[X] Close

எல்லாவற்றையும் தமிழ் ராக்கர்ஸே வெளியிடட்டுமே?- நடிகர் பிரசன்னா கலாய்ப்பு


  • kamadenu
  • Posted: 22 May, 2019 19:42 pm
  • அ+ அ-

படங்கள், வெப் சீரிஸ் எல்லாவற்றையும் தமிழ் ராக்கர்ஸிடம் கொடுத்துவிடலாம். அவர்களே வெளியிடட்டும் என நடிகர் பிரசன்னா கிண்டலாகப் பேசியுள்ளார்.

பிரசன்னா நடிப்பில், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் திரவம் என்ற வெப் சீரிஸின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் நடிகர் பிரசன்னா பேசியதாவது:

"முதலில் செல்வராகவன் - யுவன் - அரவிந்த் கிருஷ்ணா தொடங்கிய ‘White Elephants’ தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ணுவதாக இருந்தது. எனது நேரமா என்னவென்று தெரியவில்லை. அது நடக்கவில்லை. அதற்குப் பிறகு நானும், அரவிந்த் சாரும் நிறைய முறை பேசியிருக்கிறோம். ‘நிபுணன்’ படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்தோம்.

எதனால் ‘திரவம்’ வெப் சீரிஸில் என்னை நடிக்க வைக்க நினைத்தார் என்று தெரியவில்லை. ஆனால், ‘திரவம்’ வெப் சிரீஸுக்கு கண்டிப்பாக என் வாழ்க்கையில் முக்கியமான இடமுண்டு. இப்போது இங்கே நிற்கும் மனநிலையே வித்தியாசமாக இருக்கிறது. படத்தில் நடித்தால் அது வெளியான அன்று மக்கள் எப்படி பார்த்து ரசிக்கிறார்கள், வசூல் எப்படி இருக்கிறது, கூட்டம் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவரும்.

வெப் சீரிஸ் என்பது புதிய களம். நமது ரசிகர்களுக்கும் அவ்வளவாக பரிச்சயமில்லாத களம். இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. எனவே இப்போது வரைக்கும் திரவம் பற்றிய மக்கள் கருத்து சரியாகத் தெரியவில்லை. ஊடகத்தில் இருப்பவர்களுக்கும் இனி அதிக வேலை. வாரா வாரம் வரும் படங்களோட இனி வெப் சீரிஸையும் பார்க்க வேண்டும். சினிமாவும், ஊடகத்தினரும் வேறு வேறல்ல. உங்கள் ஆதரவு வெப் சீரிஸுக்கு முக்கியம். சினிமாவின் நீட்சி தான் வெப் சீரிஸ். சினிமா எடுப்பது போலத்தான் வெப் சீரிஸை எடுக்கிறோம்.

நடிப்பு பிடித்து நடிக்க வந்தவன் நான். எனவே சினிமாவோ, வெப் சீரிஸோ, விளம்பரமோ எந்தத் தளம் என்பது முக்கியமல்ல. தெரிந்த வேலையை பிடித்துச் செய்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.

மூலிகை பெட்ரோல் என்றதும் ஒருவரின் முகம் நமக்கு நினைவில் வரும். ஆனால் இது அவர் வாழ்க்கைக் கதை இல்லை. நிஜத்தில் ஒருவர் அப்படி கண்டுபிடித்தால் என்ன ஆகும் என்ற கற்பனையே இது என்றார் அரவிந்த். இந்தக் கதாபாத்திரத்துக்கான மெனக்கெடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

இன்று ஒரு படம் எடுத்து வெளியிடுவது எவ்வளவு கடினம் என்று அனைவருக்கும் தெரியும். எல்லாம் சரியாக அமைந்தாலும் ரசிகர்களை அரங்குக்கு வரவழைப்பது கடினம். தமிழ் ராக்கர்ஸில் வெளியாகாமல் தடுப்பது கடினம்.

ஜீ 5 சந்தாவில் தள்ளுபடி கொண்டுவந்தார்கள். அந்த விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்கள். அதற்கு ஒருவர், நீங்கள் பதிவேற்றிய பத்தாவது நிமிடத்தில் தமிழ் ராக்கர்ஸில் நல்ல தரத்தில் வந்துவிடும். பிறகு நான் ஏன் தள்ளுபடி விலையைக் கூட கொடுத்து சந்தா வாங்க வேண்டும் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

சினிமா இருக்கும் நிலையில் வெப் சீரிஸ் போன்ற புது கிளைகள் தோன்றுவது மிக முக்கியம். அபிராமி ராமநாதனே அவரது திரையரங்கை மூடிவிட்டு அங்கு குடியிருப்பை கட்டிவிட்டு சின்ன அரங்குகள் மட்டும் கட்டப்போகிறார் என்று கேள்விப்பட்டேன்.

இனி ஏன் சினிமா, ஏன் வெப் சீரிஸ் எல்லாம் எடுக்க வேண்டும்? ஏதோ ஒன்றை எடுத்து தமிழ் ராக்கர்ஸுக்கு கொடுத்துவிடலாமே. அவர்களாகப் பார்த்து ஐந்தோ, பத்தோ ஏதாவது பணம் கொடுத்தால் நன்றி என்று சொல்லி வாங்கிக் கொள்ளலாமே என்று தோன்றியது. ஒருவேளை அந்த நிலைமை தான் வரும் போல இருக்கிறது.

விஷாலும் என்னென்னமோ செய்து பார்க்கிறார். ஆனால் இந்த தமிழ் ராக்கர்ஸைத் தான் எதுவும் செய்ய முடியவில்லை.  எல்லாவற்றையும் அவர்களே வெளியிடட்டும் என்று இந்த யோசனையை வேண்டுமானால் விஷாலுக்கு சொல்கிறேன்".

இவ்வாறு பிரசன்னா பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close