[X] Close

கமல், ஸ்ரீப்ரியாவின் 'நீயா?’ - அப்பவே அப்படி கதை


  • kamadenu
  • Posted: 24 May, 2019 14:39 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

’நீயா நானா?’ என்கிற வார்த்தை இப்போது பிரபலம். ஆனால் எண்பதுகளில், மிகப்பெரிய ஹிட்டடித்த தலைப்பு ‘நீயா?’. மனிதன் திடீரென பாம்பாக மாறுவதும் பாம்பு தடக்கென்று அழகிய பெண்ணாக உருவெடுப்பதும் விட்டாலாச்சார்யா காலத்து விஷயம்தான் என்றாலும் கூட, ‘நீயா’ படத்தின் பாம்புக் கதையும் பழிவாங்கத் துடிக்கும் ஆவேசமும் ஒவ்வொருவராகப் பழிவாங்குகிற நேர்த்தியும்தான், இந்தியா முழுவதும் இந்தக் கதையை சக்கைப்போடு போடவைத்தது.

1976ம் ஆண்டு இந்தியில் ‘நாகின்’ என்ற படம், மிகப்பிரமாண்டமான படமாக உருவெடுத்து நின்றது. 79ம் ஆண்டு, இந்தப் படத்தின் கதை உரிமையை வாங்கி, தமிழில் ரீமேக் செய்தார்கள்.

பாம்பில் பல வகைகள் உண்டு. இஷ்டப்படி மனித உருவெடுக்கும் இச்சாதாரிப் பாம்பின் கதைதான் ‘நீயா’. காட்டுப்பகுதி ஒன்றில் ஒருவன் வந்துகொண்டிருக்க, மிகப்பெரிய கழுகு, அவனைத் துரத்தும். அவனைக் கொத்தப் பார்க்கும். அதில் இருந்து தப்பிக்க அவன் போராடுவான். அப்போது அங்கே வரும் கமல், துப்பாக்கியால் கழுகைச் சாகடித்து அவனைக் காப்பார்.

அவன் நன்றி சொல்லுவான். ‘தான் பாம்புகளை ஆய்வு செய்து எழுதுகிறவன்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்வார் கமல். கூடவே, இச்சாதாரிப் பாம்பு குறித்தும் சொல்லுவார். அப்போது அவன், ‘அந்த இச்சாதாரிப் பாம்பே நான்தான்’ என்று பாம்பாக மாறி காட்சி தருவான். மேலும் நாளை அமாவாசையன்று நானும் என் காதலிப் பாம்பும் ஆட்டமும்பாட்டமுமாக இருந்து சேருவோம் என்பான்.

கமலுக்கு ஐந்து நண்பர்கள். அவர்களுக்கு தகவல் தெரிவித்து காட்டுக்கு வரச்செய்வார் கமல். மொத்தம் ஆறு நண்பர்கள். அங்கே... ஸ்ரீப்ரியா ஆடிக்கொண்டிருப்பார். பாடிக்கொண்டிருப்பார். பாடலின் நிறைவில், ஒரு பாம்பு அவரைத் தழுவவரும். உடனே கமலின் நண்பர்களில் ஒருவர், துப்பாக்கியால் பாம்பைச் சுடுவார். பதறிப்போவார் கமல். ‘அந்தப் பாம்பு அவளின் காதலர்’ என்பார். ‘அந்தப் பாம்பின் கண்களில் நம் உருவமெல்லாம் இருக்கும். அதை வைத்து, பெண் பாம்பு, நம்மைக் கொல்லத்துடிக்கும்’ என்று சொல்ல... ஆண் பாம்பைத் தேடிச் செல்வார்கள்.

neeya-movie-poster.jpg 

அதன்படி பாம்புக்காதலன் இறந்துவிடுவான். அவர்களைப் பழிவாங்க பாம்பு ஸ்ரீப்ரியா சபதமேற்கும். ஒவ்வொருவராக, ஸ்ரீப்ரியா பாம்பு, எப்படிக் கொல்கிறது, எல்லோரையும் கொன்றதா என்பதுதான், கதை.

சரசரவென விறுவிறுவென செல்லுமே பாம்பு... அதுமாதிரி இப்பேர்ப்பட்ட கதைக்கு, அப்பேர்ப்பட்ட திரைக்கதை இன்னும் பொருத்தமாக இருந்தது. ஜெட் வேகத்தில் பறந்தது.

ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ், விஜயகுமார் என நண்பர்கள். ஸ்ரீப்ரியா, தன் காதலனைக் கொன்றவர்களைப் பழிவாங்க, ஒவ்வொரு பெண்ணாக உருமாறி வந்து, பழிதீர்ப்பார். மணப்பெண்ணாக, டான்ஸராக, வழியில் சிக்கிக் கொண்ட பெண்ணாக, கவிதாவாக, மஞ்சுளாவாக, லதாவாக, தீபாவாக என அவர் தினுசுதினுசாக வந்து, சாகடிப்பதை, ஜீவனான காட்சிகள் மூலம் அழகுப்படுத்தியிருப்பார்கள்.

