எண்பதுகளின் தேவதை... அமலா!


அந்தப் படத்தை இயக்க முடிவு செய்ததுமே, நாயகியைத் தேடும் படலம் தொடங்கியது. கதைப்படி, பரதம் தெரிந்திருக்கவேண்டும் என்பதால், புதுமுகமாக வந்த பலரும் திருப்தியைத் தரவில்லை இயக்குநருக்கு. ஒருகட்டத்தில், கலாக்ஷேத்திரா நாட்டியப் பள்ளிக்குச் சென்று பார்க்கலாமே எனத் தோன்றவே, அங்கே சென்றார்.

உள்ளே நுழைந்து பார்த்தமாத்திரத்திலேயே, ‘இவளே நம் படத்தின் நாயகி’ என முடிவு செய்தார். பின்னர் நடனமும் ஆடிக்காட்ட, ‘என் கற்பனைக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கப் போகும் மைதிலி இவள்தான்’ என முடிவு செய்தார் இயக்குநர். அந்தப் படம் மிகப்பிரம்மாண்டமான வெற்றியைக் கொடுத்தது. பாடல்களுக்காகவும் அந்த நடிகைக்காகவும் திரும்பத் திரும்ப வந்து பார்த்தார்கள். அந்த நடிகை முதல் படத்திலேயே கொண்டாடப்பட்டார். அந்த இயக்குநர்... டி.ராஜேந்தர். அந்தப் படம்... ‘மைதிலி என்னைக் காதலி’. அந்த நாயகி ‘அமலா’.

ஐரீஷ் மொழி பேசும் அம்மா, வங்க மொழி பேசும் தந்தை. அப்பா கடற்படையில் வேலை செய்தார். இளம் பருவத்தில் படிப்பும் அங்கே இங்கே என்றிருந்தது. ஒருகட்டத்தில் சென்னையில் இருந்தபடி படிப்பது என முடிவானது. ஒருபக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் கலாக்ஷேத்திராவில் நடனம் என்று அமைதியாகவும் அழகாகவும் போய்க்கொண்டிருந்த அமலாவின் வாழ்வில் சிறுவயதிலேயே மிகப்பெரிய இடி. அப்பாவும் அம்மாவும் பிரிந்து போனார்கள்.

பொருளாதாரம் போட்டு காலைவாரிக்கொண்டே இருந்தது. படிப்பை விடுவதா, நடனத்தை விடுவதா என யோசிக்க முடியாமல் திணறினார் அமலா. மனம் முழுக்க வலி. ஏதேதோ வேலைக்குச் சென்றார். கிடைத்ததைக் கொண்டு, படிப்புக்குக் கொஞ்சம், நடனத்துக்குக் கொஞ்சம், எஞ்சியதுல் சாப்பாட்டுக்குக் கொஞ்சம் என வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் வசந்தம், கலாக்ஷேத்திராவின் வாசலுக்கே வந்து கதவைத் தட்டியது.

‘மைதிலி என்னைக் காதலி’ என்கிற முதல் படத்திலேயே மிகப்பெரிய நாயகி வேடம். கனமான, அழுத்தமான கேரக்டர். அமலாவின் கண்களும் முகமும் ‘ஐயோ பாவம்’ என்றிருக்க, படம் பார்த்த ரசிகர்கள் நொந்து போனார்கள். கேரக்டரில் கரைந்து போனார்கள். மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது ‘மைதிலி என்னைக் காதலி’.

அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கின. ‘பன்னீர் நதிகள்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ என்றெல்லாம் வந்தன. ‘மெல்லத் திறந்தது கதவு’ இன்னொரு கதவையும் திறந்துவிட்டது. மற்ற மொழிகளிலிருந்தும் வாய்ப்புகள் தேடி வந்தன. கமல்ஹாசன் தன்னுடைய பேசாத மெளன மொழிப் படத்துக்கு அமலாதான் சரியாக இருப்பார் என எண்ணினார். சிங்கீதம் சீனிவாசராவும் சம்மதித்தார். அதன்படி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில், மொழியில்லாத ‘பேசும்படம்’ வந்தது. அங்கெல்லாம் அமலா பேசுபொருளானார்.

ரஜினியுடன் ‘கொடி பறக்குது’ படத்தில் இணைந்து நடித்தார். ‘வேதம் புதிது’ படத்தின் கதாபாத்திரத்தை மிக அழகாகக் கையாண்டு, நல்ல நடிகை எனும் முத்திரையைப் பெற்றார். ‘கண்ணே கனியமுதே’ முதலான படங்கள் வரத்தொடங்கின. கமலுடன் ‘சத்யா’ பண்ணினார். மிகச்சிறந்த முறையில் தன் நடிப்பை அதில் வழங்கியிருந்தார். அதேபோல், ‘வெற்றிவிழா’ படத்திலும் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அமலா.

