[X] Close

'புதியபாதை’, 'ஜென்டில்மேன்’ ரெண்டும் நான் நடிக்கவேண்டிய படங்கள்’’ - ‘ஒத்தசெருப்பு’ விழாவில் கமல் பேச்சு


  • kamadenu
  • Posted: 19 May, 2019 14:48 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

'புதிய பாதை’, ‘ஜென்டில்மேன்’ இந்த ரெண்டு படத்துலயும் நடிக்கிறதுக்கு, பார்த்திபனும் ஷங்கரும் முதல்ல என்னைத்தான் கூப்பிட்டாங்க’’ என்று ‘ஒத்தசெருப்பு’ ஆடியோ வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசினார்.

இயக்குநர் பார்த்திபன், தயாரித்து நடித்துள்ள படம் ‘ஒத்தசெருப்பு’. இந்தப் படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராம்ஜி, பாடலாசிரியராக விவேக், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி முதலானோர் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், கே.பாக்யராஜ், ஷங்கர் முதலானோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

விழாவில் கமல் பேசியதாவது:

இங்கே, ‘16 வயதினிலே’ முதல் பட அனுபவங்களை பாக்யராஜ் சொன்னார். நிறையபேர், முதல்படத்தில் என்னை அழைத்திருக்கிறார்கள். அதில் நடிக்காததற்கு ஷங்கருக்குக் கூட வருத்தம் உண்டு. ஆமாம்... ‘ஜென்டில்மேன்’ படத்தில் நடிக்கக் கேட்டு, பிரசாத் ஸ்டூடியோவில் சந்தித்துப் பேசினோம். ஆனால் அப்போது அது நடக்கவில்லை.

அதேபோல்தான் பார்த்திபனும் ‘புதியபாதை’ படத்தில் நடிப்பதற்காக என்னைத்தான் கூப்பிட்டார். அப்போது என்னிடம் தேதிகள் இல்லை. ‘ஒத்தசெருப்பு’ மாதிரி தனியொருவராக நான் நடிக்காமல், தனக்குக் கொடுத்துவிட்டதாக பார்த்திபன் சொன்னார். அதுமட்டுமல்ல... ‘புதியபாதை’யில் நான் நடிக்காமல் உங்களுக்கு நடிக்கக் கொடுத்ததையும் பெரிய சந்தோஷமாகப் பார்க்கிறேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறினார் பார்த்திபன்.

இப்படித்தான், திலீப்குமாரிடம் மிகப்பெரிய அன்பு கொண்டிருந்த குருதத், அவரிடம் ஒரு கதை சொன்னார். ‘எல்லாம் அழுகாச்சி கதையாவே இருக்கு. இதுவும் அப்படியே இருக்கு’ என்று மறுத்துவிட்டார். பிறகு குருதத்தே நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படம்தான் ‘காகஸ் கே ஃபூல்’ படம்.

முதல்படத்தில் சொன்ன அந்தப் பாட்டு பாக்யராஜுக்கு இன்னமும் மறக்கவில்லை. எனக்கும் மறக்கவில்லை. ‘16 வயதினிலே’ படத்தில் நாட்டுவைத்தியராக வருவார் பாக்யராஜ். பின்னாளில், தமிழ் சினிமாவின் நாட்டு வைத்தியராகவே ஆகிவிட்டார்.

சுனில்தத் ‘யாதே’ எனும் படத்தில் ‘ஸோலோ ஆக்ட்’ பண்ணியிருக்கிறார். ஹாலிவுட்டிலும் பலர் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் பார்த்திபனும் இடம்பிடித்துவிட்டார். அவரை வாழ்த்தவேண்டும். அப்படி வாழ்த்துவதுதான் வளர்க்கும். தன்னம்பிக்கையை விட வாழ்த்துதான் வளர்க்கும்.

தமிழ் சினிமாவில் எஸ்.பி.முத்துராமனை நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எந்த விழாவாக இருந்தாலும், எவருடைய விழாவாக இருந்தாலும் அதை தன் விழாவாக நினைத்து முன்னே நிற்பார். நல்லதாக நாலு வார்த்தை பாராட்டுவார். இந்தப் பண்பு, பார்த்திபனிடம் உண்டு. இந்த விஷயத்தில், எஸ்.பி.முத்துராமனின் வாரிசு என்று பார்த்திபனைச் சொல்லுவேன். என் விழாவுக்குக் கூட அப்படி வந்து பல விஷயங்கள் செய்திருக்கிறார் பார்த்திபன்.

இந்த ‘ஒத்தசெருப்பு’ திரைப்படம் வணிக ரீதியாகவும் பார்த்திபனுக்கு வெற்றியைத் தரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமல் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close