[X] Close

குணா - அப்பவே அப்படி கதை


gunaa-appave-appadi-kadhai

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Jun, 2018 14:32 pm
  • அ+ அ-

வசூல் குவிப்பதைக் கொண்டும் மனதில் நிற்பதைக் கொண்டும் என வெற்றிப் படங்கள் குறித்து பல கணக்குகள் உண்டு இங்கே. ஒன்றுமே இல்லாத படங்கள், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதும் இங்கு நடந்திருக்கிறது. ‘படம் நல்லாத்தானே இருக்கு. ஏன் ஓடல’ என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டது மட்டுமின்றி, ரசிகர்களே குழம்பிப் போனதும் நடந்திருக்கிறது. இப்படியான எல்லாக் கேள்விகளும் கொண்டு, இன்றைக்கும் மக்களின் மனதில் நிற்கிறான்... குணா!

படம் ஓடுதோ ஓடலியோ... அது அவரவர் கவலை. பார்த்த நமக்கு படம் திருப்தியா. இதுவே பலரின் சிந்தனை. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். கமல் படத்துக்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு என்பார்கள். அவரின் சில படங்கள், ரிலீசாகும் போது, கொண்டாடப்படாமல், பிறகு சில வருடங்கள் கழித்து, ‘ஆஹா ஓஹோ’ என்று கொண்டாடித் தீர்ப்பார்கள். டிவியில் எப்போது போட்டாலும் டைட்டில் தொடங்கி சுபம் கார்டு போடுகிற வரை பார்த்துவிடுவார்கள். ‘இந்த மைக்கேல் மதன காமராஜன் போட்டு ரொம்ப காலமாச்சு. அதைப் போட்டா தேவலை. போடவே மாட்டேங்கிறான்’ என்று சொல்லி பேச்சைத் தொடங்கி, படம் குறித்து அரைமணி நேரம் பேசுவார்கள். குணாவுக்கும் இதுவே நிகழ்ந்தது. இப்படித்தான் பேசிப்பேசி இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திரத்தின் அந்த மலையையொட்டிய இடுக்கு இடுக்கான குறுக்குச் சந்துகளில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து, ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கும் கமலின் முதுகுக்குப் பின்னிருக்கும் கேமிராப் பார்வையில் இருந்து கதையும் படமும் தொடங்கும்.

மிக மோசமான தகப்பன், அதைவிட மோசமான தொழில் செய்யும் அம்மா, அந்தக் கட்டமைப்பில் இருந்து, கட்டவிழ்க்கப்பட்ட ஒழுக்க மீறல்களுக்குள்ளிருந்து வளருகிற பையனின் மனசும் அவனின் குழப்பங்களும் இதெல்லாம் தப்பு என்கிற நினைப்பும் அந்தத் தப்புக்கு கடவுளைச் சரணடைவதே கதி என்கிற வேண்டுதலும் எனக் கலவையாக இருக்கிறான் கதாநாயகன் குணா.

பாவச்சகதியில் சிக்கிக்கொண்டிருக்கிற நம்மை ஒரு தேவதை மீட்க வருவாள், அவள் உமையவள் என்றும் அப்படி உமையவளாய் அவளிருக்க, நாம்தான் சிவன் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிற அதீத சிந்தனைகளுடன் இருக்கிற குணா, மனநலம் பாதிக்கப்பட்டவனாகவே பார்க்கப்படுகிறான். ‘இங்கெல்லாம் ஒரே அசிங்கம்’ என்கிறான். ‘அபிராமி வருவா. வந்ததும் போயிருவேன்’ என்கிறான். ‘இது என் மூஞ்சி இல்ல’ என்று புலம்புகிறான். ‘என் அப்பன் மூஞ்சி, என் மூஞ்சில என் அப்பன், மூஞ்சியை ஒட்டிட்டான்’ என்று பொருமிக் கதறுகிறான்.

அந்தக் கதறலும் அவனுடைய சிந்தனைகளும் நம்மையும் தாக்குகின்றன. திருட்டுக்கு இவனை சித்தப்பா பயன்படுத்திக் கொள்கிறார். வேறு சில பிரச்சினைகள் என்றால், அம்மாவே இவனைக் கொண்டு பயன்படுத்தி தப்பிக்கிறாள்.

