[X] Close

காலா - எப்படி?


kaala-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Jun, 2018 13:27 pm
  • அ+ அ-

ஜூன் 7ம் தேதி தீபாவளி. ரஜினி படம் எப்போதெல்லாம் ரிலீசாகிறதோ, அப்போதெல்லாம் அவரின் ரசிகர்களுக்கு தீபாவளிதான். காலா படம் வெளியான இன்றைய நாளும் அப்படித்தான் அவர்களுக்கு!

சமீபகாலங்களில் ரஜினி, எவருக்கும் இப்படியெல்லாம் சான்ஸ் கொடுத்ததாக நினைவில்லை. கபாலிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித்திற்கு காலா வாய்ப்பு. ஆகவே இது இயக்குநருக்கு டபுள் தமாக்காதான். நிலம் எங்கள் உரிமை என்பதை அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறது படம்.

மெட்ராஸ் படத்தில் வடசென்னையையும் கபாலியில் மலேசியாவையும் எடுத்துக்கொண்டவர், காலாவில் மும்பையின் தாராவியை எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த மக்களின் நிலம் எங்கள் உரிமை எனும் பிரச்சினையைத் தொட்டு, கதையும் திரைக்கதையுமாக அமைத்திருக்கிறார்.

பசங்களோடு பசங்களாக, கிரிக்கெட் ஆடும் அலப்பறைதான் ரஜினியின் எண்ட்ரி. ‘போங்க தாத்தா. விளையாடவே தெரியல’ என்று பசங்க அலுத்துக்கொள்வது மாதிரியான காமெடிகளும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.

தாராவியின் மக்கள் நாயகனாக விளங்கிய வேங்கையன் என்பவரின் மகன் காலா. கரிகாலன். அவரின் அன்புக்குடும்பமும் அந்தப் பகுதி மக்களின் மீதான பாசமும் அவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதைப் பொறுக்காமல் கட்டிக்காப்பதும் எதிர்ப்பதும் என பரபர பட்டாசின் திரி கிள்ளிப் போடுகிற அளவுக்கான கதை பிடித்த வகையில், ரஞ்சித்திற்கு சொல்லலாம் சபாஷ்.

ரஜினியின் ஒரு மகன் அப்பாவைப் போலவே வீரதீரன். இன்னொரு மகன் புரட்சி, போராட்டங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டவன். ஒரு பாடலில், அந்த இரண்டுமகன்களும் இருவேறு விதமான முறைகளில் மக்களுக்குச் செய்யும் நன்மைகளை அழகுறக் காட்டியிருப்பார் இயக்குநர்.

கருப்பு வேஷ்டியும் வெள்ளைத் தாடியுமாக அந்த நக்கல்நையாண்டி மாடுலேஷனும் ஸ்டைலுமாக, காட்சிக்குக் காட்சி ஸ்கோர் செய்கிறார் ரஜினி. அவரின் மனைவி செல்வியாக வரும் ஈஸ்வரி ராவ், மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அநேகமாக, அவரின் லைஃப்டைம் கேரக்டர் செல்வியாகத்தான் இருக்கும். அதேபோல், ஸ்கிரீனில் வந்தாலே, புரட்சி, புதுமை, அன்பு, மன்னிப்பு என்று பேசுகிற சமுத்திரக்கனி, ரஜினியின் பால்ய நண்பனாக, வாலியப்பனாக புகுந்து புறப்பட்டு, சிக்ஸர் சிக்ஸராக அடிக்கிறார். ரஜினி வரும் காட்சிகளெல்லாம் சமுத்திரக்கனியும் இருக்கிறார். அப்படிப் பார்த்தால், சமுத்திரக்கனி பேசுகிற வசனங்களுக்குத்தான் கைத்தட்டல் பறக்கிறது. ஈஸ்வரி ராவ் போலவே இவருக்கும் காலா முக்கியமான படம்.

வெளிநாட்டில் இருந்து மகளுடன் வந்திறங்கும் ஹீமாகுரோஷி இரண்டாம் நாயகி. ரஜினியின் முன்னாள் காதலி. இருவருக்கும் நடக்கிற திருமணம் தடைப்படுகிறது. பிரிகிறார்கள். வேறுவேறு வாழ்க்கையில் காலம் காலாவைப் பார்க்கச் செய்கிறது. ‘காபியா டீயா என்ன சாப்பிடுதீக’ என்று ஈஸ்வரி ராவ் கேட்க, ‘காபிதான் பிடிக்கும் காபி கொடு’ என்று ரஜினி சொல்ல, அந்த இடம் அற்புதத் தருணம். அதேபோல், சபாரி சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு, அவர் வீட்டுக்குச் சென்று ரஜினி சந்திக்கும் காட்சியும் ‘செல்விதான் மனசுல இருக்கா. முழுசா இருக்கா’ என்று சொல்லிவிட்டு கிளம்புவதும், வெகு அழகு. இதையெல்லாம் தெரிந்து கொண்டு பொய்க்கோபம் காட்டும் ஈஸ்வரிராவ், ‘எனக்கு டிக்கெட் போடு. நான் அம்பாசமுத்திரம் போயிட்டு வாரேன். அங்கே தப்படிக்கிற பெருமாள் என்னை லவ் பண்ணினான். நானும் ஒரு எட்டு போய் பாத்தாறேன்’ என்று சொல்லும் இடமும் இருவரும் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சியலும், கவிதை.

