[X] Close

அந்த விளையாட்டுக்கு நான் தயாரில்லை! -பிரசன்னா பேட்டி


  • kamadenu
  • Posted: 24 May, 2019 12:06 pm
  • அ+ அ-

-ஜெயந்தன்

படத்துக்குப் படம் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் தனித்து நிற்பவர் பிரசன்னா. இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கிய அவர், தற்போது ‘திரவம்’ என்ற இணையத் தொடரின் வழியாக ‘டிஜிட்டல்’ தளத்திலும் நுழைந்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

இணையத் தொடரில் நடிக்க வந்ததற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் உண்டா?

இணையத் தொடர்கள் சினிமாவின் நீட்சி. தற்போதுதான் தவழத் தொடங்கியிருக்கும் குழந்தை. ரசிகர்கள் அதைத் தூக்கிக் கொஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இணையத் தொடர்கள் வரவேற்பைப் பெறத் தொடங்கியிருப்பதாகத் தெரியவந்தபோது, அதற்குள் இறங்கினால்தான் அதைப் பற்றி ஒழுங்காகத் தெரிந்துகொள்ள முடியும் என்று தோன்றியது.

எனவே, யோசிக்காமல் இறங்கிவிட்டேன். நடிப்பு என்று ஆனபிறகு சினிமா, தொலைக்காட்சி, இணையம் என்று எந்தவகை ஊடகமாக இருந்தால் என்ன; நடிகனுக்கு எல்லாமே ஒன்றுதானே. ஆனால், ‘திரவம்’ தொடரில் ஒரு நடிகனாகப் பல விஷங்களை நான் புதிதாகச் செய்வதற்குக் களம் அமைந்ததும் இதில் நடிக்கக் காரணம் என்பேன்.

‘திரவம்’ தொடர், ராமர் பிள்ளையின் ‘பயோபிக்’ என்று செய்தி வெளியானதே?

இது ராமர் பிள்ளையின் வாழ்க்கைக் கதை அல்ல. ஒரு விஞ்ஞானி. அவர் மாற்று எரிபொருளைக் கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு என்னமாதிரியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்ற கற்பனைக் கதை. கற்பனைக் கதை என்றாலும் அதில் நிஜத்தின் சாயல் இருக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

பெட்ரோல் என்பது சாதாரணம் விஷயம் அல்ல. உலகம் முழுவதும் இன்று பெட்ரோல் விலைதான் அரசியலையே தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட பெட்ரோலுக்கு மாற்றாகத் தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு நாட்டுப்புற விஞ்ஞானி மாற்று எரிபொருளைக் கண்டுபிடித்துவிட்டால் எத்தனை வில்லன்கள் முளைப்பார்கள்? அதன்பிறகு அவனது குடும்ப வாழ்க்கை என்னவாகும் என்பதை 8 எபிசோட்கள் கொண்ட தொடராக வழங்கியிருக்கிறோம்.

தொப்பை வைத்து, தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறீர்களே?

கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்ட தோற்றம் அது. மூலிகை பெட்ரோலைக் கண்டுபிடிக்கும் ரவி பிரகாசமாக நடித்திருக்கிறேன். பட்டப்படிப்போ முனைவர் பட்டமோ பெறாத அனுபவ அறிவு கொண்ட நாட்டுப்புற விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன்.

இதை ஒரு திரில்லர் தொடர் எனலாம். என்றாலும், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் இரண்டும் யதார்த்தமாக இருக்கும். இந்துஜா எனக்காகப் போராடும் எனது வழக்கறிஞராக நடித்திருக்கிறார். எனக்கும் எனது ஏழு வயது மகளுக்குமான பாசப்போராட்டமும் படத்தில் உண்டு.

மூலிகை பெட்ரோலைக் கண்டுபிடித்தபிறகு ஒருவனிடம் மாட்டி, அவனிடமிருந்து தப்பித்து, இன்னொருவனிடம் மாட்டி அவனிடமிருந்து தப்பித்து என்று ரோலர் கோஸ்டர் ஆக்‌ஷனும் தொடரில் உண்டு. இயக்குநர் அரவிந்த் கிருஷ்ணா ஒரு விறுவிறுப்பான திரைப்படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் சரியான விகிதத்தில் இயல்பை மீறாமல் கொடுத்திருக்கிறார்.

10.jpg 

சொந்தப் படம் தயாரிப்பதாக அறிவித்திருந்தீர்களே, என்னவானது?

புதுமுக இயக்குநரின் கதையைத் தேர்ந்தெடுத்துப் படப்பிடிக்கும் நாள் குறித்துவிட்டோம். படப்பிடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த பேட்டி ஒன்றுடன் இயக்குநர் ஓடிவந்து “சார் இதைக் கொஞ்சம் படிங்க”என்றார். வேறொரு படம், படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்த இயக்குநரின் பேட்டி அது. அதில் அவர் படத்தின் கதையைப் பற்றிக் கூறியிருந்த விஷயம் அப்படியே நாங்கள் எடுக்கவிருந்த கதையுடன் ஒத்துப்போனது எனது இயக்குநர், “ சார் இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. இதை நான் உங்களிடம் சொல்லாமல் படப்பிடிப்புக்குப் போயிருக்கலாம்.

ஆனால், அந்தத் தவறை நான் செய்யவிரும்பவில்லை” என்று சொல்லிவிட்டு நேர்மையாக விலகிக்கொண்டார். அதன்பிறகு வேறு நல்ல கதை அமையவில்லை. அப்படியே கதை கிடைத்தாலும் இன்று படத்தை எளிதாகத் தயாரித்து முடித்துவிடலாம்.

ஆனால், படத்தை வெளியிடுவது ‘பெரிய கேம்’. அந்த கேமை விளையாட எனக்குத் தெரியாது. அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை.  ‘திரவம்’ தொடரின் அனுபவங்களைப் பொறுத்து இணையத் தொடர் தயாரிப்பில் இறங்கலாம் என்று நினைக்கிறேன்.

சினேகா விளம்பரங்களுடன் நிறுத்திக்கொண்டுவிட்டாரே. அவர் சினிமாவில் நடிப்பதைத் தடுத்துவிட்டீர்களா?

சினிமாவில் நடிப்பதில் அவருக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. தொடர்ந்து நடிக்கும்படி நானும் கூறுகிறேன். ஆனால் 18 வருடங்கள் சினிமாவில் கதாநாயகியாக இருந்துவிட்டார். நிறைய வெற்றி, தோல்விகளைப் பார்த்துவிட்டார். சில விஷயங்கள் போதும் என்று சினேகா நினைக்கிறார்.

ஆச்சரியப்படுத்தும்விதமாகக் கதை ஏதாவது வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான் அவரது முடிவு. இப்போது அவரது உலகம்  முழுவதும் மகன் விஹான் மீதுதான். அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் மூழ்கிக் கிடக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close