[X] Close

செல்வராகவன் நேர்காணல்: திரையரங்குகளை அழிக்க முடியாது!


  • kamadenu
  • Posted: 24 May, 2019 12:02 pm
  • அ+ அ-

-கா.இசக்கிமுத்து

நான்கு நாள் தாடியுடன் இருப்பார் என்று எதிர்பார்த்துப்போனால் பளிச்சென்று இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். சூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர், கோடைக் காலத்தில் ஒன்பதாவது மாடியில் வசிக்கிறார். அவரது உயரமான வீட்டில் குளிர்ச்சியான மோரைப் பருகியபடி உரையாடியதிலிருந்து…

‘என்.ஜி.கே’ ஒரு உண்மைக் கதை என்று செய்திகள் வெளியானதே?

இது உண்மைக் கதை அல்ல. ‘என்.ஜி.கே.’ ஒரு சாதாரண மனிதன். இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் கதை. தலைமுறைகள் மாறிக் கொண்டே வருகின்றன. இன்றைய இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் மாற்றங்கள் வரும். எனது பார்வையில் என்ன தோன்றியதோ, அதைப் படமாக்கியிருக்கிறேன்.

சமீபத்திய அரசியல் நிகழ்வுகளின் தாக்கமோ பிரதிபலிப்போ படத்தில் இருக்குமா?

நல்ல சினிமா என்று வரும்போது எதையும் ரியாலிட்டி இல்லாமல் பண்ண முடியாது. ஆனால், சில காட்சிகள் அப்படியே பொருந்துகிற மாதிரி ஒற்றுமையாக இருக்காது.

சூர்யா முன்னணி நாயகன். அவருக்கென்று சில விஷயங்கள் படத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தீர்களா?

சூர்யா ஒரு நல்ல நடிகர் என்பதைத் தாண்டி அருமையான மனிதர். அவருடனான இந்தப் பயணம் மறக்க முடியாததாக இருந்தது. நிறைய மெனக்கெடுவார். இப்படம் சரியாக முடிந்திருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணமும் சூர்யாதான்.

‘செல்வராகவன் ஒரு சிறந்த நடிகர். வெட்கமே இல்லாமல் நடித்துக் காட்டு வார்’ என்று சூர்யா சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் நடிகராகவில்லை?

எந்த ஒரு காரணமுமில்லை. எமக்குத் தொழில் கவிதை என்பது மாதிரி, எனக்குத் தொழில் இயக்கம் மட்டுமே. நடிகராக வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததில்லை.

முதலில் எழுதி இறுதி செய்யப்பட்ட திரைக்கதையில் அடுத்தடுத்து மாற்றங்கள் செய்வீர்களா?

ஒரு கதையை எழுதி முடித்தவுடனே, படப்பிடிப்புக்குச் சென்றுவிட முடியாது. சில பிரச்சினைகள் இருக்கும். அதை வானிலை மாதிரித் தான் சொல்ல முடியும்.

மழை வருவது மாதிரி இருக்கிறதே என்று குடை எடுத்துக் கொண்டு போவதில்லையா?அந்த மாதிரி சில விஷயங்களைத் திரைக் கதையில் செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். உலகத்தில் இருக் கும் அனைத்து வேலைகளுமே இப்படித் தான் நடக்கின்றன என்று நம்புகிறேன்.

உங்களுடைய திரைக்கதை எழுதும் பாணியைக் கொஞ்சம் விவரிக்க இயலுமா?

இதுதான் முறை என்று சொல்லி விட முடியாது. அடிப்படைகள் என்ன என்பதிலிருந்து எழுதுவேன். இந்தக் கதாபாத்திரம் என்ன, ஏன் இப்படிச் சிந்திக்கிறது என்று ஆராய்ச்சி செய்து எழுதுவேன். எனக்கு ஆராய்ச்சி செய்வது நிறையப் பிடிக்கும்.

