[X] Close

சிம்புவின் மிகப்பெரிய ரசிகை நான்: காயத்ரி ரகுராம்


  • kamadenu
  • Posted: 28 May, 2019 14:16 pm
  • அ+ அ-

ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல். இவர், ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ படங்களில் லட்சுமணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், காவி உடை அணிந்து ஹன்சிகா புகை பிடிப்பது போல் புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயினை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கொஞ்சம் நீளமான இந்தக் கதாபாத்திரத்துக்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சிம்பு. தற்போது சிம்பு - ஹன்சிகா சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘மஹா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

“சிறுவயதில் இருந்தே எனது நண்பன், அழகான எஸ்டிஆருடன் எனது முதல் பாடல். மாஸ்... அழகான ஹன்சிகாவுடன் வேலை செய்ததும் இனிமையாக இருந்தது. இறப்பதற்கு முன் நான் செய்ய நினைத்த விஷயங்களில் ஒன்று நிறைவேறிவிட்டது.

முழுமையான, தொழில்முறைக் கலைஞர் சிம்பு. அவரை 4 வயதிலிருந்தே எனக்குத் தெரியும். அவருடன் பணியாற்றியது, அவரது அறிவு மற்றும் திறமை என்னை மயக்கிவிட்டது. நான் அவரது தோழி, இப்போது அவரின் மிகப்பெரிய ரசிகை என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும். மாஸ்...” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

‘மஹா’ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close