[X] Close

ம.நீ.ம, நாம் தமிழர் கட்சிகள் இருபெரும் சக்திகளாக வாய்ப்பு: இயக்குநர் சேரன் கணிப்பு


  • kamadenu
  • Posted: 24 May, 2019 10:54 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இருபெரும் சக்திகளாக உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குநர் சேரன் கணித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்  எவ்வளவு வாக்குகள் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நகர்ப்புற பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், அமமுக எதிர்பார்த்த வாக்குகளைப் பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகள் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ம.நீ.ம 16.5 லட்சம், நாம் தமிழர் 16.0 லட்சம் வாக்குகள் வாங்கி 32.5 லட்சம் மக்கள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்கள். 39 தொகுதிகளில், 27 இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் ம.நீ.மய்யத்தை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 12 இடங்களில் ம.நீ.ம அதிக வாக்குகள் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்

திமுகவும் அதிமுகவும்  மக்களுக்கான பணியாற்றுவதிலும் சிறப்பாக செயல்படாமல் முன்னர் போலவே இருந்தால்  நாம் தமிழரும், ம.நீ.மவும் இருபெரும் சக்திகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருபெரும் கட்சிகளை எதிர்த்து தைரியமாக களத்தில் இறங்கி தனியே நின்று மாற்றத்திற்கு வித்திட்டவர்களை வாழ்த்துவோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திமுக கூட்டணியின் 38 எம்பிக்களில் 12 பேர் போராளிகளாக சிந்தனையாளர்களாக, சமூக அக்கறையுடைவர்களாக, புதியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் செயல்படுவதை பொறுத்து திமுக கூட்டணி தன் பலத்தை இன்னும் பெருக்கி கொள்ள வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார் சேரன்

இறுதிநிலவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து இயக்குநர் சேரன் தற்போது, “காலையில் இறுதி நிலவரப்படி நாம் தமிழர் கட்சி 16.67 லட்சம் வாக்குகள் வாங்கியதாக தகவல் வந்துள்ளது.. அப்படியெனில் மநீமவை விட சற்று அதிகமாகவே உள்ளது.. அல்லது சமமாக உள்ளது.. யார் பெரியவர் என்பதற்காக அல்ல என் பதிவு.. மக்களில் பத்து சதவீதத்துக்கு மேல் மாற்றம் விரும்புகிறார்கள் எனக்கூறவே” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close