‘வளையோசை கலகலகலவென..’, ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’, ‘கண்ணுக்குள் நூறு நிலவா’, ‘பூங்காற்று உன் பேர் சொல்லும்’ என்று மறக்கமுடியாத பாடல்களிலெல்லாம், மறக்க முடியாத படங்களிலெல்லாம் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த அமலா, கொஞ்சம் கொஞ்சமாக எண்பதுகளின் நாயகியானார். எல்லா நாயகர்களுடனும் நடித்தார்.

ரசிகர்கூட்டம் உருவானது. எந்த ஹீரோ நடித்திருந்தாலும், ‘அமலா படம் வந்திருக்குய்யா’ என்று முதல் நாள், முதல் ஷோ பார்க்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். மணிரத்னத்தின் ‘அக்கினி நட்சத்திரம்’ வந்தது. படத்தின் குளிர்ச்சியாகவே அமலாவைப் பார்த்தார்கள். ‘அஞ்சலி’ எனும் தன் கேரக்டர் பெயரை, ‘ஒரு எலி, ரெண்டு எலி, மூணு எலி, நாலு எலி, அஞ்சலி’ என்று சொன்னதை, ரசிகர்கள் படம் பார்த்துவிட்டுத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், ஏற்கெனவே அழகியான அமலா, ‘அக்கினி நட்சத்திரம்’ படத்தின் மூலம் தேவதை மாதிரி வலம் வந்தார்.

அமலா வாய் திறந்து பேசுவதற்குள்ளாக, அவரின் கண்கள் பாதி வசனத்தைப் பேசிவிடும். அவரின் கண்கள் பேசிக்கொண்டிருக்கும், முகபாவனையில் முக்கால்வாசி நடித்து, நம்மை அசரடித்துவிடுவார். பாக்யராஜ்கூட அமலாவை வைத்து ‘காவடிச்சிந்து’ என்றொரு படத்தை இயக்கினார். ஏனோ.... அது அப்படியே நின்று போனது. ஆனாலும் கூட, படத்தில் எடுக்கப்பட்ட பாடலை, வேறொரு படத்தில், இணைத்து சினிமா போல் காட்டினார். அந்தப் படத்தில் பாக்யராஜும் அமலாவும் உள்ள பாடல் காட்சி வருகிறது என்பதற்காகவே பெரிய அளவில் பேசப்பட்டது.

“அமலாவால் எந்தக் கதாபாத்திரமும் செய்யமுடியும். ரீ டேக் வாங்காமல் நடித்துக் கொடுப்பார்” என்று பாரதிராஜாவே மனம் திறந்து பாராட்டியுள்ளார். பிராமணப் பெண் போல் சாருஹாசனுக்கு மகளாக ‘வேதம் புதிது’ படத்திலும் நடிக்க முடியும். ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில், இஸ்லாமியப் பெண்ணாகவும் அமலாவால் அசத்தமுடியும். சத்யா’ படத்தில், கேரளத்துப் பெண்ணாகவும் ஜொலிக்கமுடியும். “பாவாடை தாவணி, புடவை, மாடர்ன் உடைகள் என சகலத்துக்கும் அழகெனப் பொருந்துகிற உடற்கட்டு கொண்டவர் அமலா” என்று கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

உச்சநட்சத்திரமாக, மார்க்கெட் வேல்யூ கொண்ட நடிகையாக இருக்கும்போதே, திருமணம் செய்துகொண்டார் அமலா. தெலுங்கில் நிறைய படங்கள் வந்த சமயத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தார். அங்கே காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொண்டார்கள். இதன் பின்னர் சினிமாவே வேண்டாம் என்று 92-ம் ஆண்டிலேயே விலகி, குடும்பம், குழந்தைகள், பறவைகள், விலங்குகள் என வேறொரு உலகத்தைத் தேர்வு செய்துகொண்டு அமைதியாக வாழத் தொடங்கினார் அமலா.

ஆனால், காலம் அற்புதமான நடிகையை மீண்டும் திரைக்குள் கொண்டுவந்திருக்கிறது. இப்போது ‘கணம்’ எனும் படத்தில் அமலா நடித்திருக்கிறார். எண்பதுகளில் அவரைக் கொண்டாடிய ரசிகர்கள், ‘கணம்’ பார்த்துவிட்டு இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகில், அமலா எனும் நடிகை அமைதியாக வந்த புயல். ஒரு தென்றலைப் போல் நம்மையெல்லாம் ஈர்த்த அமைதிப்புயல்.

அமலாவுக்கு இன்று (செப்டம்பர் 12) பிறந்தநாள். இனி வரும் எல்லா ‘கணமும்’ அவர் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க அன்புடன் வாழ்த்துவோம்!

x