அப்படியொரு சமயத்தில், நாயகியைப் பார்க்கிறான். ‘ஒருநாள் வருவாடா. பப்பப்பப்பப்பர பப்பப்பப்பப்பரப்பானு முழங்க வருவா’ என்று சித்தப்பா சொல்ல, திரும்பிப் பார்த்தால் அப்படியான வாத்தியங்கள் முழங்க, கம்பீரமாகவும் ஒய்யாரமாகவும் அழகாகவும் ஒயிலாகவும் தெய்வாம்சத்துடனும் வருபவளை... தன்னை ரட்சிக்க வந்த தேவதையாக, தெய்வமாக, உமையவளாக, அபிராமியாகவே பார்க்கிறான்.

கோயிலில் பணம், நகை கொள்ளை, தப்பித்தல் எனும் களேபரங்களுக்கு மத்தியில், நாயகியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான் குணா. பிறகு, வீட்டிலும் சிக்கல், பிரச்சினை என்றதும் அவளை அழைத்துக்கொண்டு, தமிழகத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்துவிடுகிறான் என அப்நார்மல் கதை பிடித்து, அதை நார்மல் உணர்வுகள் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் கமல்.

பெண்களை வைத்து ‘தொழில்’ நடத்தும் வரலக்ஷ்மி, அந்தக் கூட்டத்தில் உள்ள ரோஸி ரேகா, சித்தப்பா ஜனகராஜ், ஒப்புக்கு டாக்டர் காகா ராதாகிருஷ்ணன், மனநல டாக்டர் கிரீஷ் கர்னாட், தமிழுக்கு புதுவில்லனாக சரத் சக்சேனா, அவருக்கு முதலாளியாய்... நாயகி ரோஷிணியாய்... ரோஷிணி.

மெல்ல மெல்ல... சிலபல காட்சிகளுக்குப் பிறகு கமலின் குணசேகரன் என்கிற குணாவின் கேரக்டருக்குள் நாம் ஒண்டிக்கொள்வோம். உற்று கவனித்து லயிக்கத் தொடங்கிவிடுவோம். பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, ஆத்திரம், ஆவேசம் என எல்லா உணர்வுகளையும் புதுமாதிரிக் காட்டி, அசுரத்தனம் பண்ணியிருப்பார் கமல்.

அந்த ரோஷிணியின் கண்களும் அவருக்குக் குரல் கொடுத்த நடிகை சரிதாவும் மறக்கவே முடியாதவர்கள். அந்தக் கேரக்டரின் குரலாகவே சரிதாவின் குரல் முகம் காட்டாமல் நடித்திருக்கும்.

‘இந்த மாத்திரையை முழுங்கு’ ‘இதைச் சாப்பிட்டா அபிராமி வருவாளா’, ‘சாப்பிடு தூக்கம் வரும்’, தூக்கம் வந்தா கனவு வரும், கனவு வந்தா அதுல அபிராமி வருவாளா’, தூங்கு..., ‘காத்தே வரல...’ இது சத்தம்தான் வரும். வராது... வந்துதே... அன்னிக்கி... எப்படித் தெரியுமா...’வரும்வரும்வரும்வரும்வரும்...’ என்று கையை மின்விசிறி றெக்கைகள் போல் சுழற்றிக் கொண்டே பேசும் கமலை, அரவணைத்து அணைத்து ஆசுவாசப்படுத்துவார் ரேகா. கவிதை மாதிரியிருக்கும் காட்சி இது. அப்படியான காட்சிகளில் இதுவும் ஒன்று!

’எரகட்டா டாக்டர் சொல்லிட்டாரு. எனக்கு பைத்தியமில்லைன்னு’ என்று கொஞ்சம் லூசுத்தனமாய் சொல்லுவதுதான் கமல் டச். வணக்கம் சொல்லும் போது, கமலின் கை தெரியாது. ஜிப்பா மறைத்துவிடும். ‘சித்தப்பா ஜிப்பா. பெருசா இருக்கு’ என்பார். நாடகம் சொதப்பலானதும் திட்டுவார் அம்மா வரலக்ஷ்மி. ‘நீ என்னை ஆஸ்பத்திரிலேருந்து கூட்டிட்டு வந்து அவமானப்படுத்துறே. ஒரு பேப்பரும் பேனாவும் கொடு, 500 கையெழுத்துப் போடுறேன்’ என்பார். தியேட்டரே சிரித்து ரசித்துக் கைத்தட்டும்.

படத்தின் பெரும் பலம் கமல். பக்கபலம் எழுத்தாளர் பாலகுமாரன். படத்தின் வசனங்கள் அனைத்தையும் இன்றைக்கும் சிலாகித்துச் சொல்லுகிற ரசிகர்கள் எக்கச்சக்கம்!