கொஞ்சம் குடும்பம், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சமூகம் என்றெல்லாம் கலந்துகட்டியே போய்க்கொண்டிருக்கும் கதைக்கு, நானாபடேகர் ‘படா’ வில்லனாக வந்து, மிரட்டியெடுக்கிறார். அவரின் பேச்சும் வார்த்தையும் காலில் விழச் சொல்லுதலும் அவரின் பின்னணியில் உள்ள படங்களும் மும்பையின் புகழ்மிக்க தலைவரையும் சக்திமிக்க இயக்கத்தையும் சொல்வது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

தாராவிப் பகுதியை அப்படியே அச்சுஅசலாக செட் போட்டிருக்கிறார்கள். ரஜினியின் வீடும் வீட்டு வாசலும் கூட, அவ்வளவு அழகாக, பாரம்பரிய ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்தின் உழைப்பு, அமர்க்களம். சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் அப்படித்தான். அந்தக் கண்ணம்மா பாடல் கவிதை. கண்ணம்மா என்ற வார்த்தையே கிறக்கத்தைத் தரும் போல! இன்னும் கொஞ்சம் பிஜிஎம்மில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

'வேங்கையன் மகன் ஒத்தைல நிக்கேன். வாங்கலே. சண்டை செய்வோம்’ என்று அழைக்கிறார் காலா. அதுதான் இடைவேளைக்கான இடம். ரஜினி ரசிகர்கள், கை வலிக்க கரவொலி எழுப்ப, வாய் வலிக்க விசிலடிக்க, ஆனால் அவரின் மகன் சண்டையிட்டுக் காப்பாற்றுகிற போது, ஆடியன்ஸுடன் சேர்ந்து ரசிகர்களும் ஏமாந்துதான் போகிறார்கள்.

‘உனக்குக் காலாவைத் தெரியும். ஆனா முழு ரவுடியா இருந்த காலாவைத் தெரியாதுல்ல. இனிமே பாப்பே’ என்கிறார். ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் அப்படி வலு சேர்ப்பதாக இல்லை என்பதுதான் பெருங்குறை.

மணிவிழாவின் போது குடிப்பதும் குடித்து விட்டு செய்கிற கலாட்டாவும் அப்படியே பாடலும் பாட்டுக்கு ஆட்டமும் என குதூகலக் காட்சிகள் அருமை. கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்ல, ஊரே கூடி ஸ்டேஷனில் நிற்க, உள்ளே ரஜினி பேசும் ரவுசுக் காமெடிகளும் அவரின் வீரவசனங்களும் பழைய ரஜினியைப் பார்க்கிற உணர்வு. காட்சி முடிந்தும் கூட, ரசிகர்களின் ஆரவாரம் ஓய நேரமாகிறது.

எப்போதும் விறைப்புடனும் கூர்மையான பார்வையுடனும் கொந்தளிப்புப் பேச்சுடனும் வருகிற ரஜினியின் மகன் லெனினாக, மணிகண்டனின் நடிப்பு பிரமாதம். படத்தில் ஸ்கோர் செய்திருப்பவர்களில், மணிகண்டனுக்கும் இடம் உண்டு. அவருடன் வருகிற அந்த மராட்டிப் பெண் கேரக்டரும் அவளின் நடிப்பும் கச்சிதம். சம்பத், சாயாஜிஷிண்டே வந்தார்கள். நிற்காமல் சென்றுவிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினியை எத்தனை முறை ஸ்லோமோஷனில் காட்டுகிறார்கள் என்று போட்டியே வைக்கலாம். எடுத்ததுக்கெல்லாம் ஸ்லோமோஷன், க்ளோஸப் என்று காட்டும் போது, ஏதோ இருக்கு என்று ரசிகர்கள் ரொம்பவே எமோஷனலாகிறார்கள். ஆனால் அவை அப்படியே புஸ்ஸாகிப் போவதுதான் நெருடல். என்னப்பா வெறும் பில்டப்புதானா என்று ஏங்கி ஏமாந்துபோகிறார்கள் ரசிகர்கள். நானாபடேகர் தாராவிக்கு வந்து, பேசிவிட்டுக் கிளம்பும் போது, ‘நான் போகச்சொல்லவே இல்லியே’ என்பார் ரஜினி. என்ன... என்று நாம் யோசிக்கும் வேளையில், அவர் தாராவியைவிட்டு வெளியே செல்லமுடியாமல், மக்கள் நிறுத்திவிடுவார்கள். மீண்டும் ரஜினியிடம் வந்து, ‘காலா, நான் போலாமா’ என்று கேட்க, ‘இதாண்டா ரஜினி படம்’ என்று கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். அதேசமயம், நானாபடேகரின் வீட்டுக்குச் சென்று ரஜினி, ‘என் பொண்டாட்டியும் பையனும் செத்துட்டதால, நான் ஒண்ணும் துவண்டுபோயிடமாட்டேன்னு உங்கிட்ட சொல்றதுக்காக வந்தேன்’ என்று சொல்லும் காட்சி, அதை விட வீரியமாக, இன்னும் பலமாக இருந்திருக்கவேண்டும். இருந்திருக்கலாம்!

