[X] Close

இளையராஜா -75 :  அந்த இரவின் விழிகளில் இளைஞனின் பகல்!


ilayaraaja-maanabaskaran

  • மானா பாஸ்கரன்
  • Posted: 01 Jun, 2018 19:01 pm
  • அ+ அ-

1964-ம் ஆண்டு. 

மே மாதம் 28-ம் நாள். 

ஜவஹர்லால் நேரு காலமான மறுநாள். 

சென்னை சீரணி அரங்கத்தில் - ரோஜாவின் ராஜா நேருவுக்காக மாபெரும் அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடாகியிருந்த’தினத்தந்தி’யின்  செய்தியை, அந்த இளைஞர்கள் எல்லோரையும் போல வாசித்தார்கள். அவர்களும் அந்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சில் சோகம் படர, கண்களில் கண்ணீருடன் ரோஜாவின் ராஜாவுக்கான அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர். 

 நேருவைப் பற்றி தன்னுடைய பூந்தமிழால் கவியரசு கண்ணதாசன் செதுக்கிய அஞ்சலிப் பாடலை, தனது கணீர்க் குரலெடுத்துப் பாடுகிறார் சீர்காழி கோவிந்தராஜன். கடற்கரையில் குவிந்திருந்த தமிழர்களின் மனமெல்லாம் அந்தப் பாடலில் குவிந்தது. அந்த மூன்று இளைஞர்களும் அந்தப் பாடலை உருக்கமுடன் கேட்டு நேருவுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றனர்.

கவியரசு கண்ணதாசன் எழுதி - சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல்:

சாவே ! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ ?

சீரிய நெற்றி எங்கே ?

சிவந்தநல் இதழ்கள் எங்கே ?

கூரிய விழிகள் எங்கே ?

குறுநகை போன தெங்கே ?

நேரிய பார்வை எங்கே ?

நிமிர்ந்த நன்நடைதான் எங்கே ?

நிலமெலாம் வணங்கும் தோற்றம்

நெருப்பினில் வீழ்ந்ததிங்கே .

அம்மம்மா என்ன சொல்வேன்

அண்ணலைத் தீயிலிட்டார்

அன்னையைத் தீயிலிட்டார்

பிள்ளையைத் தீயிலிட்டார்

தீயவை நினையா நெஞ்சைத்

தீயிலே எரிய விட்டார்

தீய சொல் சொல்லா வாயை

தீயிலே கருகவிட்டார் .

பச்சைக் குழந்தை

பாலுக்குத் தவித்திருக்க

பெற்றவளை அந்தப்

பெருமான் அழைத்து விட்டான்

வானத்தில் வல்லூறு

வட்டமிடும் வேளையிலே

சேய்க் கிளியைக் கலங்கவிட்டு

தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான் .

சாவே ! உனக்கொரு நாள்

சாவு வந்து சேராதோ

சஞ்சலமே ! நீயுமொரு

சஞ்சலத்தைக் காணாயோ

தீயே ! உனக்கொரு நாள்

தீ மூட்டிப் பாரோமோ

யாரிடத்துப் போயுரைப்போம் ?

யார் மொழியில் அமைதி கொள்வோம் ?

யார் துணையில் வாழ்ந்திருப்போம் ?

யார் நிழலில் குடியிருப்போம் ?

வேரொடு மரம் பறித்த

வேதனை எம்மையும் நீ

ஊரோடு கொண்டு சென்றால்

உயிர்வாதை எமக்கிலையே

நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார் தருவார்

நேரு இல்லா பாரதத்தை

நினைவில் யார் வைத்திருப்பார் ?

ஐயையோ காலமே

ஆண்டவனே எங்கள் துயர்

ஆறாதே ஆறாதே

அழுதாலும் தீராதே

கை கொடுத்த நாயகனை

கைப் புறத்தே மறைத்தாயே

கண் கொடுத்த காவலனைக்

கண் மூட வைத்தாயே

கண்டதெல்லாம் உண்மையா

கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா

கற்பனையா அம்மம்மா

நேருவா மறைந்தார் , இல்லை !

நேர்மைக்குச் சாவே இல்லை !

அழிவில்லை முடிவுமில்லை

அன்புக்கு மரணமில்லை

இருக்கின்றார் நேரு

இங்கே தான் !

இங்கே தான் !

எம்முயிரில் -- இரத்தத்தில்

இதயத்தில் நரம்புகளில்

கண்ணில் -- செவியில்

கைத்தலத்தில் இருக்கின்றார்

எங்கள் தலைவர்

எமைவிட்டுச் செல்வதில்லை

என்றும் அவர் பெயரை

எம்முடனே வைத்திருப்போம்

அம்மா... அம்மா... அம்மா!

- இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் என்ன ராகத்தில் பாடினார் என்பது அந்த மூன்று பேருக்கும் தெரியாது.

அந்த மூன்று இளைஞர்களும் அறைக்குத் திரும்பினார்கள்.

அன்று இரவு - மூன்று சகோதரர்களில் இருவர் தூக்கத்தின் தோழர்களாக - ஒருவரின் விழிகளில் இருந்து உறக்கம் வெளிநடப்பு செய்தது.

 நள்ளிரவு... கவியரசரின் வரிகள் அந்த இளைஞனை மென்றது. உணர்வுகளைப் பிசைந்தது. பாட்டினில் அன்பு செய்யச் சொன்னது.

அந்த இளைஞன்... தனது விரல்களைப் பதித்து தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியில் கவியரசரின் சாவே ! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ ?’ என்கிற வரிகளுக்கு புதிய மெட்டமைத்தான்.  

அந்தப் பனி இரவு தனது குளிர் செவியால் அந்த மெட்டை ருசித்தது. 

அந்த இளைஞனின் இதழ்களில் இரவின் புன்னகை. 

அந்த இரவின் விழிகளில் இளைஞனின் பகல்.

அந்த மன்னன் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி மேலே மேலே எழுப்புவதற்கான முதல் செங்கல் அதுதான்.

ஆம்... தன்னுடைய ஆயிரமாயிரம் மெட்டுகளால் தமிழர்களின் உள்ளங்களைத் திருவிழாக் கூடமாக்கிய இளையராஜாவின் முதல் மெட்டு அதுதான்! 

 இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இமை மூடாது... அன்று விழித்த ராஜாவின் பகல்!

இரவுகளை நல்லிரவாக்கும் அந்த இசைச்சூரியனை வாழ்த்துவோம்!

இளையராஜா குறித்த கட்டுரைகளைப் படிக்க...

இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு!

 

  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close