கடத்தி வரும் வழியில், தண்ணீர் பிடிக்க வண்டியை நிறுத்துவார் கமல். ‘காவிரி பாயும் கன்னித்தமிழ்நாடு, கலைகளுக்கெல்லாம் தாய்வீடு’ என்று பாடிக்கொண்டே போவார். அதற்குள் காரை எடுத்துக்கொண்டு கிளம்புவார் ரோஷிணி. ‘வழிவிடு, இல்லேன்னா ஏத்திடுவேன்’ என்பார். அதெப்படி என்பார் கமல். விருட்டென்று கார் வந்து மோத, அது மோதி கர்ணகொடூரமாக கமல் விழ, என்னாச்சு எனும் பதட்டத்துடன் ரோஷிணி நெருங்கி வர, பிரமாண்டமாய்ச் சிரித்தபடி, ‘இதே வேற எவனாவது செஞ்சிருந்தா அவன் செத்துருப்பான். வேற யார்கிட்டயாவது செஞ்சிருந்தா அவனும் செத்திருப்பான். நான் நானா இருந்ததால சாகல; நீ நீயா இருந்ததால சாகல. விதி... எழுதிவைக்கப்பட்ட விதி. நமக்கு சாவு கிடையாது’ என்பார்.

இப்ப போட்டீங்களே என்ன ஊசி. பெண்டதால் என்பார் டாக்டர். அந்த மலை ஃபுல்லா பெண்டதால் வாசனைதான் என்பார். ‘டாக்டர் நாக்கு தடிச்சிருக்கா பாருங்க’ என்று கேட்பது, குழந்தைமையை உணர்த்தும் காட்சி. பின்னர், அம்மாவிடம் ‘லுலுலுலுலுவாவா’ ‘லுலுலுலுலுலுவா வா...’ என்று அழுதுகொண்டே சொல்லும் போது, அப்ளாஸ் பறக்கும்.

கொடைக்கானல் மலை. அங்கே இடிந்த தேவாலயம். அதில் தங்குவார்கள். அங்கிருக்கும் குருவி பறவைகள் சத்தமிட்டு அலறும். ‘பயப்படாதே. நாங்கதான். அதுவும் பயப்படுது, உன்ன மாதிரி’ என்பார். அவள் வந்த சந்தோஷத்தில் ஷேவிங் செய்து கொள்வார். ’குணா... ஜாக்கிரதை’ என்பார் ரோஷிணி. அவளையும் அவளின் பின்னே உள்ள ஒளியையும் பார்த்துப் பூரித்தவர், ‘அபிராமி அபிராமி...’ எனப் புலம்புவார். அதையடுத்து, பின்னணியில் கல்யாணம்... கல்யாணம் எனும் சந்திரபாபுவின் பாட்டு ஒலிபரப்பாகும். ‘தொப்பி வாங்கிக்கட்டுமா, கண்ணாடி வாங்கிக்கட்டுமா’ என்று ஒப்புதல் வாங்கி, அதையெல்லாம் வாங்கி அணிந்துகொண்டு வருவார். அந்த அப்பாவித்தனத்துக்குள் கொஞ்சம் மிடுக்கும் காட்டி நடக்கிற நடை, அமர்க்களம்.

படம் முழுக்க ஒரு நாவல் தன்மை இழையோடி வந்துகொண்டே இருக்கும். அதேபோல், தன் எழுத்துகளால், எந்த இடங்களிலெல்லாம் முத்திரை பதிக்க முடியுமோ அங்கெல்லாம் எழுத்துகள் தூவி, நிரவிக்கொண்டே வந்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

‘இந்த கட்டிப்போடுற பிஸ்னஸ்லாம் வேணாம். வேணும்னா ஓட்டிப்போமாட்டேன்னு சத்தியம் பண்ணித் தரேன்னு சொன்னேன். சத்தியம் பெருசா, சங்கிலி பெருசா?’

சர்ச்சில் இருந்து மலைகுகைக்கு ரோஷிணியைத் தூக்கிச் செல்லுவார் கமல். ‘குயிலே... குயிலே... அங்கே ஒரு குருவியை சுட்டுக்கொன்னுட்டாங்க குயிலு’ என்று ஏதோவொரு பறவையிடம் சொல்லுவார். அது சத்தமிடும். உடனே இவர் ‘ஆமாம்’ என்பார்.

‘நானே உன்னை அடிச்சேன். ஆனா நீதான் என்னைக் காப்பாத்தினே. என்ன வேணும் எங்கிட்ட? நானா, இந்த உடம்பா? என் உடம்புவேணுமா. எடுத்துக்கோ’ என்று கமலின் கையை இழுத்து நெஞ்சில் வைத்துக்கொள்வார். ‘அப்படிலாம் பேசக்கூடாது தப்பு’ என்பார் கமல். தியேட்டர் நெகிழ்ந்து கைத்தட்டும்.

