[X] Close

தேர்தல் முடிவுகள் கொண்டாட்டத்தைக் கிண்டல் செய்த ராதாரவி


  • kamadenu
  • Posted: 25 May, 2019 15:30 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கொண்டாட்டத்தைக் கிண்டல் செய்து, 'கொரில்லா' இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார்.

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொரில்லா'. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடித்திருக்கிறது. ஜூன் 21-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (மே 24) சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர்கள் ராஜுமுருகன், ஆர்.கண்ணன், விஜய் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் கலந்துகொண்டு நடிகர் ராதாரவி பேசியபோது, “ஜீவாவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், அவர் யாருக்கும் போட்டி கிடையாது. ஆனால், திறமையான நடிகர். முதல் படத்திலேயே ஜனாதிபதி கையால் பரிசு வாங்கியவர். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நான், அவருக்குப் பாராட்டு விழா வைத்தேன்.

ஜீவாவைப் பற்றி தைரியமாகப் பேசுவேன். வேறு யாரைப் பற்றியும் பேச பயமாக இருக்கிறது. ஒவ்வொரு படத்திலுமே ஜீவா வித்தியாசமாக நடித்து வருகிறார்.

பிரசங்கம் பண்றவரை அழைத்து வருமாறு ஒரு குதிரைக்காரனை கிராமத்துக்காரர்கள் அனுப்பினர். அவனும் அழைத்து வந்தான். அப்போது, ‘இந்த பாட்டுக் கச்சேரியைக் கேட்பதற்கு எவ்வளவு பேர் வருவார்கள்?’ என்று பிரசங்கம் பண்றவர் கேட்டார். ‘5000 பேர் வருவார்கள்’ என்று பதிலளித்தனர். ஆனால், அன்றோ மழை பெய்ததால் பலரும் வரவில்லை, காலியாக இருந்தது.

‘மழை நின்றுவிட்டது. ஆகையால், நான் கிளம்புறேன். நீ என்ன நினைக்கிற’ என்று குதிரைக்காரனிடம் கேட்டார் பிரசங்கம் பண்றவர். ‘எனக்குத் தெரியாது. என்கிட்ட 20 குதிரைகள் உள்ளன. புல்லுக்கட்டை எடுத்துக் கொண்டு போவேன். 19 குதிரைகள் வெளியே போயிருந்தாலும், 1 குதிரைக்கு மட்டும் புல்லுக்கட்டைப் போட்டுவிட்டு வருவேன்’ என்றான். ‘நம்மைப் பேசச் சொல்றான்’ என்று பிரசங்கம் பண்றவருக்குப் புரிந்துவிட்டது.

3 மணி நேரம் பேசிவிட்டு, ‘எப்படியிருந்தது என் பேச்சு?’ என்று குதிரைக்காரனிடம் கேட்டார். ‘எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. என்கிட்ட 20 குதிரைகள் உள்ளன. புல்லுக்கட்டை எடுத்துக் கொண்டு போவேன். 19 குதிரைகள் வெளியே போயிருந்தாலும், 20 புல்லுக்கட்டையும் 1 குதிரைக்குப் போடமாட்டேன்’ என்று தெரிவித்தான். நம்மைத்தான் சொல்றான் என பிரசங்கம் பண்றவர் புரிந்து கொண்டார். அப்படித்தான் ஜீவாவும். எந்தத் தயாரிப்பாளருக்கு, எந்த இயக்குநருக்கு எத்தனைப் புல்லுக்கட்டு போடணும் எனத் தெரிந்த ஒரே நடிகர் ஜீவாதான்.

இப்போது எல்லாம் மனிதர்களை வைத்துப் படமாக்குவதே ரொம்பக் கஷ்டம்.  இந்த ஹீரோ ஷுட்டிங்கிற்கு வரவில்லை, தேதிகள் தரமாட்டேங்கிறார், நீதிமன்றம் செல்வேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய புகார்கள் உள்ளன. ஆனால், இந்தத் தயாரிப்பாளர் - இயக்குநர் இருவருக்கும் இருக்கும் தைரியம், குரங்கை வைத்துப் படமெடுத்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குநர், என்னை ஒரு இடத்தில் ரொம்பக் கஷ்டப்படுத்திவிட்டார். எனக்குப் பிடிக்காமல் ஒரு வசனம் பேசியிருக்கிறேன். யாருடைய முகத்தையோ, உடலமைப்பையோ கிண்டல் செய்து வசனம் பேச மாட்டேன். இதில் ஒரு காட்சியில், அனைவருமே கொரில்லா முகமூடியை எடுத்து தப்பித்துவிடுவார்கள். யோகி பாபு மட்டும் என்னிடம் மாட்டிக் கொள்வான். அப்போது ஒரு வசனத்தைப் பேசவே மாட்டேன் என்றேன். ஆனால், யோகி பாபு பெருந்தன்மையோடு, 'ரவி அண்ணே... நீங்க சொல்லுங்க, நல்லாயிருக்கும்' என்றான். தன்னுடைய நெகட்டிவ்வை பாசிட்டிவ்வாக்கிய நடிகன், யோகி பாபுதான். இன்றைக்கான மக்களுக்கு, யோகி பாபு சீசன்தான்.

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. முதன்முறையாக இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிக்காரனும் வெடி வெடிக்கிறான். ‘எங்களுக்கு வெற்றி’ என்று வெடியைப் பற்ற வைக்கிறான். அதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். எனக்கு அந்தளவுக்கு அரசியல் தெரியாது. பொதுஜனமாக இருந்து, நான் பார்த்த முதல் தேர்தல் இதுதான். அதற்கு ஒருவர் புண்ணியம் கட்டிக் கொண்டார்.

'நல்லவன் வாழ்வான்' படத்தில் எம்.ஜி.ஆரை எதிர்த்து என் அப்பா நிற்பார். அப்போது எம்.ஜி.ஆர். ஜெயித்துவிடுவார். இருவரையும் தூக்கியபடி கத்திக்கொண்டே போவார்கள். அப்போது, 'யார் ஜெயிச்சது? யார் தோற்றது?' என்று என் அப்பா கேட்பார். 'நீங்கதான்' என்றவுடன், 'அடப்பாவிகளா... தோற்றவனுக்கு ஜெ. போடுறீங்க. ஜெயிச்சவனுக்கும் ஜெ. போடுறீங்க. என்ன நாடுடா இது?' என்று அப்போது எங்கப்பா பேசினார். இன்று அது நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது என்னை வாழவைத்துக் கொண்டிருப்பது, சமூக வலைதள நண்பர்கள்தான். இங்கு என்னை அழைக்கும்போது கூட, எம்.ஆர்.ராதா பையன், டத்தோ ராதாரவி என்று அழைக்காமல், யூ ட்யூபில் புகழ்பெற்ற ராதாரவி என்றுதான் அழைத்தார்கள். நான் நடித்த அத்தனை படத்தையும் விட்டுவிட்டார்கள். கைத்தட்டலுக்கு யாரும் மயங்கிவிடாதீர்கள். கைத்தட்டி ரசித்தால் டெபாசிட் போய்விடும் என்று அர்த்தம்” என்று பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close