அந்தக் கதாபாத்திரம் எந்த மாதிரியான சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கும் என்று முழுமையாக உள்ளே சென்றுதான் எழுதவே தொடங்குவேன். திரைக்கதை எழுதுவது என்பது வேறொரு உலகம். அது பற்றிப் பேசினால், நிறையப் பேசிக் கொண்டே இருக்கலாம்.

zasfdd.jpg 

நடிகர்களிடம், ‘முன் தயாரிப்புடன் வராதீர்கள், கதையைப் படிக்காதீர்கள், படப்பிடிப்புக்கு வெள்ளைக் காகிதத் தைப் போல ‘பிளாங்’ ஆக வாருங்கள் என்று சொல்வீர்களாமே. ஏன்?

நடிகர்கள் இதுதான் என்று முடிவு செய்து வந்துவிட்டார்கள் என்றால், இயக்குநர் எப்படி வர வேண்டும் என்று எழுதினாரோ, அது காணாமல் போய்விடும். அதனால்தான் எதையுமே படிக்காமல் வாருங்கள் என்பேன்.

அப்படி வரும்போது, நாம் எப்படி இந்தக் காட்சி வர வேண்டும் என நினைத்தோமோ அப்படியே கொண்டுவந்து விடலாம். இதுவொரு கூட்டு முயற்சி. இயக்குநரின் தனிப்பட்ட முயற்சி என்று சொல்லிவிட முடியாது.

நீங்கள் இயக்கி முடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட வெளியீட்டில் தாமதம். ‘மன்னவன் வந்தானடி’ படப்பிடிப்பு பாதியில் நிற்பது என ஒரு இயக்குநராக இவற்றிலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

மிகப் பெரிய வருத்தம் இருக்கிறது. தினமும் காலையில் சூரியன் உதிப்பது மாதிரி, எழுந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரே இடத்தில் நின்றுவிடக் கூடாது. வேறு வழியில்லையே..

‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷ் பின்னால் நிற்கும் ஒருவராக விஜய் சேதுபதி நடித்திருப்பார். இன்று அவர் மிகப் பெரிய நடிகர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அப்போது படம், நடிகர்களுடைய நடிப்பு என்றே பார்த்தேன். மற்றபடி இது விஜய் சேதுபதி என்றெல்லாம் யோசிக்கவில்லை. இன்றைக்கு அவர் மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறார். அது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டிப்பாக எனது இயக்கத்தில் அவரைக் காணலாம்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் எப்போது தொடங்கத் திட்டம்?

வாழ்க்கை எப்படிப் போகிறதோ, அப்படிப் பயணிப்பவன் நான். அப்படத்துக்கு நிறைய பணிபுரிய வேண்டியதுள்ளது. நேரம் வரும் போது அதைப் பற்றிப் பேசலாம்.

நீங்கள் இயக்கியதிலேயே மிகச் சிறந்த படம் என்று எதைச் சொல்வீர்கள்? ஏன்?

எதுவுமே இல்லை. என் படங்களைப் பார்த்தால் தப்பு மட்டுமே தெரியும்.

இணையத் தொடர்கள் இயக்கும் எண்ணமுள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது. அதுதான் எதிர்காலமாக இருக்கப் போகிறது.

எதிர்காலம் அதுதான் என்கிறீர்கள். அப்படியென்றால், திரையரங்கு சென்று படம் பார்க்கும் அனுபவம் காணாமல் போய்விடும் என்று சொல்ல வருகிறீர்களா?

அது மட்டும் நடக்காது. கேபிள் டிவி வந்தவுடனே சினிமா போய்விடும் என்று சொன்னோம். அதையே டிவிடி வந்தவுடனும் சொன்னோம். திரையரங்குக்குச் சென்று டிக்கெட் வாங்கி ஆயிரம் பேருடன் உட்கார்ந்து படம் பார்ப்பது என்பதை என்ன வந்தாலும் அழிக்க முடியாது.

உங்களுடைய படம் வெளியாகும் நாளில், என்ன செய்து கொண்டி ருப்பீர்கள்?

அது பெரிய ரகசியம். அதை வெளியே சொல்ல விரும்பவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close