‘என்னதான் வேணும்’ என்று கேட்க, ‘கல்யாணம்’ என்பார். ‘தாலி கூட ரெடியா இருக்கு’ என்று தன் கழுத்தில் கட்டிக்கொண்டிருக்கும் தாலியைக் காட்டுவார். ‘சரி கட்டு’ என்பார் ரோஷிணி. ‘பெளர்ணமிக்குத்தான் கட்டணும்’ என்பார். ‘இன்னிக்கிதான் பெளர்ணமி’ என்பார். ‘ம்ஹூம். நாளைக்கிதான். நாளைக்கிதான் பெளர்ணமி’ என்று வானம் பார்த்துச் சொல்லுவார். ‘நிலா ஆகாசத்துலயா இருக்கு. மனசுல இருக்கு. மனசுதான் நிலா. நிறைஞ்சிருக்கு மனசு. கட்டு’ என்பார். அங்கே, காட்சியும் வசனமும் நடிப்பும் இசையும் எனச் சேர்ந்து, காதலின் உன்னதத்தை, உயிர்ப்பை வெகு அழகாக உணர்த்திவிடும்.

இப்படி படம் நெடுக பல கவிதைகள்... காட்சிகள். ’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல!’ என்கிற அலறல், நம் அடிமனசு வரை சென்று எதிரொலித்து அசைத்துப் போடும். ‘இங்க எல்லாரும் பைத்தியம் குணா. பணப் பைத்தியம், பொம்பளப் பைத்தியம். ஆனா நீ மட்டும்தான் அப்படி இல்ல’ என்று ரோஷிணி சொல்ல, ‘இதத்தான் டாக்டரும் சொல்லுவாரு. குணா, உனக்குப் பைத்தியம் இல்ல, இந்த கணேச ஐயருக்குத்தான் பைத்தியம். அவருக்கு லெட்டர் எழுதணும். நீ சொன்னதை எழுதணும். அதுக்கு முன்னாடி உனக்கு எழுதணும்’ என்று சொல்லிவிட்டு அதன் பிறகு வருகிற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல், காதலின் மேன்மை சொல்லும். அழகை விவரிக்கும். அன்பைப் பரிமாறும்.

ரேகா மலையேறி வந்து, போலீசின் துப்பாக்கியைக் கேட்பார். தரமாட்டார். ரோஷிணி கொடுக்கச் சொல்வார். ‘குடுத்துடலாங்கிறியா. அப்ப இந்தா... எங்களுக்கு துப்பாக்கி வேணாம்.. பாத்து... தானா வெடிக்கும்’னு சொல்லுவார் கமல். ‘ஓ... தாலி கட்டிக்கிற மாதிரி கட்டி, குணாவை நம்ப வைச்சிட்டீங்களா. கீழே இறங்கினதும் தாலியைக் கழட்டிடலாம்’ என்று ரேகா சொல்ல, ‘ஏன் கழட்டணும். நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் மிஸஸ் குணா’ என்று ரோஷிணி சொல்ல, ஆடியன்ஸ் அழுகையும் சிரிப்புமாகக் கைத்தட்டுவார்கள். ராட்சதத் தனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ‘மிஸஸ் குணா...’ என்று கமல் கத்துகிற காட்சி, கனமாக்கிவிடுகிற அற்புதக் காட்சி.

காரில் ரோஷிணி. ஒரு அடி நகர்ந்தால், அதலபாதாளம். கமல் இறங்கிச் செல்லும்போது, ‘ஏய்.. ஏய்...’ என்று அழைப்பார். திரும்பிப்பார்க்காமல் செல்வார். ‘ஏய்... உன்னத்தான்...’ உம் பேரென்ன’ என்பார். குணாவுக்கு சந்தோஷம் பிடிபடாது. நம் பேரை கேக்கறாளே என்று! வெட்கமும் பெருமிதமுமாக, ‘கு...ணா’ எங்கே சொல்லு என்பார். ‘குணா’ என்று சொல்வார். கேட்ட கிறக்கத்திலேயே செல்வார். இடைவேளை என்று டைட்டில் வரும். இப்படி காட்சிகள் ஒவ்வொன்றிலும் கதையின் அடர்த்தி, வசனத்தின் அழகு, நடிப்பின் மேன்மை என்று பட்டையைக் கிளப்பும். சந்தானபாரதி இயக்கியிருப்பார்.

