[X] Close

படங்களை குறைத்துக் கொண்டது ஏன்? - காஜல் அகர்வால் விளக்கம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 10:27 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

தற்போது படங்களை மிகவும் தேர்வு செய்து நடிப்பது ஏன் என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் காஜல் அகர்வால்.

தெலுங்கில் ’லட்சுமி கல்யாணம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

ஆனால், முன்பைப் போல் அல்லாமல் தற்போது படங்களை மிகவும் தேர்வு செய்து நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தற்போது தனது முதல் படமான 'லட்சுமி கல்யாணம்' படத்தின் இயக்குநர் தேஜா இயக்கத்தில் 'சீதா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தற்போது மிகவும் தேர்வு செய்து நடிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து காஜல் அகர்வால், “ஆரம்ப கட்டத்தில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். ஒரு வருடத்தில் ஏழு படங்கள் கூட வெளியாகியுள்ளன. இரண்டு ஷிஃப்டில் வேலை செய்வேன். ஆனால் நான் சோர்வடையும் வரை அதன் தாக்கம் எனக்குத் தெரியவில்லை. எனது சகோதரி நிஷா அகர்வால் திருமணம் நடந்தபோது, அதில் நான் குடும்ப உறுப்பினரைப் போல அல்லாமல் விருந்தினரைப் போல கலந்து கொண்டேன்.

அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது விசேஷ தினத்தில் என்னால் அவருடன் ஒழுங்காக இருக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. வேலைப்பளுவை குறைத்துக் கொள்ள முடிவெடுத்தேன். இப்போது 4 படங்கள் வரை மட்டுமே நடிக்கிறேன். குடும்பம், நண்பர்களுடன் நேரம் செலவிடுகிறேன்.

இன்னமும் நான் வேலையே கதியாக இருப்பவள் தான். ஆனால் 7 நாட்களும், 24 மணிநேரமும் வெறிபிடித்தவள் போல வேலை செய்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கற்றுவருகிறேன். போகப் போக வேலை - வாழ்க்கை இரண்டையும் ஒழுங்காக சமாளித்துவிடுவேன் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close