[X] Close

கோடம்பாக்கம் சந்திப்பு: ‘சிறகு’ முளைத்த இணை!


  • kamadenu
  • Posted: 31 May, 2019 11:18 am
  • அ+ அ-

-Karthick Krishna_50130

‘சிறகு’ முளைத்த இணை!

கவிஞர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இயக்குநர் பரத் பாலாவிடம் ‘மரியான்’ படத்தில் உதவியாளராகப் பணியாற்றியவர். பாடலாசிரியராகவும் முத்திரை பதித்துவரும் அவர், மாலா மணியன் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிறகு’. 'மெட்ராஸ்', 'கபாலி', 'வடசென்னை', 'பரியேறும் பெருமாள்', உள்ளிட்ட பிரபலமான படங்களில் கவனத்துக்குரிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் நாயகனாக ஏற்றம் பெறுகிறார்.

அக் ஷிதா நாயகியாக அறிமுகமாகிறார். “உறவுகளின் புரிதல் தேடி, சென்னை முதல் கன்னியாகுமரி  வரை பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை” என்கிறார் இயக்குநர். இயற்கையோடு இயைந்த பயணத்துடன் இசையும் இணைந்துகொள்ளும் இந்தப் படத்துக்கு இசை அரோல் கொரேலி.

வைரலாகும் ஜோடி!

‘வாலு' படத்தில் நடித்து வந்தபோது சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்தனர் என்றும் ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் காதலும் முறிந்துவிட்டதாகவும் 2015-ல் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் ‘மஹா’ என்ற படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது.

ஹன்சிகாவை முன்னிறுத்திய பெண் மையக் கதையில் சிம்பு சற்று நீளமான கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பில் ஹன்சிகாவும் சிம்புவும் இணைந்திருக்கும் படங்கள்தாம் தற்போது இணையத்தில் வைரல். முறிந்த காதல் ஒட்டிக்கொண்டுவிட்டதாகவும் எழுதத் தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.

முதல் த்ரில்லர்!

சசிகுமாருக்கு, கெத்தான கிராமத்து நாயகன் கதாபாத்திரங்கள் தொடர்ந்து கைகொடுத்து வருகின்றன. முதல்முறையாக தற்போது முழுநீள புலன் விசாரணைப் படத்தில் நடிக்கிறார். பிரபல மலையாளப் பட இயக்குநரான ஜி.என்.கிருஷ்ணகுமார் எழுதி இயக்குகிறார். ’அஞ்சாதே’ தொடங்கி ‘டிக் டிக் டிக்’ உட்பட 13 வெற்றிப்படங்களைக் கொடுத்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் படம் இது.

அவரா.. இவர்!

‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் தனது அதிரடியான படங்களை வெளியிட்டு ‘அவரா.. இவர்?’ என நெட்டிசன்களை கேட்க வைக்கிறார். எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படத்தில் அவருக்கு ஜோடி, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய அனீஸ் அடுத்து இயக்கும் படத்தில் நாயகி, ஏற்கெனவே நாயகியாக நடித்து முடித்துவிட்ட ‘சின்ட்ரெல்லா’ என தற்போது இவரது கையில் மூன்று படங்கள்.

கண்ணாடிக்குப் பதிலாக திரைக்கதை!

படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் முன்பும் இயக்குநர் ‘ஷாட் ரெடி’ சொல்வதற்கு முன் கதாநாயகி தனது முகத்தில் மேக்-அப் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க ஒப்பனை உதவியாளரிடமிருந்து கைக் கண்ணாடியை வாங்கிப் பார்ப்பார். ஆனால், ஒரு பிரபலக் கதாநாயகி கண்ணாடிக்குப் பதிலாக கையில் திரைக்கதையின் காட்சிகள் அடங்கிய ‘ஸ்கிரிப்ட் பேட்’ மற்றும் கிளாப் போர்டு வைத்துக் கொண்டு உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற அனுபமா பரமேஸ்வரன்தான் அந்தக் கதாநாயகி.

‘பிரேமம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் ஜோடியாகத் தமிழில் ‘கொடி’. சில மலையாள, தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் ஷம்ஸு என்ற அறிமுக இயக்குநர் இயக்கிவரும் பெயரிடப்படாத படத்தில்தான் நடிப்பை ஓரம் கட்டிவைத்துவிட்டு உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றும் படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

supplement (2).jpg 

ஆக் ஷன் முகம்!

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் வில்லனாக அறிமுகமானதில் தொடங்கி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ‘ஜிகர்தண்டா, ‘தெறி, ‘கடைக்குட்டி சிங்கம்’ சிலுக்குவார்பட்டி சிங்கம்’ வரை குணச்சித்திர வேடங்களில் கலக்கிவருபவர் சௌந்தரராஜா. தற்போது ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘ ஒரு கனவு போல' படங்களின் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்திருக்கிறார்.

இதற்கிடையில் அறிமுக இயக்குநர் சாய்கிருஷ்ணா இயக்கிவரும் ‘காபி’ என்ற படத்தின் மூலம் முழுநீள ஆக்‌ஷன் நாயகன் வேடம் கிடைத்திருப்பதால் அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி நடித்துவருகிறார். இன்னொருபக்கம், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 63 படத்தில் முக்கியக் கதாபாத்திரம் கிடைத்திருக்கிறதாம் சௌந்தரராஜாவுக்கு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close