[X] Close

டிஜிட்டல் மேடை 29: அரசியல் மங்காத்தா


29

  • kamadenu
  • Posted: 31 May, 2019 11:39 am
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

அதிகாரத்தைக் கைப்பற்ற குடும்ப வாரிசுகள் நடத்தும் அரசியல் சதுரங்க ஆட்டமொன்று, ‘ஹாட் ஸ்டார்’ சிறப்பு வெளியீடாக ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ என்ற இணையத் தொடராகி உள்ளது.

மகாராஷ்டிரத்தை ஆளும் கட்சியின் தலைவரான கெய்க்வாட்டைப் பட்டப்பகலில் மர்ம நபர்கள் சுட்டுக்கொல்ல முயல்கிறார்கள். இந்தத் தாக்குதலில் நினைவு திரும்பாது படுத்த படுக்கையாகிறார் கெய்க்வாட்.

அப்பாவின் அரசியல் சாம்ராஜ்ஜியத்துக்குப் பொறுப்பேற்க கெய்க்வாட்டின் இரு வாரிசுகளும் வரிந்துகொண்டு கிளம்ப, துரோகிகளும் எதிரிகளும் தங்களுக்கான தனிக் கணக்குகளுடன் இதில் அணி பிரிந்து நிற்கிறார்கள்.

வீட்டுக்குள் பாசமலர்களாக வளையவரும் அக்கா-தம்பியை, அரசியல் ஆசை எதிரெதிர் திசைகளில் முள் பாதையில் நிறுத்துகிறது. ஆண் வாரிசு என்பதால் தந்தையால் ஏற்கெனவே கைகாட்டப்பட்ட தறுதலை தம்பிக்கு மகுடம் தயாராவதைத் தொடக்கத்தில் விட்டுத்தருகிறார் அக்கா.

பின்னர் அதனை எதிர்ப்பதற்கான சரியான காரணம் கிடைத்ததும் சிலிர்த்துக் கிளம்புகிறார். இதற்கிடையே கெய்க்வாட் கொலை முயற்சியில் மும்பையின் பழைய நிழலுலகப் பாணி தென்படுவதாகக் காவல்துறை கவலை கொள்கிறது. நிழலுலகக் குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் வாசிம்கான் என்ற அதிகாரியை ரகசியமாக விசாரிக்கப் பணிக்கிறது.

இழந்த தனது ‘என்கவுன்டர்’ புகழை இந்த வி.ஐ.பி வழக்கு மீட்டுத் தரும் என்ற நம்பிக்கையில் களமிறங்கும் வாசிம்கான், சில பல விரட்டல் மிரட்டல்களைக் கடந்து கொலைத் திட்டத்தின் சூத்திரதாரியை நெருங்குகிறார்.

இந்த விசாரணையின் பாதையில், காதலிக்காக உயிரைப் பணயமாக்கும் காதலன், மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டு மருகும் மத்திம வயது கணவன், பெரிய இடத்து வில்லங்கங்கள் ஆகியவற்றுடன் வாசிம்கானின் சொந்த வாழ்க்கையின் துயரமும் கடந்து செல்கிறது.

படுக்கை வசமான கெய்க்வாட் மீண்டும் கண்விழித்தாரா? அவரது குடும்ப வாரிசுகளில் அரசியல் கனவு யாருக்குக் கைவசமாகிறது? கொலை முயற்சியின் பின்னணியிலிருந்த மர்மப் புள்ளி யார்.. என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அடுத்துவரும் அத்தியாயங்கள் விடை சொல்கின்றன.

ஓர் அரசியல் கிரைம் திரில்லரை பிரதிபலிப்பதற்காகத் தொடருக்குள் பார்வையாளரை ஒன்றவைக்கும் சுவாரசியங்களைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, எந்தவொரு காட்சியும் நீளமாக இல்லை.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே சட்டென அக்காட்சி அறுந்துபோக, மற்றொரு தளத்தில் கதை ஓடத் தொடங்குகிறது. முந்தைய காட்சியின் இறுதி என்பது, அனேகமாய்ப் பதிலற்ற கேள்வி ஒன்றில் தொக்கி நிற்கிறது.

முதன்மைக் கதாபாத்திரங்கள் மட்டுமன்றி, துணைக் கதாபாத்திரங் களையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருக்கிறார்கள். ரூ 25 ஆயிரம் கோடி கரன்சியை பூதமாய்க் காவல் காக்கும் விசுவாசி, தனது ஊதிய உயர்வைக் கோரத் தயங்குவது, பாலியல் தொழிலாளியாய் வரும் பெண் தன்னை மணக்க விரும்புபவனைத் தவிப்புடன் தவிர்த்து விலகுவது, துப்பாக்கி முனையில் குற்றவாளிகளை வேட்டையாடும் காவல் அதிகாரி, புரிந்துகொள்ளாத மனைவியிடம் கிடந்து அல்லாடுவது எனக் கதைக்கான தனித்தன்மையுடன் கதாபாத்திரங்கள் துலங்குகின்றன.

கெய்க்வாட்டாக வரும் அதுல் குல்கர்னி பெரும்பாலான அத்தியாயங்களில் படுத்தே கிடந்தாலும், கிடைத்த வாய்ப்பில் மீசையை வருடியபடி தேர்ந்த அரசியல்வாதியாய் மிரட்டுகிறார். அக்காவாக வரும் பிரியா பபத், தொடக்கத்தில் கூச்ச சுபாவியாய், தம்பிக்காக விட்டுக்கொடுத்தும் விலகியும் செல்கிறார்.

தான் புறக்கணிக்கப்படுவதன் ஆதிக் காரணத்தை அறிந்ததும் புது அவதாரம் எடுக்கிறார். முட்டாள்தனம் கலந்த முன்கோபியாக, தம்பி கதாபாத்திரத்தில் வரும் சித்தார்த்தின் ரப்பர் உடல்மொழி ஒத்துழைக்கிறது. இவர்கள் உட்படத் தொடரில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை கறுப்பு வெள்ளைக்கு அப்பால் பழுப்புப் பாதையிலேயே பயணிக்கின்றன.

அரசியல் ‘மங்காத்தா’ ஆட்டங்கள் நிறைந்த இந்தப் பாணி, அடுத்தடுத்த காட்சிகளில் அதிர்ச்சிகளை அடுக்கவும் உதவுகிறது. மும்பை போன்ற பரபரப்பும் செழிப்புமான நகரங்களின் விசித்திர இயல்பு, மத்திய வர்க்கத்தினரின் இயலாமைகள் போன்றவற்றைக் குறிக்கும் வசனங்கள் புதிய கோணத்தில் தெறிப்பாக வந்து விழுகின்றன. தமிழ் மொழிமாற்றமும் உறுத்தாது உடன் பயணிக்கிறது.

‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ கதையை முதலில் முழுநீள பாலிவுட் திரைப் படத்துக்காகவே உருவாக்கியிருந்தார் ஆந்திர குடும்ப அரசியல் பின்னணியை அறிந்தவரான இயக்குநர் நாகேஷ் குகுனூர். காட்சிகளின் வன்முறை, அரசியல், பாலியல், போதை உள்ளிட்ட சாத்தியங்களைச் சமரசமின்றிக் காட்சியாக்க, கடைசியில் இணையத் தொடராக்கி உள்ளார். பரபரவென அரசியல் திரில்லர் விரும்புவோர், பத்து அத்தியாயங்கள் அடங்கிய ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ தொடரை ரசிக்கலாம்.

முன்னோட்டத்தைக் காண:

அரசியல் மங்காத்தா 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close