அப்பன் என்றும் அம்மை என்றும் டைட்டில் பாடலே கதையைச் சொல்லிவிடும். உன்னை நானறிவேன். என்னையன்றி யாரறிவார் பாடல், நாயகனின் குணத்தைச் சொல்லிவிடும். பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க... பாடல், அழகிய காதலை இன்னும் அழகாய்ச் சொல்லிவிடும். கண்மணி அன்போடு பாடல், மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல என்பதை உணர்த்திவிடும். படம் முழுவதும் இசையால் ராஜாங்கம் செய்திருப்பார். அந்தக் காட்சியை இசையின் மூலமாகவே கனப்படுத்தி நமக்குள் கடத்தியிருப்பார். 1992ம் ஆண்டு வெளிவந்தது குணா. 26 வருடங்களாகிவிட்டன. மலையின் அழகு சி.ஹெச்.வேணுவால் அவரின் கேமிராவால் அழகுறக் கடத்தப்பட்டிருக்கும். அந்த குகை, கொடைக்கானலில் இருக்கிறது. குணா குகை என்றே சொல்லப்படுகிறது. குணாவின் வெற்றிகளில் இதுவும் ஒன்று!

அம்மிக்கல்லை எடுத்து நெஞ்சில் அடித்துக்கொள்ளும் காட்சி, ஆஸ்பத்திரியில் சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே பேசிக்கொண்டு, சுவரில் முட்டி சுருண்டு விழும் காட்சி, ’அபிராமி உள்ளே இருக்கு. எழுத்து... வெளில இருக்கு’ என்கிற பொளேர் ரகம் அழகு. கோயிலில் இருந்து வருகிற கார் சேஸிங் காட்சி, ’அப்புறம் ஏன் லட்டு கொடுத்தே? லட்டு கொடுக்கும் போது முத்தம் கொடுத்தேன்ல. பொம்மை ஏன் உன்னை கையக் காட்டுச்சு. அப்பலாம் கண்ணைக் கண்ணைக் காட்டிட்டு பேசிட்டு, இப்ப புடிக்கலேன்னா என்ன அர்த்தம்?’ என்று ரோஷிணி கையில் உள்ள கத்திக்குப் பக்கத்தில் தன் தொண்டையைக் கொண்டு சென்று பேசும் காட்சி, ‘அபிராமி... அபிராமி... என்னை எல்லாரும் அடிக்கிறாங்க அபிராமி’ என்று கதறுவதும், ‘போய்யா... பேசிக்கிட்டிருக்கும் போதே சுடுறே...’ என்று கேட்பதுமாக கமலின் ஆகச்சிறந்த நடிப்புகளின் வேறொரு பரிமாணம்... குணா!

‘இல்ல இல்ல இல்ல... இது பொய்’ என்று சொல்லிவிட்டு, இறந்துவிட்ட ரோஷிணியை அணைத்துக்கொண்டு, ‘புண்ணியம் செய் தனமே ‘ என்று அபிராமி அந்தாதி பாடியபடி, ‘வா...’ என்று அவளைத் தூக்கிக்கொண்டு, குணா மலையில் இருந்து குதிக்கும் போது, உறைந்து உடைந்து நொறுங்கிப் போனார்கள் ரசிகர்கள்.

பாலகுமாரனின் வசனங்கள், இன்றைக்கும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. படம் பார்த்துவிட்டு, வெளியே வரும்போது, ஏதேனும் வசனங்களைச் சொல்லிப் பேசுவார்கள். அந்த வசனம் என்று ஒருவர் சொல்ல, இந்த வசனம்தான் டாப்பு என்று இன்னொருவர் சொல்லுவார். ஆனால், படம் பார்த்துவிட்டு வந்த அனைவருமே, இப்போது அந்தப் படத்தைப் பார்க்கிற அனைவருமே.. .ஒரேயொரு பேரைத்தான் சொன்னார்கள்; சொல்கிறார்கள்; சொல்லுவார்கள். அந்தப் பெயரே வசனமாகிவிட்டதுதான் எழுத்தாளர் பாலகுமாரனின் வெற்றி. கமல்ஹாசன் மகாகலைஞனின் வெற்றி!

அந்தப் பெயர்... அந்த வசனம்.. ‘அபிராமி... அபிராமி... அபிராமி’!

இந்த அபிராமிதான்... குணாவை காலங்கள் கடந்தும் நம்மால் மறக்காமல் இருக்கமுடிகிறது. இன்னும் இன்னுமாக நேசிக்கவைக்கிறது. 

அபிராமி... அபிராமி!

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close