கள். இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான்... பில்லா; அவன்தான் பில்லா!    

முந்தைய அப்பவே அப்படி கதை படிக்க...

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close