[X] Close

கட்சிப் பணிகள் முடிவு: 'கண்ணை நம்பாதே' படப்பணிகளில் உதயநிதி கவனம்


  • kamadenu
  • Posted: 25 May, 2019 19:15 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மக்களவைத் தேர்தல் பணிகள் முடிவு பெற்றதைத் தொடர்ந்து, 'கண்ணை நம்பாதே' படப்பணிகளில் கவனம் செலுத்த உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

'கண்ணே கலைமானே' படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கி வரும் 'சைக்கோ' மற்றும் மாறன் இயக்கி வரும் 'கண்ணை நம்பாதே' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், இடையே திமுக நடத்தும் கண்டனப் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் தலைக்காட்டத் தொடங்கினார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் பயணப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக தனது படத்தின் பணிகளை அனைத்தையுமே தள்ளிவைத்திருந்தார். தற்போது, மக்களவைத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தீவிர அரசியல் களம் கண்ட முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, “தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அளித்த பேரன்பு கலந்த வரவேற்புக்கு முதல் நன்றி. வரவேற்போடு நின்று விடாமல் வாக்குச்சாவடிக்கும் சென்று பெருவாரியான வாக்குகளை அள்ளித் தந்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த அத்துனை பேருக்கும் நன்றி! நன்றி! நன்றி!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தல் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 'கண்ணை நம்பாதே' படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது. அப்படத்தின் பணிகளுக்கு இடையே மிஷ்கின் இயக்கியுள்ள 'சைக்கோ' படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இனி நல்ல கதைகளில் மட்டுமே நடித்து, தொடர்ச்சியாக அரசியலிலும் கவனம் செலுத்த உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close