இந்தியில் ஜிதேந்திரா, சுனில்தத் என பலரும் நடித்திருப்பார்கள். ரீனா ராய் முதலான பல நடிகைகள் நடித்திருப்பார்கள். அதேபோல், ‘நீயா’விலும் ஏராளமான நட்சத்திரங்கள். அனைவரையும் கொன்று போட்டாலும் கடைசியில், கமல் (ஹீரோவாச்சே) எப்படித் தப்பிக்கிறார், அந்தப் பாம்பு எப்படிச் சாகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

விஜயசாமுண்டீஸ்வரி பிலிம்ஸ் தயாரிப்பில், 1979ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியானது ‘நீயா’ திரைப்படம். கிட்டத்தட்ட படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன. ஸ்ரீப்ரியாதான் பிரதான நாயகி. ஸ்ரீப்ரியாதான் படத்தின் தயாரிப்பாளர். கலைமணி திரைக்கதை, வசனம் எழுதியிருப்பார். டைரக்டர் துரை இயக்கியிருப்பார். ஆமாம்... ‘பசி’ இயக்குநர் துரைதான் இந்தப் படத்தை இயக்கியிருப்பார். சங்கர் கணேஷ் இசையமைத்திருப்பார்கள்.

இந்தி ‘நாகீன்’ படத்தில் லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் இரட்டையர்கள் இசை. இங்கேயும் இரட்டையர்கள் இசை. ஆனால் என்ன, படத்தின் மிக முக்கியமான பாடல் டியூன், அங்கிருந்து இங்கே அப்படியே இறக்குமதி செய்யப்பட்டது. ஆளையே மயக்கிப் போடும் அந்த டியூன், இப்போது கேட்டாலும் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல் சொக்கித்தான் போவோம். ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’ என்கிற பாடல், நினைவிருக்கிறதுதானே!

‘ஒருகோடி இன்பங்கள்’ என்ற பாடலும் படமாக்கப்பட்ட விதமும் பட்டையைக் கிளப்பியது. ’உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை’ என்ற பாடல், ‘நான் கட்டில் மேலே கண்டேன்’ என எல்லாப் பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அப்போது மேடைக்கச்சேரிகளில், ‘ஒரே ஜீவன்’, ‘நான் கட்டில் மேலே கண்டேன்’ பாடல்கள் ஒன்ஸ்மோர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அதேபோல், ஒவ்வொருவராக கொல்லப்பட்டுக்கொண்டே வர... நம்பியார் சாமியாரைப் பார்ப்பார்கள் (படத்திலும் சாமியார்தான்). அவருக்கு உதவியாளர் சுருளிராஜன். நம்பியார், கமல் மற்றும் நண்பர்களுக்கு மந்திரித்த கயிறு தருவார். அந்தக் கயிறை எல்லோரும் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். அந்தக் கயிறு தடையாக இருப்பதாகச் சொல்லி, ஸ்ரீப்ரியா பாம்பு எப்படியெல்லாம் டெக்னிக் பண்ணுகிறது என்பதையும் தடதடபடபடவென சொல்லியிருப்பார்கள்.

இந்தியில் எப்படி மிகப்பெரிய வெற்றியையும் லாபத்தையும் தந்ததோ, அதேபோல் தமிழில் வந்த ‘நீயா’ படமும் செம வெற்றி; சூப்பர் வசூல் என மனசை அள்ளியது.

79ம் ஆண்டு பொங்கலன்று வெளியானது இந்தப் படம். அதே வருடத்தில், அலாவுதீனும் அற்புத விளக்கும், மங்கள வாத்தியம் என கமலுடன் நடித்தார் ஸ்ரீப்ரியா. அதேபோல், ரஜினியுடன் ‘அன்னை ஓர் ஆலயம்’ படமும் வெளியானது.

கமலுக்கு ‘கல்யாணராமன்’, ‘நீலமலர்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ முதலான படங்கள் வந்தன. அதேபோல், ஸ்ரீப்ரியாவுக்கு ‘வெற்றிக்கு ஒருவன்’, ‘வேலும் மயிலும் துணை’, ‘என்னடி மீனாட்சி’, ‘செல்லக்கிளி’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘யாருக்கு யார் காவல்’ என்று ஏகப்பட்ட படங்கள் வந்தன. ஆனால், கமலுக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மறக்கவே முடியாத படமாக அமைந்தது ‘நீயா”.

  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close