[X] Close

இளையராஜா 43; மறக்க முடியாத ‘மச்சானைப் பாத்தீங்களா?’


43

  • kamadenu
  • Posted: 20 May, 2019 10:50 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

தமிழ் சினிமாவின் இசையை, ’அன்னக்கிளி’க்கு முன் ’அன்னக்கிளி’க்குப் பின் என்றுதான் பிரிக்கவேண்டும். அதாவது இளையராஜாவுக்கு முன்... இளையராஜாவுக்குப் பின் என்று பார்க்கவேண்டும்.

அதுவரை இந்திப் பாடல்களின் ஆதிக்கம் தமிழகத்தின் கடைக்கோடி டீக்கடை, சலூன்கடைகளிலும் கூட கோலோச்சிக் கொண்டிருந்தது. ‘இந்தி தெரியுதோ புரியுதோ... இந்திப் பாடல்களை முணுமுணுத்தபடி சைக்கிளில் பறந்தார்கள் இளைஞர்கள்.

கல்லூரியில் விழா கல்யாண வீட்டில் கச்சேரி என எங்கு பார்த்தாலும் இந்திப் பாடல்களே ஆக்கிரமித்திருந்தன. தியேட்டரில் தமிழ்ப்படம் ஓடினாலும் படம் தொடங்குவதற்கு முன்பு, இடைவேளையில் இந்திப் பாடல்களே ஒலிபரப்பப்பட்டன.

இவையெல்லாம் மாறத் தொடங்கிய காலமும் வந்தது. தமிழகத்தின் குக்கிராமங்களில், திருவிழாக்களில், டீக்கடைகளில், வானொலிகளில் என எங்கு திரும்பினாலும் செவிகளில் தமிழ்ப் பாடல்கள் விழத் தொடங்கின. யாரைப் பார்த்தாலும் தமிழ்ப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இந்த மாற்றங்கள் நடந்தது 1976ம் ஆண்டு.

ஆமாம்... இன்றைக்கு ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துக்கொண்டிருக்கிறார் இளையராஜா. மேஸ்ட்ரோ, ராகதேவன், இசைஞானி என்றெல்லாம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஞானதேசிகன் என்கிற ராசய்யா, ராஜா என்றாகி பிறகு இளையராஜா என்றானது இந்த வருடத்தில்தான்.

கதாசிரியர் ஆர்.செல்வராஜ், தயாரிப்பாளரும் கதாசிரியரும் பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை அழைத்துச் சென்றார். ‘நீங்க வாசிச்சதை ரிக்கார்டு பண்ணி வைச்சிருந்தா கொடுத்துட்டுப் போங்க. கேட்டுட்டுச் சொல்றேன்’ என்றார் பஞ்சு அருணாசலம்.

‘அப்படிலாம் இல்லீங்க சார். வாசிச்சுக் காட்டட்டுமா?’ என்றார் இளையராஜா.

அப்படிச் சொன்னதும் இளையராஜாவையும் சுற்றியுள்ள இடத்தையும் பார்த்தார் பஞ்சு. ‘இன்ஸ்ட்ரூமெண்ட் எதுவும் கொண்டாந்திருக்கீங்களா?’ என்று கேட்டார்.

இல்லை என்பதுபோல் தலையசைத்தவர், ‘இதோ... இதுலயே வாசிக்கிறேன் சார்’ என்று அருகில் உள்ள மேஜைக்கு அருகே சென்றார். அதையே வாத்தியக்கருவியாக்கினார். வாசித்தார். பாடினார். பாடிக்கொண்டே வாசித்தார். பிரமித்துப் போனார் பஞ்சு அருணாசலம்.

அதன்பிறகுதான் ராஜா, இளையராஜாவானார். தன் சொந்தப்படமான ‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார்.

சிவகுமார், சுஜாதா, ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்த ‘அன்னக்கிளி’ 1976ம் ஆண்டு, மே மாதம் 14ம் தேதி வெளியானது. முதல் ஒருவாரம் படம் பெரிதாகப் போகவில்லை. ‘படம் சுமாராத்தான் இருக்கு’ என்றார்கள். ‘படத்துல ரொம்பவே சோகம்பா’ என்றார்கள். ‘சுஜாதா நடிப்பு டாப்பு. ஆனாலும் கொஞ்சம் போரடிக்குது’ என்றார்கள். ‘கிராமத்து சப்ஜெக்ட்டு’ என்றார்கள்.

இதெல்லாம் முதல் ஒருவாரத்தில். ஆனால், அதற்குள் ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள், காற்றில் கலந்தன. எங்கு பார்த்தாலும் ஒலிபரப்பப்பட்டன. ‘யோவ்... அந்த அன்னக்கிளி பாட்டைப் போடுங்கப்பா. இன்னொரு தரம் கேப்போம்’ என்று சொக்கிச் சொன்னது கூட்டம்.

‘அன்னக்கிளியே உன்னத் தேடுதே’, ‘மச்சானைப் பாத்தீங்களா?’, ’சொந்தமில்லை பந்தமில்லை’, ’சுத்தச்சம்பா பச்சை நெல்லு குத்தத்தான் வேணும்’ என்று எல்லாப் பாடல்களுமே அதிரிபுதிரி ஹிட்டடித்திருந்தன. எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் இசை பட்டம் கட்டிப் பறக்கத் தொடங்கியது.

அதே வருடத்தில், எம்ஜிஆரின் ’உழைக்கும் கரங்கள்’, ‘நீதிக்கு தலைவணங்கு’ பாடல்கள் வெற்றி பெற்றன. சிவாஜியின் ‘உத்தமன்’ பாடல்களும் எல்லோரையும் கவர்ந்தன. கமலின் ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’, ‘குமார விஜயம்’, ‘மோகம் முப்பது வருஷம்’, பாலசந்தர் இயக்கத்தில் வந்த ‘மூன்று முடிச்சு’, ‘மன்மத லீலை’, ஜெய்சங்கர் நடித்த ‘மேயர் மீனாட்சி’ என படங்களும் பாடல்களும் சக்கைப்போடு போட்டன. ஆனால், அத்தனை படங்களையும் பாடல்களையும் தாண்டி, ‘அன்னக்கிளி’ படமும் பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

‘யாருப்பா அது’ என்றார்கள். ‘இளையராஜாவாம்’ என்று பதில் சொன்னார்கள். ‘என்னா போடு போடுறான்யா’ என்று பாராட்டினார்கள்.

1976ம் வருடத்தின் மத்தியில், அதாவது மே மாதத்தில் வந்த, ‘அன்னக்கிளி’யைத் தொடர்ந்து, ‘பாலூட்டி வளர்த்த கிளி’, உறவாடும் நெஞ்சம்’, ’பத்ரகாளி’ என  இளையராஜாவுக்கு வரிசையாகப் படங்கள் வந்தன. ‘அன்னக்கிளி’ அளவுக்கு ‘பத்ரகாளி’ பாடல்கள், பட்டையைக் கிளப்பின.

ஆனாலும் ‘அன்னக்கிளி’யே முதலிடம் பிடித்தாள். இந்திப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் ஆதிக்கத்தை இழந்தன. ராஜாவின் ராஜாங்கம், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.

1976ம் ஆண்டு, மே மாதத்தில்தான் இளையராஜா, தமிழர்களுக்கும் இந்த உலகுக்கும் கிடைத்தார். கிட்டத்தட்ட 43 வருடங்களாகிவிட்டன.

’நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா’ என்று வீசிக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் கொடி!

  

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close