திருநெல்வேலி பூர்வீகம். அந்தப் பிரியத்தையும் சொல்லவில்லை. தாராவிதான் வாழ்க்கை. அந்த தாராவிக்கும் காலாவுக்குமான நெருக்கத்தை இன்னும் காட்டியிருந்தால், முழு கேரக்டரைசேஷனாக உருமாறியிருக்கும்.

ரஜினி - ஹீமா குரோஷியின் காதல் விஷயத்தை, ரிலே ரேஸ் மாதிரி, சமுத்திரக்கனியில் தொடங்கி ஒவ்வொருவராய் சொல்லும் காட்சி அற்புதம். என்ன... படம் நெடுகிலும் எல்லாக் காட்சிகளும் நீ...ளம் கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.

நிலம் எங்கள் உரிமை நல்ல கான்செப்ட். அன்றைய பஞ்சமி நிலப் பிரச்சினை. அதை தமிழகத்துக்குள் நடக்கிற கதையாகவே பண்ணியிருக்கலாம். அது இன்னும் நம்மை ஒன்றச் செய்திருக்கும். ரஜினியின் அரசியல் ஆரம்பத்துக்கு இன்னும் நல்ல அடித்தளமாகவும் அமைந்திருக்கலாம்.

போலீஸ் ஸ்டேஷனில், ரஜினி அமைச்சரைக் காட்டி, ‘யாரு இவரு’ என்று கேட்பார். திரும்பவும் கேட்பார். திரும்பத்திரும்பக் கேட்பார். ரசிக்கவும் விசிலடிக்கவுமான காட்சிதான் இது. ரஜினியும் தன் அசால்ட் நடிப்பில், பட்டையைக் கிளப்பியிருப்பார். ஆனால் என்ன... அந்தத் தூத்துக்குடியும் ‘யாருநீங்க?’வும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

என்ன வயதானாலும் ரஜினி மாஸ் ஹீரோ. அந்த மாஸ் ஹீரோ சாகசகங்களோ வியூகங்களோ எதுவும் இல்லாமல், ஒரு அந்தரத்தில் நிற்கிற பாத்திரப் படைப்பு, முழுமையாக இருந்தால், காலா, கொடி நாட்டியிருப்பான்.

ராமர் கதை எனும் பெயரில், ராமராக நானாபடேகரையும் வெட்டவெட்ட புறப்படுகிற தலைக்கு உரியவனாக ராவணன் போல் ரஜினியாகவும் காட்டியிருக்கிற விதம், ராமனை நாயகனாகவும் கடவுளாகவும் பார்க்கிற சமூகத்துக்கு குழப்பத்தையே விளைவிக்கும்.

காலா, குடும்பப் படமா. ஆமாம். காலாவில் அரசியல் இருக்கிறதா. இருக்கிறது. காலா, ஆக்‌ஷன் படமா. அதற்கு உண்டான சகலமும் உண்டு. ஆனால், எந்த ரூட்டைப் பிடிக்கவேண்டும் என முடிவெடுக்கவேண்டிய இயக்குநர், இங்கே கொஞ்சம், அங்கே யுடர்ன் போட்டு கொஞ்சம், அப்படியே லெஃப்ட் எடுத்து கொஞ்சம் என்று ரூட் மாறிமாறி கதை பண்ணியிருக்கிறார்.

இந்தக் காரணங்களால், குடும்ப, அரசியல், ஆக்‌ஷன் படங்களாக இல்லாத அதேநேரத்தில், ரஞ்சித் படமாகவும் இல்லை; ரஜினி படமாகவும் இல்லை. கதம்பமாகவே இருக்கிறான் காலா.

ஒரு முத்திரைப் பார்வை ரஞ்சித் மீது விழுந்திருக்கிறது. ஓர் படைப்பாளியாக, இயக்குநராக அந்த முத்திரையைத் தாண்டி வேறொரு முத்திரை பதிக்கவேண்டும் ரஞ்சித்.

அதேபோல், அரசியல் எண்ட்ரிக்கு, அட்டகாச அமர்க்களமாக பேர் சொல்லும்படியான ஒரு படமாக ரஜினி நடிக்கவேண்டும். இதுவே, ரஞ்சித்தின் சினிமா வளர்ச்சிக்கும் ரஜினியின் அரசியல் ஆரம்பங்களுக்கும் சர்வ நிச்சயமாக உதவும்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close